Last Updated : 31 Mar, 2015 01:04 PM

 

Published : 31 Mar 2015 01:04 PM
Last Updated : 31 Mar 2015 01:04 PM

பிளஸ் 2-க்குப் பிறகு... திறன்களைத் தீட்ட உதவும் விடுமுறை

பள்ளிப் பருவத்தின் நிறைவை, விட்டாச்சு லீவு... என்று சந்தோஷமாகக் குதிக்கும் மாணவர்கள், அந்தக் கொண்டாட்டத்துடனே கல்லூரி நுழைவுக்குக் கைகொடுக்கும் ஆயத்தங்களை மேற்கொள்வது நல்லது. இளைப்பாறல் மட்டுமல்லாது, பள்ளிப் படிப்புக்கும் கல்லூரி படிப்புக்கும் இடையிலிருக்கும் பெரும் இடைவெளியை நிரப்புவதற்கும் இந்த விடுமுறை காலத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

உடல் நலம், மன நல ஆயத்தங்கள்

பள்ளி முடித்துக் கல்லூரி மேற்படிப்புக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர் முழு மருத்துவப் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம். உடல் உபாதைகள் எதுவும் இல்லையென்ற போதிலும், உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கை பல வகையிலும் திடமான முடிவுகளை எடுக்க உதவும்.

பார்வை தெளிவு, கேட்கும் திறன், நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை மட்டுமல்ல, ஏதேனும் சிக்கலான தொந்தரவுகள் முளைவிடும் வாய்ப்பிருந்தாலும் தொடக்கத்திலேயே அறிந்து, அவற்றை வேரோடு களைய இந்த மருத்துவ அறிக்கைகள் உதவும். ஹாஸ்டல் தங்குதல், வெளி உணவு ஆகியவை எந்த அளவுக்குத் தங்கள் பிள்ளைகளுக்கு சரிப்பட்டு வரும் என்பதையும் பெற்றோர் முன்கூட்டியே முடிவு செய்து, அதன்பொருட்டும் கல்லூரி தேடலில் தெளிவு பெறலாம்.

முக்கியமாக இதுவரை 'படிப்பு படிப்பு' என்று உடல்நலன் குறித்துப் போதுமான அக்கறையின்றி இருந்தவர்கள், சத்துள்ள உணவு, நல்ல ஓய்வு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குவது அவசியம். தியானப் பயிற்சி, யோகா போன்றவை பரிச்சயமில்லை எனில், அவற்றைத் தொடங்குவதற்கும் சரியான நேரம் இதுதான்.

கல்லூரி சேர்ந்த பிறகும் இந்தப் பயிற்சிகளுக்கு வார விடுமுறைகளில் ஓரிரு மணி நேரம் ஒதுக்குவது கல்வித் தேர்ச்சி, உடல் நலம், மன நலம், ஆளுமை உள்ளிட்டவற்றில் சிறப்பாகப் பிரதிபலிக்கும். பெண்களுக்குத் தற்காப்பு கலையின் முத்தாய்ப்பான பயன்பாடு, இரு பாலருக்கும் நீச்சல் பயிற்சி போன்றவற்றையும் பெற்றோர் உறுதி செய்துகொள்வது அவசியம்.

பயனுள்ள பொழுதுபோக்கு

பயனுள்ள பொழுதுபோக்கு ஒன்றைக் கற்றுக்கொள்வது பல வகையிலும் இந்த வயதினருக்கு, எதிர்காலத்தில் உதவும். தனிப்பட்ட விருப்பங்கள், கல்லூரி படிப்போடு தொடர்புடையது, எதிர்கால இலக்கு தொடர்பானது போன்றவை குறித்ததாகவும் அவை இருக்கலாம்.

பள்ளிப் படிப்பு, பொதுத்தேர்வுகள் காரணமாக இடையில் விடுபட்டிருந்த இந்தப் பொழுதுபோக்கு வகையறாக்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கலாம். இசை, நடனம், போட்டோகிராஃபி என்று தங்களைப் புதுப்பிக்கும் கலைகளை மீட்டெடுக்கலாம். இதில் சமையலையும் சேர்த்துக்கொள்வது நல்லது. வெளித்தங்கலின்போது, அவசரத் தேவைக்கு என சமையல் கலையை மாணவர்களும் அறிந்துகொள்வது பல வகையிலும் பிற்காலத்தில் கைகொடுக்கும்.

