Last Updated : 15 Mar, 2016 11:58 AM

 

Published : 15 Mar 2016 11:58 AM
Last Updated : 15 Mar 2016 11:58 AM

இப்படியும் பார்க்கலாம்: தேவையற்ற காட்சிக்குப் பின்னணி இசையா?

என்ன இருக்குது?”என்கிறீர்கள்.உடனே இட்லியில் தொடங்கி இரண்டு நிமிடம் மூச்சுவிடாமல் ஒப்பிக்கிறார் பரிமாறுபவர்.

“ஒரு ரவா தோசை”

உணவு வருவதற்குள் கயிறு தொழில் செய்யும் ராமலிங்கத்தைச் சந்திக்கலாம்.

கயிறு உற்பத்திக்குத் தேவையான நார் இன்னும் வரவில்லை; கயிறு விற்ற பணம் கைக்கு வரவில்லை; மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாள்; வேலை செய்பவர்கள் கூலி உயர்வு கேட்கிறார்கள்; மெக்கானிக் பழுதான இயந்திரத்தின் உதிரிபாகம் பெங்களூரில்தான் கிடைக்கும் என்கிறார். லாரியில் தண்ணீர் வாங்கி, சிரமப்பட்டு உழைத்தும் லாபம் குறைவாகத்தான் வருகிறது.

பழைய இரும்பு வியாபாரம், கல்வித் தந்தை ஆதல் என வேறு தொழில் சிந்தனையில் இருக்கும்போது வருகிறது அந்த அதிர்ச்சித் தகவல். தொழிற்சாலையில் எஞ்சியுள்ள நார்க் குப்பைகள் ஒரு ஓரத்தில் குவிந்திருக்கும்; அதை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் முடியாது. அந்தக் குப்பை மலை தீப் பிடித்து எரிகிறது. ஆக,மேலும் ஒரு பிரச்சினை!

நெருப்பு அருகிலுள்ள இடங்களுக்குப் பரவினால், அதற்கு நஷ்ட ஈடு; விற்பனைக்குத் தயாராக இருக்கும் கயிறுகளைப் பாதுகாத்தல் எனச் சொல்லொணாத் துயரத்துடன் ராமலிங்கம் தொழிற்சாலைக்கு விரையட்டும். இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி, இந்தப் புதிய பிரச்சினையால் ராமலிங்கத்தின் கடந்த நிமிடப் பிரச்சினைகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன.

வேற எதுவும் தெரியாதா?

திரும்பவும் ஓட்டலுக்குள் நுழைவோம். ஓட்டலுக்குச் சாப்பிடப்போனால் பெரும்பாலும் இதுதான் நடக்கிறது. “என்ன இருக்கிறது?” என்ற அலட்சியமான கேள்வியைத் தொடர்ந்து ஓட்டல்காரரிடமிருந்து இசை லயத்துடன் கிளம்பும் பட்டியலில் குறைந்தது 30 வகை உணவாவது இருக்கும். மெனு கார்டு இருந்தால் உணவுப் பட்டியல் இன்னும் நீளும்.

டி.வி.யிலும் பத்திரிகை உணவுச் சிறப்பிதழ்களிலும் கேள்விப்பட்ட உணவுகளை, இந்திப் படத் தலைப்பு போன்ற உணவுகளை, சீனாவிற்கே அழைத்துச்சென்று ட்ராகன் முன் நிறுத்தும் பெயர் கொண்ட உணவின் பெயர்களை வெறுமனே கேட்டுவிட்டுக் கடைசியில் ஆர்டர் செய்வதென்னவோ “என்னை விட்டா உனக்கு வேற எதையுமே சாப்பிடத் தெரியாதா?”என்று வாய் இருந்தால் கேலி செய்யக்கூடிய மசால் தோசையை! பரோட்டாவை!

“இந்தப் புதிய உணவைச் சாப்பிட்டுப் பார்ப்போம்” என்கிற அபூர்வமான விதிவிலக்குகளைத் தவிர்த்தால், “என்னவெல்லாம் இருக்கிறது?” என்ற கம்பீரக் கேள்விக்குப் பிறகு நிறையப் பேர் ஆர்டர் செய்வது என்னவோ பெரும்பாலும் பிறப்பிக்கு முன்பிருந்தே சாப்பிட்டுவருகிற வழக்கமான உணவைத்தான்!

இவ்வளவுதான் பிரச்சினை

பரேத்தோ (Pareto) என்கிற இத்தாலியப் பொருளாதார மேதையின் 80% : 20% கொள்கையின்படி,ஒரு நிறுவனத்தின் 80% வியாபாரம் அதன் 20 % வாடிக்கையாளர்களிடமிருந்தே வருகிறது. ஒரு நகரத்தில் 80% குற்றத்தை 20% குற்றவாளிகளே செய்கிறார்கள். ஒரு அலுவலத்தில் 80 சதவீத வேலைகள் அதன் 20% பணியாளர்களால்தான் செய்யப்படுகின்றன. உங்கள் தொலைபேசியில் எத்தனையோ பேரின் எண்கள் இருந்தாலும், அவற்றில் அதிகபட்சம் 20% பேர்களைத்தான் திரும்பத் திரும்ப அழைத்திருப்பீர்கள். வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள்.

