Last Updated : 28 Jul, 2015 02:50 PM

 

Published : 28 Jul 2015 02:50 PM
Last Updated : 28 Jul 2015 02:50 PM

இப்படியும் பார்க்கலாம்: நீங்க ஸ்டோர் ரூம் வச்சிருக்கீங்களா?

எனது திருநெல்வேலி நண்பரின் வீட்டுக்குப் போனேன். “இது மாஸ்டர் பெட்ரூம். இது கிச்சன். மார்பிள்ஸ்க்கு ராஜஸ்தானே போயிட்டேன்” என்றார். ஏதோ ஒன்று குறைகிறதே என யோசித்தேன். அது ஸ்டோர் ரூம்.

ஒரு காங்க்ரீட் பரண். அநேகமாகப் பாத்ரூம் அல்லது கிச்சன் அறையின் மீது உடனடித் தேவை இல்லாத, தட்டுமுட்டு சாமான்களை வைப்பதற்கென்றே கட்டப்படுவது. அதுதான் ஸ்டோர் ரூம். சில வீடுகளில் இதைத் தனி அறையாகவே கட்டிவிடுவார்கள். “ஏன் இல்லை?” என்றேன்.

ஏன் வேண்டும்?

“ஏன் ஸ்டோர் செய்ய வேண்டும்?” திருப்பிக் கேட்டார் நண்பர். “ ஸ்டோர் ரூம் வீட்டுக்குக் கூடுதல் சுமை. அது நம்மைச் சோம்பேறியாக்கும்.” என்றார்.

ஒரு பொருள் பயன்பாட்டை இழந்துவிட்டதா? “ஸ்டோர் ரூமில் போடு, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்”, “தூக்கி எறிவானேன்? எதிர்காலத்தில் தேவைப்பட்டால்? பரணில் போடு...”

ஒன்றே ஒன்றைத்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு உடைசல் பொருளைப் பராமரிக்கிறோம். அப்புறம் அதையே தூக்கிப் போடவில்லையே, இந்தப் பொருளும் இருந்து தொலைக்கட்டும் என்று மெல்ல ‘ஸ்டோர் ரூமை’ நிரப்புகிறோம். கடைசியில் நியாயமாய் அங்கு வைக்க வேண்டிய பொருட்களை வைக்கக்கூட இடம் இல்லாமல் போகும்.

கிடங்குத் தத்துவம்

“இப்படி ஒரு அறை இருந்தால்தானே ,தேவையற்ற பொருட்களைப் பாதுகாக்கும் எண்ணமும் வருகிறது...? தவிர, அவசியமான பொருட்கள் எப்போதும் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால்,தேவைப்படும் அளவுக்கே பொருட்களை வாங்கத் தோன்றுகிறது. மீதமானால்தானே ஸ்டோர் ரூம்? எந்தப் பொருள் தேவையோ,அந்தப் பொருட்களுடன் என் வீடு மூச்சு திணறாமல் இருக்கிறது.” என்கிறார் நண்பர்.

நீங்கள் ஒரு தேவையற்ற பொருளைப் பத்திரப்படுத்தத் தொடங்கினால் தேவையற்ற எந்தப் பொருளையும் தூக்கி எறியாத மனதைப் பெற்றுவிடுவீர்கள். இனிய நினைவுகளுக்காக ஒன்றிரண்டைச் சேமிக்கலாம்.

ஒரு தொழிற்சாலைக்கு வேண்டிய மூலப்பொருட்களை ஒன்றாக வாங்கிக் குவித்தால், அதற்கு நிறைய முதலீடு தேவைப்படுகிறது. அந்த இடத்தை வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த இயலாமல் போகிறது. பராமரிப்புச் செலவும் ஏற்படுகிறது.

எனவே, தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் பொருட்கள் கிடைக்கிற மாதிரிப் பார்த்துக்கொள்வதுதான் ‘ஜிட்’ என்னும் கிடங்கு மேலாண்மைத் தத்துவம். JUST IN TIME...!

எண்ணக் குப்பைகள்

தேவையான பொருட்கள் மட்டுமே இருக்கிற வீடுகள் அழகாக இருக்கின்றன. தேவையற்ற எண்ணக் குப்பைகளால் நிரம்பி வழியும் உங்கள் மனம்...?

சின்னப் பொறாமைகள், வெறுப்புகள், குரோதங்கள், எரிச்சல்கள், அல்பத்தனங்கள் என்று மனதில் எவ்வளவு ஸ்டோர் செய்து வைத்திருக்கிறோம்! நல்ல சிந்தனைகள் நுழையாத அளவுக்கு மனதைக் குப்பைப்படுத்தி வைத்திருக்கிறோம். ஒருவேளை நுழைந்தால் அங்குள்ள நெடி தாங்க முடியாமல் ஓடிவிடும் அளவுக்கு மாசுபடுத்தி வைத்திருக்கிறோம்.

