Published : 01 Mar 2016 11:34 AM
Last Updated : 01 Mar 2016 11:34 AM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: குழுக் கல்வியின் மாயாஜாலத்தை புரியவைத்த சாய்கீதாஞ்சலி

நாற்பது முதல் அறுபது குழந்தைகள்வரை இருக்கும் வகுப்பறைகளில் நாம் அவர்களை எப்படி அணுகுகிறோம்? “உனக்குத் தெரியுமா?”, “உனக்குப் புரிகிறதா?”, “நீ எழுதிவிட்டாயா?”, “வாயை மூடு… கவனி… யாரிடமும் பேசாதே” போன்ற கட்டளைகளால் அவர்களை தனித்தனித் தீவுகளாக்குகிறோம். சரி, அப்படி இந்த அணுகுமுறை குழந்தைகளின் தனித்தன்மைகளை வளர்த்தெடுப்பதில் பயன்தருகிறதா என்றால் இல்லை என்பதே யதார்த்தம். அதிலும், “உனக்கு புரியலைன்னா என்கிட்ட கேளு.. அங்க என்ன பேச்சு?” என்பது சர்வசாதாரணமாக வகுப்பறையில் நாம் கேட்க முடிந்த ஆசிரியர் வாசகமாய் இருக்கிறது. இது பாடப் பயிற்று முறையின் சர்வாதிகாரம்தானே!

தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கும்போது நாம் என்னவெல்லாம் செய்கிறோம்? பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவதில்லையா? விமர்சிப்பதில்லையா? நமக்கு இது உடன்பட்ட கருத்து, இது ஏற்கத்தக்கதல்ல என விவாதிப்பது இல்லையா? வாய்விட்டுச் சிரிப்பதில்லையா? இரண்டு பேர் நாலு பேர் கூடும் இடமே இப்படி என்றால் நாற்பது அறுபது பேர் கூடும் பள்ளிக்கூட வகுப்பறை ஏன் கப்சிப் தர்பாராக இருக்க வேண்டும்?

தொலைக்காட்சியையாவது நீங்கள் விரும்பினால் நிறுத்திவிடலாம். சானல்களை மாற்றலாம். எழுந்து சென்று தண்ணீர் அருந்திவிட்டு வரலாம். ஆடிக்கொண்டே பார்க்கலாம். இடத்தை மாற்றி உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால் வகுப்பறையை நினைத்துப்பாருங்கள். ஒரு வருடம் முழுவதும் ஒரு குழந்தை ஒரே வகுப்பிற்கு வந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. வருடம் முழுதும் ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு ஒரே ஆசிரியரை தினந்தோறும் ஒரே போஸில் உட்கார்ந்து கவனிக்கிறது. வாட்ச் கட்டக் கூடாது; கட்டியிருந்தால் மணி பார்க்கக் கூடாது. அமைதி! அமைதி! ஆனால் தூங்கவே கூடாது! சுறுசுறுப்பின் உச்சகட்ட வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட வகுப்பறை எவ்வளவு பெரிய சித்ரவதையாக இருக்கும்? இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என எனக்குக் காட்டியவர் மாணவி சாய்கீதாஞ்சலி.

புதிய அணுகுமுறை

வகுப்பறையில் குழந்தைகளைச் சிறிய குழுக்களாகப் பிரித்து பாடங்களை விவாதித்து ஏற்கும் குழுக் கற்றல் (Group study) எனும் புதிய அணுகுமுறையை அறிமுகம் செய்தவர் ஜெர்மன் தேசத்தின் கல்வி உளவியலாளர் கர்ட் லெவின் (Kurt Lewin). பள்ளி வயதுக் குழந்தைகளை அவர் கூட்டமாய் வாழும் வயதினர் (Gang Age) என்று அறிவித்தார். தனிநபர்களாக அவர்களை அணுகுவது இயல்புக்கு எதிரானது.

தானாகவே அவரவர் விருப்பத்துக்கு ஏற்பக் குழுக்களாகப் பிரிந்து சுதந்திரமாக வகுப்பறையில் இடம் மாற அவர்களை அனுமதிக்க வேண்டும். இப்படித்தான் கற்றல் செயல்பாடு தொடங்குகிறது என்கிறார். அவரது கல்விமுறை கூட்டிணைவுக் கற்றல் (Co operative Learning) என்று அழைக்கப்படுகிறது.

ஹிட்லரின் கொலைவெறி யூத மரண முகாம்களில் தனது முழுக் குடும்பத்தையும் பறிகொடுத்தவர் கர்ட் லெவின். பின்னர் உயிர் தப்பி இங்கிலாந்தின் அகதி முகாம்கள் உட்பட 7 நாடுகள் வழியே அமெரிக்கா சென்றடைந்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் அவரது கூட்டிணைவுக் கற்றல் முறை கல்வியில் ஒரு அங்கமாக அறிமுகமாகி வெற்றி கண்டது. லெவினின் வகுப்பறைகள் வட்டமான வடிவம் கொண்டவை. மாணவர்களில் ஒருவராக வட்டத்தில் அமரும் ஆசிரியர் ஒரு பாடப்பொருளைக் குறித்துக் கருத்துப் பரிமாற அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவார்.