இதன் அடிப்படையில் எது மிக முக்கியம், எது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அந்தப் பிரச்சினையின் தீர்வை எட்டி விடலாம் என்கிறார் பரேத்தோ.

இதுவரை யாருமே அதிக அளவு சாப்பிட்டிருக்காத ‘இட்லி’க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு ஓட்டலையே விலைக்கு வாங்கிய பெருமையில் உட்கார்ந்திருக்கும் நண்பரும் இந்தக் கொள்கையை மெய்ப்பிக்கிறார். அதாவது ஒரு ஓட்டலின் மொத்த உணவுகளில் 20 % உணவுகளே திரும்பத் திரும்ப ஆர்டர் செய்யப்படுகின்றன.

அதன்படி உங்களுக்கு 100 பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் நம்பினால், அதில் உண்மையான பிரச்சினைகள் 20 சதவீதம்தான் தேறும். மீதி 80 சதவீதத்தைப் பிரச்சினைகள் என்று நினைத்து உங்கள் நேரத்தையும் கவலைகளையும் வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள்!

ராமலிங்கம் இதுவரை பிரச்சினை என்று சுமந்துகொண்டிருந்தவற்றைத் தூக்கிப் போட்டு, இப்போதுதான் நிஜமான 20% பளுவுடன் ஓடுகிறார்.

பழசும் புதுசும்

நார்ப் பிரச்சினை, கூலிப் பிரச்சினை, உதிரி பாகத்திற்காக அலைதல்... எல்லாம் சேர்ந்ததுதான் கயிறு தொழில். இப்போது அவரை ஓடச் செய்துகொண்டிருப்பதும் தவிர்க்க முடியாத பிரச்சினைதான். ஆனால், அது அவரது கடந்த காலக் கவலைகளை மறக்கச் செய்துவிட்ட பிரச்சினை. எனவே, அதுதான் உண்மையான பிரச்சினை! இந்த உண்மையான பிரச்சினைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புதிய பிரச்சினை வந்ததும் மற்ற எல்லாமே சமாளிக்கக்கூடியவையாய் மாறிவிட்டன என்றால், அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்திருக்கலாம் என்றுதானே அர்த்தம்? சரி,தேவையற்ற அந்த 80 % சுமைகளையும் சுமந்துகொள்கிறோம்; அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது என்பீர்களானால், அப்புறம் என்ன நடக்கும்?

ஒரு சாதாரண விஷயத்திற்குப் பிரச்சினை என்னும் தகுதியைக் கொடுத்தவுடன் நீங்கள் பிஸியாக இருக்கிறீர்களோ இல்லையோ ஏற்கெனவே அலைபாயும் மனதை எல்லா ஷிப்ட்களிலும் வேலை செய்ய வாய்ப்புக் கொடுத்தற்கு உங்கள் மனம் உங்களுக்கு நன்றி சொல்லும்.

பின்னர் அது கால்பந்தில் செக்மேட் சொல்லும். கேரம் விளையாடி “க்ளீன் போல்ட்” என்று கத்தும். ஆடுபுலி ஆட்டத்தில் “லவ் ஆல்” என்று அலறும். இந்த விநோத ஆட்டத்தில் களைப்படைவீர்கள். உங்கள் பிசாசுகளை பிஸியாக்கிவிட்டீர்கள் என்றால், அப்புறம் உருப்படியாக ஒரு வேலையும் பார்க்க முடியாது. மனதின் தேவையற்ற வேலைகளுக்குத் தேவைப்படும் சக்தி உங்களின் ஆக்கபூர்வ சிந்தனைகளே!

பிரச்சினை மாதிரி தெரிகிற விஷயங்களையும், அன்றாட நடைமுறைச் சிக்கல்களையும் பிரச்சினை என்று குழப்பிக்கொண்டு நொந்து நூலானவர்கள் நிறைய பேர்.

இது தேவையற்ற காட்சி, இதற்கு இவ்வளவு பின்னணி இசை தேவையில்லை, டிஜிட்டல் ஒலி தேவையில்லை என்றெல்லாம் மனதிற்குத் தெரியாது. டி.வி. ஒலியைக் கூட்டிய பிறகு, அது அலறக் கூடாது என்றால் அது என்ன நியாயம்? உருப்படியான பிரச்சினை என்னென்ன உடல், மன பாதிப்புகளைத் தருமோ, அதே பாதிப்புகளைப் போலிப் பிரச்சினைகளும் தந்தே தீரும்.

பிரச்சினை மாதிரி தெரிகிற விஷயங்களிலிருந்து, உண்மையான பிரச்சினையை அடையாளம் காண்பதில்தான் உங்களின் ஆரோக்கியமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x