Published : 01 Sep 2015 12:26 PM
Last Updated : 01 Sep 2015 12:26 PM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: விடைத்தாள் எனும் போதிமரம்

யார் சரியான ஆசிரியர்? ஒரு கட்டத்தில் தான் இருப்பதன் தேவையே உணராமல் மாணவர்களை தாங்களாகவே வெற்றியடைய வைப்பவர்தான்.

- எட்கர் பிரைடன்பர்க்

பள்ளி ஆசிரியராக ஆனதற்காக ‘நண்பன்’ படத்தைப் பார்த்ததும் ஒரு கணம் வெட்கப்பட்டேன். இந்தியாவில் இதுபோல வேறு சில படங்களும் கல்வி முறை பற்றிய மாற்றுப் பார்வையைத் தரவே செய்தன. அவற்றில் மாற்றத்தின் சக்தியாக ஒரு ஆசிரியர் இருந்தார். ஆனால் ‘நண்பன்’ அப்படியல்ல.

நான்கு கருத்துகள்

கல்விமுறை பற்றி நான்கு கருத்துகளை அந்தப்படம் முன்வைத்தது.

கல்வி நிலையங்கள் சிறைச் சாலைகள். கல்விக்கூடத்தின் தலைமையாக உள்ள ஆசிரியர்கள் சிறையின் தலைமைக்காவலர் போன்றவர்கள். ஆசிரியர்கள் ‘படித்த’ அறிவற்றவர்கள். பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக விரும்பாத துறைகளில் திறமைகளை வீணாக்கும் மாணவர்கள். இவையே அந்த நான்கு.

ஆசிரியர் வில்லனா?

சந்தை என்னும் பூதாகரமான அமைப்போடு இந்த கல்வி இணைக்கப்பட்டு, மாணவர்கள் விற்பனைப் பொருளாகி இருப்பதை சில படங்கள் கவனிக்கவில்லை. இன்றைய கல்விமுறையின் வில்லனா ஆசிரியர்? திறன்மிக்கவர், திறனற்றவர் என மாணவர்களைப் பிரித்து கல்வியைக் குலைக்கும் முறை அல்லவா உண்மையான வில்லன்?

சோதனையான, அந்தக் காலகட்டத்தைக் கடந்து என்னை நம்பிக்கையுள்ள ஆசிரியனாக ஆக்கியவர்தான் மேரி.

மேல்நிலை முதலாம் ஆண்டில் ஆங்கிலம் இரண்டாம் தாள் பாடத்தின் விடைத்தாட்களை திருத்தியபோது எனக்கு ஞானம் பிறந்தது.

தேர்வுகள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை எனக்கு. இரண்டாம்தாள் ஆங்கிலத்தில் பொதுக்கட்டுரை பகுதி ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் பெரும்பாலும் ஏதாவது சுயமாக எழுதக் கிடைக்கும் வாய்ப்பு இது என தோன்றும்.

மேரி எழுதிய கட்டுரை

ஒரு கேள்வித்தாளில் ‘மூன்று தலைப்பில் ஒன்றை எடுத்து கட்டுரையாக்க வேண்டும், என கேட்கப்பட்டிருந்தது. நாளைய அறிவியல் , என் ஆசிரியர், பெண்கல்வி ஆகியவை தலைப்புகளாக கொடுக்கப்பட்ருந்தன. பெரும்பாலும் அறிவியல் பற்றியே மாணவர்கள் எழுதுவார்கள். சில மாணவிகள் பெண்கல்வி பற்றியும் எழுதி இருந்தனர். யாருமே ‘என் ஆசிரியர்’ தலைப்பை எடுத்து எழுதவில்லை. ஏன் இப்படி என்று ஆதங்கப்பட்டபோதுதான் மேரியின் விடைத்தாள் எனக்கு ஆறுதலாக அமைந்தது.

‘மற்ற எல்லாப் பணிகளிலும் நீங்கள் வேலையை அளக்க முடியும். ஒரு தையல்காரரின் பணியை அவர் எத்தனை சட்டைகளைத் தைத்து இருக்கிறார் என்று அளவிடலாம். ஒரு மருத்துவர் எத்தனை பேருக்கு என்ன மாதிரி சிகிச்சை அளித்தார் என அளந்துவிடலாம். ஆனால், ஒரு ஆசிரியர் பணியை எதை வைத்து அளந்தறிவது..? என முன்னுரையில் கேள்வி எழுப்பி இருந்தார் மேரி.

நான் அசந்து போனேன். மேரி மேலும் முன்னேறினார். ‘கொஞ்சம் நுணுக்கமாக ஆராய்ந்தால் என் ஆசிரியர் மந்திர சக்திமிக்க மாமனிதர் என்பதை உணரலாம்’ஒரு டி.வியோ, ஐ-பாட்டோ, வீடியோவோ இல்லாமல் ஐந்து நிமிடம்கூட எங்கள் பெற்றோரால் எங்களை ஒரு இடத்தில் உட்காரவைக்க முடியாது. ஆனால், நாள் முழுதும் எங்கள் முழுகவனத்தையும் ஈர்க்கும் அபாரசக்தி எங்கள் ஆசிரியருக்கு உண்டு.

l விடைகளை மட்டுமே படிக்கவைப்பவர் என்று நினைத்துவிட வேண்டாம் எங்கள் ஆசிரியர் எங்களை கேள்விகள் கேட்கப் பழக்குபவர்.

