Last Updated : 03 May, 2016 01:10 PM

 

Published : 03 May 2016 01:10 PM
Last Updated : 03 May 2016 01:10 PM

இப்படியும் பார்க்கலாம்: நியூட்டனும்... மற்றும் எல்லோரும்

இங்கிலாந்தில் பிறந்த ஐசக் நியூட்டனின் கொள்கைகளை, கோட்டாறு ராமசாமியும் ஆத்தூர் கணேசனும் கேள்விகூடப் பட்டதில்லை. ஆனால், இம்மூவரும் ஒரு புள்ளியில் தங்கள் கருத்தில் ஒத்துப்போகிற காட்சியைப் பார்க்கலாம்.

ராமசாமி தனது 15-வது வயதில் ஆசனங்கள் செய்யத் தொடங்கினார். புவி ஈர்ப்பு சாத்தியங்களை மீறி உடலை வளைத்துக் காட்டுவார். விபரீதகரணி, சர்வாங்காசனம், பத்மாசனம் போன்ற ஆசனங்கள் செய்கிற மாதிரி ஒளிப்படம் எடுத்து வீட்டில்கூட மாட்டி வைத்திருக்கிறார். அவரது 60 வயதில்கூட அவருக்குப் பெரிய அளவில் நோய்கள் எதுவும் வந்ததில்லை. ஆனால்...

கணேசன் குன்னூருக்குப் பக்கத்தில் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்தார். ஒருநாள் மேலாளரை அணுகி, கண்ணீர் விட்டார். “இப்பதான் ஃபோன் வந்தது. ஊர்ல ஒரு மரணம். நான் போயே ஆகணும். மலையிலிருந்து இறங்கி, மேட்டுப்பாளையம் வந்து, அவினாசி போய் சேலம் பஸ் ஏறி, ஆத்தூர் வந்து… இறந்து போன ஜீவனை பார்த்து” மீதிக் கண்ணீரைத் தொடர்ந்தார். ஆனால்...

இன்பமே துன்பம்!

“ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான எதிர்வினை உண்டு” என்றார் நியூட்டன். அதாவது எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன; அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், திசையில் எதிரெதிராகவும் இருக்கும்.

அதன்படி ஒரு வினை ‘இரவு’ என்றால், அதன் இணையான மற்றும் எதிரான வினை பகலாகத்தான் இருக்க முடியும்.

இந்த முரண்பாடுகளின்படி, இந்த இடத்தில் ‘ஒரு வினை’ என்பதை நாம் முதலில் ‘துன்பமாக’ எடுத்துக் கொண்டாலும் சரிதான்; அதன் எதிர்வினை இன்பமாகத் திரும்பவும் வாய்ப்பிருக்கிறதுதான்.

ஆனால், நாம் உலகியலின்படி பார்த்தோம் என்றால் மனிதன் துன்பத்தைவிட இன்பத்தையே அதிகம் விரும்புகிறான். அவனது துன்பங்கள்கூட இன்பம் தேடும் முயற்சியில்தான் விளைகின்றன. எனவே ‘வினை’ என்பதை நேர்மறையாகவும், ‘எதிர்வினை’ என்பதை எதிர்மறையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இதன்படி ராமசாமிக்கு ஆசனங்கள் செய்வது மிகவும் விருப்பமானது என்றால், தனக்கு விருப்பமான ஆசனங்களால்தான் அவர் துன்பத்தையும் அடைய முடியும். அடையவும் செய்தார்.

முதுமை அவருடன் வாழத் தொடங்கியபோது, இளமைக்காலச் சாதனைகள் அவரைப் பார்த்து சிரிக்கத் தொடங்கின. “ஒரு காலத்துல நான் சிரசாசனம் எல்லாம் எவ்வளவு நேரம் செய்வேன்! இன்று என்னால் ஒரு டம்ளரைக்கூட கை நீட்டி வாங்க முடியலியே...” என்று அவர் நினைக்கும் நிலை வந்துவிட்டது. ராமசாமி உடலின் சாகசங்களை நேசித்தார் என்றால், 90 வயதில் முதுமை காரணமாக உடலின் செயலற்ற தன்மைதான் யூ டர்ன் அடித்து அவரை சிரமப்படுத்தும்.