இவை தவிர, குடும்பத்தினருடன் சில நாட்கள் வெளியூர் சென்றுவரலாம். இதுவரை உழன்ற நான்கு சுவர் வீட்டுச் சூழலைத் தாண்டி பூர்வீகக் கிராமம், இயற்கை சரணாலயங்களாகவும் அவை அமையலாம். 'படிப்பு... படிப்பு' என்று இதுவரை மன அழுத்தத்தில் குமைந்து கிடந்தவர்களின் மனப் புத்துணர்ச்சிக்கு இந்தப் பயணமும், உலாவலும், குடும்பத்தோடான குலாவலும் மீட்டுத்தரும். படிப்பு காரணமாக வீட்டு உறுப்பினர்களுடன் விடுபட்டிருந்த இயல்பான பிணைப்பு திரும்பக் கிடைக்கும்.

மேல் படிப்புக்காக வெளியூரில் தங்கிப் படிக்க உத்தேசமுள்ளவர்கள், இந்தத் தருணத்தை உள்ளூர மிகவும் விரும்புவார்கள். இந்தச் சிறு இளைப்பாறலுக்குப் பிறகு புத்துணர்ச்சியோடு புதிய தயாரிப்புகளில் கவனம் செலுத்தலாம்.

ஆங்கிலத் தகவல் தொடர்பு

தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைப்பவர்களில் அதிகமானோர் தடுமாற்றம் கொள்வது, ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவதுதான். ஆங்கில வழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களும் இதில் விதிவிலக்கல்ல. தாய்மொழியில் யோசித்து ஆங்கிலத்தில் பேசும் தடுமாற்றத்தைக் களைவது முதல்படி. படிப்பை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களுக்கு நடைமுறையில் இது பெரும் பிரச்சினையல்ல என்றபோதிலும், தொய்வில்லாத தொடக்கத்துக்குச் சரளமான ஆங்கிலம் அவசியம்.

பேசுவது மட்டுமல்ல எழுதுவது, விரைந்து மொழியை உட்கிரகித்து எதிர்வினையாற்றுவது ஆகியவற்றிற்கும் இப்பயிற்சி உதவும். ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ போன்ற தரமான மையத்தில் பயிற்சி பெறுவது நல்லது. கல்லூரி படிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிறகான வேலை தேடலின்போதும் இந்தப் பயிற்சி நிரம்பவே கைகொடுக்கும்.

அயல் மொழி

ஆங்கிலம் அடிப்படை என்பதால், அதைத் தாண்டி ஒன்றிரண்டு அயல் மொழிகளை அறிந்து வைத்திருப்பது அவசியம். பன்னாட்டு நிறுவனங்களின் ஆளெடுப்பில் கூடுதல் தகுதியாக இது கவனம் பெறப்படுவதால், நேரம் வாய்க்கும்போது பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, சைனீஸ் உள்ளிட்ட மொழிகளில் ஒன்றிரண்டைக் கற்க இந்த இடைவெளி காலத்தில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தலாம்.

கணினி பயன்பாடு

தொழிற்கல்வி மற்றும் அறிவியல் மேற்படிப்புகள் என்றில்லை, கலை மற்றும் இலக்கியப் படிப்புகளானாலும் கணினி பயன்பாடு தவிர்ப்பதற்கில்லை. அடிப்படை கணினி பயன்பாட்டை அறிந்திராதவர்கள், இந்த இடைவெளி காலத்தில் அவற்றை அறிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே அறிமுகமுள்ளவர்கள் அடுத்த நிலையாக, மேம்பட்ட குறுகிய காலக் கம்யூட்டர் கோர்ஸ் ஒன்றில் சேரலாம். தங்களது மேற்படிப்பு குறித்து முடிவு செய்திருப்பவர்கள், சீனியர் கல்லூரி மாணவர்களைக் கலந்தாலோசித்துக் கூடுதல் கம்ப்யூட்டர் படிப்புகள் குறித்துத் திட்டமிடலாம்.

மென் திறன்கள்

இதுவரையிலானவை பொதுவான குறிப்புகள். இனிப் பார்க்கப்போவது தனித்துவ மென்திறன் மேம்பாட்டு பயிற்சிகள். கல்லூரிப் படிப்பு, வேலை தேடலில் மட்டுமல்ல, இதுவரை பெற்றோர் அரவணைப்பில் இருந்தவர்களுக்கு இனிச் சமூகத்தில் தனித்து இயங்கித் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் வாய்ப்பை இந்த மென்திறன்கள் அளிக்கும். அதைத் துறை வல்லுநர்களின் ஆலோசனைகளோடு அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x