Published : 03 Nov 2015 11:56 AM
Last Updated : 03 Nov 2015 11:56 AM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: சுதந்திரச் சிந்தனையாளன் சாக்ரடீஸ்

ஒரு குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது என்கிற அனுமானத்தில் வகுப்புகள் நடப்பதில் நியாயம் கிடையாது. அது ஏற்கெனவே (வீட்டில்) நிறைய கற்றுக்கொண்டுவருகிறது. அது கற்றுக்கொண்டதை பள்ளிக்கூடத்தின் பாடப்பொருளோடு இணைக்கத்தான் கல்வி.

- முனைவர் கிருஷ்ணகுமார் (முன்னாள் இயக்குநர் NCERT)

தகவல்களின் கல்வி

தகவல்களைச் சேகரிப்பதையே நம்பி செயல்படுகிறது நமது கல்வி. இந்த 21-ம் நூற்றாண்டிலும் இது தொடர்கிறது. ஒரு நிபுணர் குழுவால் முக்கியம் எனக் கருதப்பட்ட தகவல்களின் திரட்டுதான் பாடப் புத்தகங்களில் அச்சாகியுள்ளது. அது கேள்வி- பதில்களாகக் கூறுபோடப்பட்டுள்ளது. அத்தகைய தகவல்களின் திரட்டில் போலியான ஒரு வல்லமையைப் பெறுவதைத்தான் கல்வி என்கிறோம். அதனை அறிவு என்றும் நாம் அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

பள்ளிக்கு வரும் ஒரு குழந்தை எதுவுமே அறியாதது என்றுதான் நம் கல்விமுறை அவர்களைப் பற்றி நினைக்கிறது. குழந்தை எனும் வெள்ளை பேப்பரைத் தகவல்களால் நிரப்புவதுதான் பாடம்! அறிவியல், சமூக அறிவியல், கணக்கு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பாடங்கள் இயங்குகின்றன. இந்த அணுகுமுறை தவறானது என எனக்கு உணர்த்திய மாணவர் சாக்ரடீஸ்.

ஒருவழிப் பாதை

நமது கல்விக்கூடங்களில் மாணவர்களது பங்களிப்பு என்ன? அவர்கள் பங்களிப்பு எதையும் செய்வதற்குப் பள்ளிக்கு வந்தவர்கள் அல்ல என்பதே நமது அணுகுமுறை. மாணவர்கள் பெற வந்தவர்களாகவே நடத்தப்படுகிறார்கள். பங்களிப்பைத் தர வந்தவர் ஆசிரியர் மட்டுமே. கல்வி என்பது ஒருவழிப் பாதையில் பயணமா? ஆசிரியரின் கவனிப்பையும் அன்பையும் ஆதரவையும் பெறும் சில மாணவர்களே வகுப்பறையில் முழுமை பெற்றவர்களாக இருப்பார்கள். இத்தகைய கல்விமுறை சராசரிகளாக உள்ள பெரும்பான்மைக் குழந்தைகளை ‘முட்டாள்கள்’ எனத் தூக்கி எறிகிறது. முரட்டுத்தனமாக உள்ள நமது கல்விமுறையில் இந்தத் தரம் பிரித்தல் ‘தானாக’ நடந்துவிடுகிறது. இதனாலேயே பெரும்பான்மையான குழந்தைகள் பள்ளியை வெறுக்கிறார்கள். சிறுமழைத் தூறல் விழுந்தால் போதும். வானிலையின் ‘தட்பவெப்பம்’ பற்றி அறிவிக்கும் ரமணன் சாரின் கருணைக்காக ஏங்குகிறார்கள். “ஹாய்.. இன்னக்கி ஸ்கூல் லீவ்வு…..” என்று சந்தோஷத்தில் குதிக்கிறார்கள்.