“அவங்க என்னை அவமரியாதை செஞ்சதை இந்த ஜென்மத்துல மறக்க முடியாது.”

“அதெல்லாம் மனசுக்குள்ள ஒருபக்கம் இருக்கத்தான் செய்யுது.”

“இப்ப நினைச்சாலும் பத்திக்கிட்டு வருது.”

“அப்ப இதே வாய் என்ன பேச்சு பேசிச்சு!”

எப்போதோ நடந்த வாக்குவாதங்கள், அவசரத்திலும் சூழ்நிலையின் கனத்திலும் வெளிப்பட்டுவிட்ட வார்த்தை வெடிப்புகள், அறியாமலேயே நடந்திருக்கக்கூடிய அவமரியாதைகள், எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி நாமே நினைத்தாலும் அழிக்க முடியாமல் அதற்கு ஒரு காவல் பூதத்தை செக்யூரிட்டியாகவும் போட்டிருக்கிறோம்.

அழிக்கப்படும் நல்ல எண்ணங்கள்

டைனிங் டேபிள், பீரோ, டீப்பாய், ஃப்ரிட்ஜின் மேல்பகுதிகளில் ஏதேதோ பொருட்களை வைத்து அவற்றையும் குட்டி குடோனாக மாற்றியிருப்பதைப் போல, மனதில் சாத்தியமான இடங்களில் எல்லாம் தேவையில்லாத எண்ணங்களைத் திணித்திருக்கிறோம். கோப்புகளில் ‘அடுத்த பக்கம் பார்க்க’ என்று அடிக்குறிப்பு போட்டு இன்னொரு பக்கத்துக்குத் தாவுகிற மாதிரி அடுத்த பிறவிகளுக்கும் பகைமையைக் கொண்டுசெல்ல நிறைய பேர் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

அவை பாட்டுக்கு இருக்கட்டுமே என்றால், வாழ்க்கைப் பயணத்தில் தேவையில்லாத எண்ணங்களின் பளுவுக்கான சரக்குக் கட்டணம் மிக அதிகம். ஒரு கட்டத்தில் அவற்றால் சுமந்து செல்லப்படும் பொருளாக நீங்கள் மாறிவிடுவீர்கள்! ஆக்கபூர்வமாக ஒரு அடியைக்கூட எடுத்துவைக்க முடியாது.

தன் குட்டிகளை விழுங்கும் பாம்பு போல் உங்களின் நல்ல எண்ணங்களை அழித்துவிட்டுத்தான், தனக்கான ஆற்றலை உங்களின் தேவையில்லாத எண்ணங்களைப் பெறுகின்றன.

எண்ணங்களுக்கான போகிப் பண்டிகை

உங்கள் ‘ஸ்டோர் ரூம்’களைப் பற்றி யோசியுங்கள். தன் கொள்ளளவைவிட அதிகமான பொருள்களைச் சுமக்கும் அவற்றின் முக்கால்வாசி பொருட்கள் “எப்பவாவது தேவைப்படும்” பிரிவில் தூசு படிய வைக்கப்பட்டவைதான். எந்தப் பொருளை உடனடியாகத் தேவைப்படும் நிலையில் நாம் எடுத்து வைக்கவில்லையோ, அநேகமாக அந்தப் பொருள் தேவைப்படவே போவதில்லை. அபூர்வமாக அந்த ‘ஒருநாள்’ வரும்போது அந்த டெக்னாலஜியும் காலாவதியாகிப் பரணில்தான் கிடக்கும். இது உங்கள் தேவையில்லாத எண்ணங்களுக்கும் பொருந்தும்! நீங்கள் சுமந்ததுதான் மிச்சம்!

வீட்டிலுள்ள கழிவையாவது எரிக்கப் போகிப் பண்டிகை வைத்திருக்கிறோம். குடோனை ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ என்றும் கிடங்குப் பராமரிப்பு என்றும் சுத்தம் செய்கிறோம். மனதின் எண்ணக் கழிவுகளை எப்படி அழிப்போம்...?

நிரம்பிக்கொண்டே இருக்கும் எண்ணங்களின் பளுவை ஏன் சுமக்க வேண்டும்? தேவையான நேரத்தில், தேவையான எண்ணங்களை மட்டும் அனுமதியுங்கள். உங்களின் அகவீடு வெளிச்சம் பெறுவதை உணர்வீர்கள்...!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x