l நாங்களே நம்பமுடியாத அளவுக்கு எங்களை உழைக்கவைத்து ஒரு 60 சதவீத மதிப்பெண் வெற்றியைக் கூட ஒலிம்பிக் பதக்கமாக, சாதனையாக கருதவைத்து நம்பிக்கை வளர்ப்பவர் எங்கள் ஆசிரியர்.

l இன்று கால்குலேட்டரே எல்லாம் என்று ஆன பிறகும் எங்களை விரலையும், மனதையும் பயன்படுத்தி பெரிய பெரிய கணக்குகளை கணக்கிடவைக்கும் மாயசக்தி அவரிடமே உள்ளது.

l எதற்கெடுத்தாலும் பாகுபாடு பார்க்கும் இந்த சமூகத்தில், கற்றல் எனும் ஒளி விளக்கின் முன் எங்கள் எல்லாரையும் சாதி, மதம், மொழி, ஆண்-பெண் பாகுபாடு இன்றி நடத்துபவர் எங்கள் ஆசிரியர்.

l ஆங்கிலத்துக்கு அன்னியரான நாங்கள் அதைக் கற்றுத் தேறி அதேசமயம் எங்கள் தமிழ் கலாச்சாரத்தை விட்டு விலகி முழுசாய் இங்கிலீஷ்வாதி ஆகாமலும் பார்த்துக்கொள்ளும் வித்தையை அவரே அறிவார்.

l உலகிலேயே பாதுகாப்பான இடம் அவரே! அவர் இருக்கும்போது எந்த ஆபத்தும் எங்களை அணுகமுடியாது என நாங்கள் நம்புவது அவர் நடத்துகிற வகுப்பறையில் மட்டும்தான்.

l எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் இப்பூலகின் அற்புதங்கள் என எங்களுக்கே புரியவைத்து மனதில் தோன்றும் எண்ணத்தை நோக்கமாக்கிக் கொள்ள கற்பித்து அந்த நோக்கத்தை நோக்கி நடைபோடவும் பழக்கும் ஆற்றல் அவருக்கு மட்டுமே உண்டு.

l எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் இப்பூலகின் அற்புதங்கள் என எங்களுக்கே புரியவைத்து மனதில் தோன்றும் எண்ணத்தை நோக்கமாக்கிக் கொள்ள கற்பித்து அந்த நோக்கத்தை நோக்கி நடைபோடவும் பழக்கும் ஆற்றல் அவருக்கு மட்டுமே உண்டு.

l எங்களை புண்படுத்தாமல் பண்படுத்தும் வித்தைகாரர் ஒருவரே அவர் எங்கள் ஆசிரியர்.

மேரியின் நம்பிக்கை

அவரது விடைத்தாளை என் கண்ணீர் சொட்டுகள் நனைத்தன. எந்த ஆசிரியருக்கும், பெரிய உளவியலாளருக்கும் கூட இப்படி அப்பணி பற்றி கண்டிப்பாக கோர்வையாக சொல்லவராது. அந்த விடைத்தாள் என் வாழ்க்கை குறித்த எவ்வளவோ சந்தேகங்களை தீர்த்து என்னை தலைநிமிர வைத்தது. ஸ்காட்லாந்தின் கல்வியாளர் காரல் ரோஜர்ஸ் (Carl Rogers) பிறர் உணர்வுகளை அறிந்து உணர்தல் (Empathy) என்பதை ஆசிரியர்களின் பிரதான குணமாக அறிவிக்கிறார்.

கருணை (sympathy)யை விட பிறர் உணர்வு அறிதல் (Empathy) உயர்வானது என்பதும் மாணவர் உணர்வை முன் அறிந்து புண்படுத்தாமல் பண்படுத்துவதே ஆசிரியர் பணி என்பதும் மேரியின் நம்பிக்கை. திரைப்படங்கள் எனக்குள் எழுப்பிய கேள்விகளுக்கு மேரி அற்புதமாக விடையளித்து விட்டார்.

விடைத்தாள் எனும் போதி மரம்

மேரி மேலும் முன்னேறுகிறார். ‘ஒரு ஆசிரியரின் பணியை அளக்க வேண்டுமா. எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அது கொட்டிக் கிடக்கிறது. நாங்கள் அடையும் ஒவ்வொரு வெற்றியிலும் எங்கள் வாழ்க்கை நெறியின் ஒவ்வொரு குணத்திலும் உள்ளது என்று மேரி தன் கட்டுரையை முடித்தார். அன்றிலிருந்து விடைத்தாட்களை திருத்தும்போது நான் அவற்றை என் பாடபுத்தகங்களாகக் கருதி அவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

குழந்தைகள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என என் மனம் துடித்தது. ஒரு ஆசிரியனாக தோல்வியில் துவண்டு நொந்துபோக நேரும் சமயங்கள் வரும். அப்போதெல்லாம் எடுத்து வாசித்து ஆற்றலும் ஊக்கமும் பெற மேரியின் அந்த விடைத்தாளை நகலெடுத்து வைத்துள்ளேன். படித்துப்பெற்ற என் பட்டங்களைவிட பத்திரமாக வைத்து அதைப் பேணுகிறேன்.

என் வாழ்வின் அர்த்தங்களை எனக்கு புரியவைத்த மேரி தற்போது ஒரு ஆசிரியையாகி ஒரு ஆசிரியரை மணந்து வேலூரில் வாழ்கிறார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x