கூகுள் கல்வி

ஆனால், இப்படிப்பட்ட ‘தகவல் அறிவைப்’ பெற இன்று ஒரு குழந்தை பள்ளிக்கு வரத் தேவை இல்லை என்கிறார் சிலே நாட்டின் கல்வியாளர் இயான் கில்பர்ட் (Ian Gilbert). அவர் எழுதியுள்ள புதிய நூலின் தலைப்பே நம்மைத் திகைக்கவைக்கிறது. கூகுள் இருக்கும்போது எனக்கு ஆசிரியர் எதற்கு (Why do I need a teacher when I have got google) என்பதுதான் அந்தத் தலைப்பு. உண்மைதான். இன்று இணையம் முழுவதும் தகவல் அறிவு கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் உள்ள செல்போனில் விதவிதமான கருவிகள். நானோ தொழில் நுட்பத்தின் சாதனை. சொல்அகராதி முதல் தகவல் களஞ்சியம் வரை கூகுளில் இல்லாதது உண்டா என்பதே இயான் கில்பர்ட்டின் கேள்வி.

- இயான் கில்பர்ட்

ஒரு குழந்தையைவிடத் திறமையோடு யாராவது செல்போனைக் கையாள முடியுமா என்ன? குழந்தை ஏதாவது செய்முறை கையேட்டை வாசித்ததா என்ன? அதை வாசிக்காமலே குழந்தைகள் எத்தகைய எலக்ட்ரானிக் சாதனத்தையும் பெரியவர்களைவிட இலகுவாகவும் நுணுக்கமாகவும் கையாள வேகமாகக் கற்றுக்கொள்கின்றன. இன்றைய சூழலில் தகவல்அறிவை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பெற்றுவிடலாம். அதற்குப் பள்ளி தேவையில்லை என்பது இயான் கில்பர்ட்டின் வாதம். சொல்லப்போனால் வெளியில் நம்முன் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அறிவோடு ஒப்பிட்டால் பள்ளியின் பாட அறிவில் ஒருவகை போதாமையை உணர முடியும் எனக் குற்றம் சாட்டும் இயான் அதற்கு மாற்றாக சுதந்திரமான சிந்தனை முறை (Independent thinking) என்பதை முன்மொழிகிறார்.

சுதந்திரச் சிந்தனை

ஒவ்வொரு குழந்தையும் தனது வளர்சூழலிலிருந்து ஒரு தன்னார்வ அறிவைப் பெற்று வந்துள்ளது. அதை மதித்துப் போற்ற வேண்டும் என்பதுதான் இயான் கில்பர்ட் காட்டும் கல்வி. சுதந்திரமான சிந்தனை முறைப்படி குழந்தை பெற்று வந்துள்ள அறிவை அதேபோல கிடைத்த மற்ற குழந்தைகளின் அறிவு நிலையோடு பகிர்ந்துகொள்ள பள்ளி தேவை. அதனை ஆசிரியர் ஊக்குவித்துத் தனது அறிவை மேலும் ஊக்கம்பெற வைத்து இணைக்கலாம். இதனை ‘கல்வியின் கவுரவம்’ என அவர் அழைக்கிறார். ‘நீயா, நானா?’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்வதுபோல அனைவருக்கும் தங்களின் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள சம வாய்ப்புகளை ஒரு ஆசிரியர் வழங்கினால் போதும்.

நமது கல்விமுறையிலோ மாணவர்களின் குரல்களுக்கு வாய்ப்பே இல்லை. மாணவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களுக்கு எல்லாவற்றையும் தெரியவைப்பது ஆசிரியர் வேலை என நினைக்கிறோம். இது தவறான அணுகுமுறை என எனக்கு காட்டியவர்தான் சாக்ரடீஸ்.

நான் இதற்குமுன் வேலைபார்த்த அரசு உதவிபெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவராக சாக்ரடீஸ் அறிமுகம் ஆனார். வகுப்பில் கடைசி வரிசை மாணவர்களில் அவரும் ஒருவர்.

அவருக்கு எல்லாப் பாடமும் அருமையாக வரும். ஆங்கிலப் பாடம் மட்டும் திணறுவார். இது குழந்தைகளின் இயல்பு. அயல்மொழி எல்லோருக்கும் வசப்படுவதில்லை. அவருக்கு ‘‘இங்கிலீஸ்காரன்’ என பட்டப்பெயர். ஆசிரியர்கள் கூட அப்படிக் கேலி செய்வார்கள். நான் கூட சில நேரம் அத்தகைய கிண்டல் கோஷ்டியில் கூட்டத்தோடு கூட்டமாக ‘கோவிந்தா’ போட்டிருக்கிறேன். இதுபற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். ஆனால், எங்களது இந்த கிண்டல் கேலிகளை எல்லாம் தவிடுபொடியாக்கித் தனது முக்கியத்துவத்தை சாக்ரடீஸ் ஒரு நாளில் உணர்த்தினார்.