வகுப்பறையில் பத்தோடு பதினொன்றாக மாணவர்கள் தங்களை உணர்வதைவிட குழுவின் அங்கமாக உணரும்போது கற்றல் பொறுப்புணர்ச்சியோடு நடைபெறுகிறது. அதிலும் குழு நோக்கத்தோடு செயல்படும்போது அது மேலும் கூர்மை அடைந்து குழு என்ற நிலையிலிருந்து அணியாக (Team) மாறுகிறது என்றார் லெவின். குழுத் தலைமையின் பண்பு நலனைக் கணக்கிட ஒரு சமன்பாட்டையும் முன்மொழிந்தார்.

இன்றைய தனியார் நிறுவனங்களும் அரசுத் துறைகளும்கூடக் குழுவாக வேலை பார்ப்பதைப் பணிமுறையாக மாற்றியுள்ளன. ஆனால் நமது பள்ளிக் குழந்தைகள் குழு கற்றல் முறையைப் பின்பற்ற வகுப்பறைகளோ வீடுகளோ பொதுவாக அனுமதிப்பதில்லை. இப்படி வகுப்பறை பிடிவாதமாகத் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது முறையல்ல என்பது கல்வியாளர்களின் கருத்து. நம் கல்வியில் குழுக் கற்றல் முறையின் சாத்தியங்களை எனக்குப் புரிய வைத்தவர்தான் மாணவி சாய்கீதாஞ்சலி.

ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்த்த மாணவி

தலைமை ஆசிரியர் பணியில் நான் சேர்ந்த ஆரம்ப வருடத்தில் பத்தாம் வகுப்பு மாணவியாக அறிமுகம் ஆனவர் சாய்கீதாஞ்சலி. அவரது வகுப்பில் அந்த ஆண்டு சமூக-அறிவியல் பாட ஆசிரியை திருமணமாகி திடீரெனப் பள்ளியை விட்டுச் சென்றுவிட்டார். புதிய ஆசிரியரை நியமிக்க முடியாமல் நான் திணறிக்கொண்டிருந்தேன். பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தன.

நமக்குத் தெரிந்தவரையிலும் நடத்துவோம் என அந்த வகுப்பிற்கு நடந்தேன். அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மாணவ மாணவிகள் வட்டம் வட்டமாகக் குழுக்களாக உட்கார்ந்து ஒருவருக்கு ஒருவர் ஒப்பிப்பது, விவாதிப்பது, கலந்துரையாடிப் பாடத்தைப் பகிர்வது எனப் பரபரப்பு. நான் வந்ததைக்கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பிறகு விசாரித்தபோது தெரிந்தது, மாணவி சாய்கீதாஞ்சலியே அதற்குக் காரணம். அவர் வகுப்பில் பேசி, குழுப் படிப்பை முன்னின்று ஏற்பாடு செய்துள்ளார். ஆசிரியர் இல்லாமலும் கற்றல் தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒவ்வொரு குழுவும் கேள்வித்தாளைத் தாங்களே தயாரித்துக்கொண்டு அதைப் பகிர்ந்து படித்தல், ஒரு பாடப்பகுதியைத் தீவிரமாய் விவாதித்து அறிந்து, அதை ஏனைய குழுக்களோடு பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுதல் எனத் தொடர்ந்தது.

பிறகு நடந்ததுதான் என் மனதை நெகிழ வைத்தது. வாசிப்பில் பின்தங்கியவர்கள் எனப் பெயரெடுத்தவர்களைப் பிரித்து நன்றாகப் படிக்கும் குழந்தைகள் தங்கள் குழுக்களில் ஒருவராக அரவணைத்து, நான் அதுவரை கேள்விப்படாத மாயாஜாலத்தை நிகழ்த்தியிருந்தார்கள். கல்வி மட்டுமல்ல, உணவிலிருந்து கற்றல் உபகரணங்கள் வரை குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு வகுப்பறை இறுக்கத்தையே காணாமல் போக வைத்திருந்தார்கள். ஆசிரியரே இல்லாத அந்த ஆண்டு பொதுத்தேர்வில் அனைவருமே சிறப்பான மதிப்பெண்ணுடன் அப்பாடத்தில் தேர்ச்சி பெற்று குழுக் கற்றல் முறையின் வெற்றியை பறைசாற்றினர்.

இந்த அற்புதத்தை நிகழ்த்திய சாய்கீதாஞ்சலி வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்று சென்னைப் பெருவெள்ளத்தின் அடையாளமாகிய (முதலமைச்சரின் பெட் புராஜக்ட் எனப் பெயர்பெற்ற) தமிழக நடமாடும் மருத்துவ ஊர்திகளின் பொறுப்பாளராக இப்போது பணியாற்றிவருகிறார்.

கர்ட் லெவின்



- தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x