Last Updated : 02 Feb, 2016 11:40 AM

 

Published : 02 Feb 2016 11:40 AM
Last Updated : 02 Feb 2016 11:40 AM

இப்படியும் பார்க்கலாம்: உங்க கன்னத்திலே சிரிக்கிற தசை இருக்கா?

நீங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர் தானா என்பதைக் கண்டுபிடிக்கச் சுலபமான ஒரு வழி இருக்கிறது.

ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு, “என்னடா இது பிழைப்பு?” என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறதா? உழைத்து, அலுப்புடன் வீடு திரும்பும் நேரங்களில் எப்போதாவது, என்றாவது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு எங்காவது ஓட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக, நீங்கள் பூமிக்காரர்தான்!

“இனிப்பு, புளிப்பு ஆகாது, எண்ணெய் அயிட்டங்களை மறந்துவிட வேண்டும்.”

“பிறகு?” என்றார் முதியவர்.

“உப்பு இல்லாத கஞ்சிதான்”

“சத்தமாப் பேசுங்க, அவருக்கு காது இப்ப சரியா கேக்கறதில்ல...” என்றார் பாட்டி. அவருக்கும் கண்ணில் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது.

இது போன்ற முதியவர்களால் இப்போது என்ன செய்ய முடியும்? நான் மூலையில் கிடக்கும் சுவாசிக்கும் பொருள்; யாரும் கவனிப்பதில்லை; யாராவது சிக்கினால், “1950-ல மழை” என்ற பழங்கதைப் பொழுதுகள்! தாத்தா வாழ்க்கையில் தாத்தாத்தனமான பிரச்சினைகளுடன் நாட்கள் ஆமை வேகத்தில் நகர்கையில் கண்டிப்பாகத் தோன்றும் “வாழ்க்கை ஏன் இவ்வளவு சலிப்பாக இருக்கிறது?”

80 வயதில் கல்யாணம்

“பெண்ணைக் கூப்பிடுங்க, மாப்பிள்ளை எவ்வளவு நேரம்தான் காத்திருக்கறது?”

“மாப்ள, பொண்ணை நல்லாப் பாத்துக்குங்க. பிடிக்கலைன்னா இப்பவே சொல்லிருங்க...”

“உங்களுக்கு இந்தப் பொண்ணே ரொம்ப அதிகம்” என்கிறார்கள் பெண் வீட்டார். “இப்ப என்னால தப்பிச்சுக்கூட ஓட முடியாதே” என்கிறார் மணமகன்.

கல்யாணச் சடங்குகளுக்கு மத்தியில், சிறு வயதுப் பெண்களும் பையன்களும் செல்லில் படம் பிடிக்க, உறவுகள் சூழ, மணமகன் மணமகளைக் கரம் பற்ற அங்கே பெய்கிற சிரிப்பு மழையில் மகிழ்ச்சி அணையின் மட்டம் உயர்கிறது.

அடுத்த கணம், மணமக்களின் கால்களில் விழுந்து எல்லோரும் ஆசி பெறுகிறார்கள்!

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனென்றால் இடம் திருக்கடையூர்; ‘எனக்கு 80 உனக்கு 78’ என்ற நிலையில் உள்ளவர்கள் மணமக்கள்.

முதல் கல்யாணத்தை நினைத்தவாறு மணமக்கள் சந்தோஷமாய் ஆசி வழங்குவதைப் பார்க்கையில் ஒரு விஷயம் புரிகிறது, இந்த விழாவுக்குப் பின்னால் உள்ள மதம் சார்ந்த கதைகளை விடுங்கள். இதனை அறிமுகம் செய்தவர் முதியவர்களின் ஏறக்குறைய இறுதி நாட்களிலும்கூட “உங்களை யாரும் புறக்கணிக்கவில்லை” என்பதைச் சொல்ல விரும்பியிருக்கிறார். அவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து இந்த வயதிலும் அவர்கள் கதாநாயகனாக, கதாநாயகியாக உணரும் நிகழ்ச்சி ஒன்று தேவை என்பதை உணர்ந்த மகத்தான உளவியல் அறிஞராகத்தான் அவர் இருக்க வேண்டும்!

அந்த அனுபவசாலி முதிய வயதிலும் ஒருவரின் வாழ்க்கை போரடிக்காமல் இருக்க இப்படி ஒரு விழாவை எடுக்கிறார் என்றால், வாழ்க்கை என்பது சலிப்பூட்டவும் செய்யும் என்பதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

சும்மா வராது சலிப்பு

வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்றால், அதன் உட்கூறுகளான படிப்பு, தொழில், பொழுதுபோக்கு, வேடிக்கை பார்த்தல், சும்மா இருத்தல் என இவற்றில் ஏதோ ஒன்று உங்களின் உற்சாகத்தை உறிஞ்சுகிறது என்றுதான் அர்த்தம்.