எங்களின் பள்ளியைச் சுற்றி செடியும் கொடியும் புதராய் மண்டிக்கிடந்தது. பள்ளியின் தேசிய மாணவர் படையின் மாணவர்கள் ஒரு நாள் அதை சுத்தம் செய்தார்கள். மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கிய வேலை திடீர் அதிர்ச்சியில் முடிந்தது. ஒரு 11- ம் வகுப்பு மாணவரைத் தூக்கிக்கொண்டு வந்து “பாம்பு கடிச்சிடுச்சு” என வந்தார்கள். கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்திய பயத்திலேயே அவர் மயக்கமாகி விட்டார். “கர்சீப் கட்ட வேண்டும்” “காயத்தில் வாய் வைத்து உறிஞ்ச வேண்டும்” என்று பல யோசனைகளின் குரல்கள். ஆனால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் வேலை யாட்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. கடித்த பாம்பை மட்டும் அடித்துவிட்டார்கள்.

பாம்புக்கடி கல்வி

அந்த இக்கட்டான நேரத்தில் எங்கிருந்தோ ஓடி வந்தார் சாக்ரடீஸ். “பாம்பு கொத்திச்சா...” என அவர் கத்தியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. “சார் வாங்க” என்று என்னை அவர் அவசரமாக அழைத்தார். ‘‘எங்கே செத்த பாம்பு?” என்று அதை ஒரு பையில் போட்டார். பாம்புக்கடி வாங்கிய மாணவரை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் பறந்தோம். “கவர்மெண்ட் ஆஸ்பத்திரி போங்க” என அலறினார் சாக்ரடீஸ். “வேற எங்கயும் போகாதீங்க” என்றார். அங்கே போய் ‘பாம்பு விஷ முறிவு சிகிச்சைப் பிரிவு’ எனும் பலகை மாட்டி இருந்த இடத்துக்கும் எங்களுக்குச் சரியாக வழிகாட்டினார். தூக்கி வந்த மாணவரை வார்டில் சேர்த்தார். டாக்டரிடம் ‘‘கட்டுவிரியன் பாம்பு சார். முட்டிக்கு கீழே கொத்தியிருக்கு” என்று சரியாக விளக்கினார். “பாம்பைப் பார்த்தியா’’ என்று கேட்ட டாக்டரிடம் “இதோ” என்று பையைத் தூக்கிக்காட்டினார்.

பாம்பு கொத்திய அந்த மாணவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் குணமடைந்தார். எனது பள்ளிக்கு சாக்ரடீஸ் எவ்வளவு முக்கியமானவர் என்பதை நான் உணர்ந்தேன். “பாம்பு விஷத்துக்கான சரியான சிகிச்சை எந்தத் தனியார் மருத்துவமனையிலும் கிடையாது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உண்டு. கிராம சுகாதார நிலையங்களில் பாம்பு விஷ முறிவுப் பிரிவு உண்டு” என சாக்ரடீஸ் அடுக்கிக்கொண்டே போனார். ‘எதுவும் தெரியாத மாணவர்களைப் போல’ ஆசிரியர்களை அன்று சாக்ரடீஸ் உணர வைத்துவிட்டார்.

சாக்ரடீஸின் தாய் அதே மருத்துவ மனையில் தலைமை நர்ஸாக இருந்தார். அதனால் சிறு வயதிலிருந்தே சாக்ரடீஸ் திரட்டிய அறிவு அன்று பள்ளியில் ஒரு உயிரையே காப்பாற்றியது. இதுவே ‘சுதந்திரமான சிந்தனை முறை’ என எனக்கு சாக்ரடீஸ் காட்டினார். அவர் இன்று ‘108 ஆம்புலன்ஸ்’ நிர்வாகத்தில் ஒரு அதிகாரியாக விழுப்புரத்தில் பணிசெய்கிறார். உயிர் காக்கும் தோழனாகவே அவர் பணி தொடர்கிறது.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x