கசப்பாக மாறும் சாக்லேட்

கணேசன் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணித்து படாதபாடுபட்டு வந்து ’இறந்த ஜீவனின்’ உடல் முன் நிற்கிறார், இல்லையா? அந்த உடல் இறக்காமல் இருந்திருந்தால், அது அவரைப் பார்த்து “லொள்,லொள்” எனக் குரைத்து அவரது நெஞ்சில் தன் கால் பதித்து, ஒடிந்துவிடுகிற மாதிரி வால் ஆட்டியிருக்கும். காரணம் சுலபமானது. அவர் ‘ஜிம்மியை’ நேசித்தார். அது நேர்வினை. அதன் எதிர்வினையாக அவர் துன்பத்தையும் அடைந்தே தீரவேண்டும்.

இருவருமே தங்களது விருப்பம் என்ற ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது எதிர்வினையாகத் திரும்பி அவர்களின் துன்பத்துக்கு அதுவே காரணமாக அமைகிறது. நாம் அதை நேசிக்கிறோமோ, எது நமது விருப்பமோ அதுவே நமது துன்பத்தின் ஊற்றுக்கண்ணும்கூட.

அடுத்தவர் பார்வையில் துரும்பாகக்கூட அந்த விஷயம் தெரியக்கூடும். நாம் நேசம் கொள்கிற பட்சத்தில் அந்தத் துரும்பு நமக்கு சோகம் தந்தே தீரும். அதன் துயரம் நமது துயரமாக மாறியே தீரும்.

ஆனால், அந்தத் துரும்பு நமக்கு ஏன் இவ்வளவு துயரம் தருகிறது என்று கோபிப்போமே தவிர, நாம் ஏன் இவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறோம் என்று நினைப்போமே தவிர, நமது நேசம்தான் இன்னொரு பாதையில் திரும்பிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்தே போவோம்.

நமது இனிப்பான சாக்லேட்டுகள்தான் கசப்பான மாத்திரைகளாக மாறுகின்றன; நமது விருப்பங்கள்தான் நமக்கு துயரத்தையும் தர முடியும்.

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.

எனவே நமது விருப்பம் தருகிற இன்பம்தான், நமக்குத் துன்பத்தையும் தர முடியும்.

ஆக, ஆசைகளே துன்பத்துக்குக் காரணம்

இவ்வாறாக, புத்தரோடு கோட்டாறு ராமசாமியும், ஆத்தூர் கணேசனும் ஒன்றாக இணைகிறார்கள்.

இவ்வாறாக, விஞ்ஞானி நியூட்டனும், மெய்ஞானி புத்தரும் வேறுவேறு தளங்களில் இயங்கினாலும் ஒன்றாக இணைகிறார்கள். இவர்களோடு நாம் அனைவரும் கை கோக்கிறோம்.

ஆனால், நடைமுறை வாழ்க்கையில், நாம் உலகியல் சார்ந்த இன்பங்களை வெறுத்துக்கொண்டே அன்றாடம் காலண்டரின் தேதிகளைக் கிழிக்க முடியாது. ஆசைப்படாமல் வாழ முடியாது. எனவே துன்பப்படாமலும் வாழ முடியாது. துன்பம் வரப்போவதை எண்ணி ஆசைப்படாமலும் இருக்க முடியாது.

என்ன செய்யலாம் என்றால், நாம் ஒருவரை, ஒரு கருத்தை, ஒரு பொருளை நேசிக்கிறோம் என்றால், மனதின் மெமரி கார்டில் ஒரு ஓரத்தில் பதிவு செய்தல் நலம். நமக்கு என்றாவது துன்பம் தரப்போகிற விஷயமும் இதுவே!

இதனால் துன்பம் குறையப் போவதில்லைதான், என்றாலும் எதிர்பார்த்து தயாராக இருப்பது துன்பத்தின் வீரியத்தைச் சற்றுக் குறைத்த மாதிரி இருக்கும்.

என்ன செய்ய, வாழ்வின் உயிர்ப்பும், சற்று சோகம் கலந்த கவித்துவமும் இதுவே!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x