காய்கறி விற்றல், கவிதை எழுதுதல், விண்மீன் ஆராய்தல், ஆசி வழங்குதல், விளையாடுதல், வெறுமனே கையெழுத்திடல் என எந்த வேலையாகட்டும்; அது மிகவும் பிடித்தமான செயலாகக்கூட இருக்கட்டும். ஏதாவது ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் அந்த வேலையை நேசித்துவிட்டீர்கள்! எங்கு நேசம் இருக்கிறதோ, அங்கே சலிப்பு ஏற்பட்டே தீரும். முன்பின் தெரியாதவரிடம் ஏன் கோபம் வரப்போகிறது?

கணவன், மனைவியிடம் ஏற்படும் சின்னச்சின்ன சண்டைகள் அவர்களிடையே உள்ள நெருக்கமான உறவால் ஏற்படுபவை. சொல்லப்போனால் அதுதான் அடுத்த கட்ட அன்புக்கு அவர்களை நகர்த்துகிறது. பக்தன் கடவுளைத் திட்டுவது பகைமையினால் அல்ல. மனம் கடந்த உணர்வினால்! அதுதான் அவனை ஆன்மிகத்தில் உயர்த்துகிறது.

யாரோ ஒருசில ஞானிகளையும், சிரிப்பை உருவாக்கும் தசைகளில் நோய் கண்டவர்களையும் தவிர ஏனையோரால் 24 மணி நேரமும் புன்னகையைத் தங்கு தடையில்லாமல் வழங்கிக்கொண்டே இருக்க முடியாது. வெளிஉலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் சலிப்பு ஏற்படுவது இயற்கையானது.

பிரியமானது எதுவாக இருந்தாலும், நேசம் குறைதல் - நேசமற்ற நிலை எனப் பரிணாம வளர்ச்சி பெற்று ‘நேசம்’ என்று மீண்டும் அடுத்த சுழற்சியைத் தொடங்கும்.

முதல் நாள் இன்று

ஆனால், “வாழ்க்கை போரடிக்கத்தான் செய்யும்” என்று அதிக நேரம் அதில் ஆழ்ந்துவிடாமல், சலிப்பிலிருந்து விரைவில் விடுபடுகிறவர் எப்போதும் ஒரு அடி முன்னால் செல்கிறார்.

இந்தச் சலிப்பை வெற்றிகொள்ள இரண்டு வழிகள்:

ஒன்று, அனுபவப்பட்ட விளையாட்டு வீரர்களும், புகழ்பெற்ற சினிமாக்காரர்களும் சொல்வார்களே, அதுதான். “முதன்முதலாக நுழையும்போது எப்படி நுழைந்தேனோ அதே மனநிலையுடன் ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைப்பேன்! இன்றுதான் முதல் நாள் என்று நினைத்துக்கொள்வேன்...”

இங்கே தொழில் மீதான பக்தியைவிட, அவர்களை அறியாமல் அவர்கள் தவிர்க்க விரும்புவது அல்லது வெற்றி கொள்ள விரும்புவது, ஒரே மாதிரியான வாழ்க்கை தரும் சலிப்பைத்தான்!

நாமும் நம் வாழ்க்கை மீது அந்த முதல் பார்வையைப் பார்க்கலாம்!

பொழுதுபோக்கு என்னும் சிகிச்சை

இரண்டாவது, பொழுதுபோக்குகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடலாம். முதியவர்களையே விழாவில் ஈடுபட வைத்து போரடிக்காமல் பார்த்துக்கொண்ட சமூகம் அல்லவா நம்முடையது!

ஜனவரியில் பொங்கலுக்கு வெள்ளையடித்து, ஜல்லிக்கட்டு, கரும்பு பற்றி ஸ்டேட்டஸ் போட்டு நிமிர்ந்தால், பிப்ரவரியில் காதலர் தினம், மார்ச்சில் மகளிர் தினம், ஏப்ரல் கோடைச் சுற்றுலா விழா, செப்டம்பரில் மழைக்குக் குடை விழா, டிசம்பரில் ஸ்வெட்டர் விழா என ஒரு சுற்று முடிகிறது.

நடுநடுவே அவரவர் மதம் சார்ந்த குறும்பண்டிகைகள், மெகா பண்டிகைகள், ஒன்று விட்ட சித்தப்பா தினம், பிறந்தநாள், காதுகுத்து… “இப்பதானே கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்தோம்; அதுக்குள்ளயா?” என்று சலிக்காமல், இந்த அனுபவங்கள் தரும் மாற்றங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொள்பவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள்.

“பணமும் நேரமும் வேஸ்ட்” என்று சிலர் சொல்வார்கள். ஆனால், எளிமையான மனதுடன் “பங்குனி உத்தரத்துக்குக் குலதெய்வம் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்” என்று ஒருவர் நீட்டும் பிரசாதம் மட்டுமே உங்களுக்குத் தெரியும். ஆனால், செக்குமாட்டு வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி, அடைந்திருக்கும் புதிய உற்சாகம் அவருக்கு மட்டுமே தெரியும்!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x