Published : 23 Dec 2014 12:16 PM
Last Updated : 23 Dec 2014 12:16 PM

வேதியியலில் எளிதாக வெல்லலாம்

வேதியியல் பாடம் புரிந்து படிப்பவர்களுக்கு வேர் பலா. புரியாமல் படிப்பவர்களுக்கு வேப்பங்காய்’ என்கிறார் திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வேதியியல் முதுகலை ஆசிரியர் பொன்.பாக்கியநாதன்.‘செண்டம்’ எடுக்க விரும்பும் மாணவர்களின் பட்டியலில் வேதியியல் தவிர்க்க முடியாதது. சகலத் தரப்பு மாணவர்களுக்குமான அவரது வேதியியல் பாட வெற்றிப்பாதைக் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்:

நூற்றுக்கு நூறு

பாடப்புத்தகத்தின் பாட இறுதியில் தரப்பட்டுள்ள தன் மதிப்பீடு வினாக்களில் இருந்து 60 சதவீதம் அரசுப் பொதுத்தேர்வில் கேட்கப்படும். அதாவது, சாய்ஸ் அடங்கிய மொத்தமுள்ள 233 மார்க்கில் 140-மதிப்பெண்களை தன் மதிப்பீடு வினாக்களே ஈடு செய்யும். இவற்றோடு முந்தைய அரசுத் தேர்வு வினாத் தாள்கள், பெற்றோர் ஆசிரியர் கழகக் கையேடு ஆகியவையும் செண்டம் இலக்கு மாணவர்களுக்குக் கைகொடுக்கும்.

நிறைய எழுத வேண்டியதில்லை, நேரமும் மிச்சமாகும் என்பதால் வருவித்தல் மற்றும் சமன்பாடுகள் தொடர்பான வினாக்களை தெரிவு செய்து எழுதலாம். சமன்பாடுகளை எழுதும்போது வினைபொருள், விளைபொருள் ஆகியவற்றைச் சரியாக எழுதினால் மட்டும் போதாது.

சமன்பாட்டைச் சமன் செய்தல், வினையூக்கி, வெப்ப நிலை, அழுத்தம் இவற்றையும் மறக்காது குறித்தால் மட்டுமே முழு மதிப்பெண்கள் கிடைக்கும். இவற்றில் தவறுகள் வருமென உணர்ந்தால், இந்தக் கேள்விகளைச் சாய்ஸில் விட்டுவிடலாம்.

கணக்கு வினாக்களைத் தீர்க்கையில், முதலில் பார்முலா, பின் பதிலீடு செய்தல், நிறைவாக விடையை உரிய அலகுடன் எழுதுவது எனப் பழக வேண்டும். எடுத்துக்காட்டுக் கணக்குகள், பயிற்சிக் கணக்குகள், முந்தைய வினாத் தாள் கணக்குகள் இவற்றைத் தீர்த்துப் பழகினாலே போதும்.

வேறுபாடுகள், பயன்கள் தொடர்பான விடைகளை எழுதும்போது கருத்துகளைக் குறைக்க வேண்டாம். கூடுதலாகச் சில பாயிண்ட்கள் எழுதும்போது ஒரு சில தவறு என்றாலும், ஏனையவற்றைக் கணக்கில்கொண்டு முழு மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.

முழுமையாக மதிப்பெண்கள் பெற

இதர பாடங்களைப் போலவே வேதியியலிலும் செண்டம் வாங்க விரும்புவோர் அதிகக் கவனம் கொள்ள வேண்டியது ஒரு மார்க் வினாக்கள்தாம். கே.எண் 1 முதல் 30 வரை என 30 மார்க்கை திட்டமிட்டுப் பெறலாம். தலா 3 ஒரு மார்க் வினாக்கள் கேட்கப்படும் அலகுகளான 12, 20 ஆகியவற்றில் முழு மதிப்பெண் பெற, வழக்கமான பயிற்சி வினாக்கள் மட்டுமின்றி பாடத்தினுள் இருந்தும் கேள்விகளைத் தயாரித்துப் படிப்பது நல்லது.

இதுதவிர அலகுகள் 1, 4, 5, 9, 10, 17, 21 ஆகிய 7 பாடங்களில் தலா 2 ஒரு மார்க் வரும் என்பதால், இவற்றுக்கு உள்ளிருந்து படிப்பது உதவும். 1 மார்க்கில் வரும் பிணைப்பு நீளம், சேர்மம் கண்டுபிடித்தல், என்ட்ரோபி கணக்கிடுதல், PH கணக்கிடுதல் போன்ற 4 கணக்குகள் மிகவும் எளிமையானவே . புளூபிரிண்ட் பிரகாரம் 1 மார்க் இல்லாத அலகுகளான 14, 15, 22 ஆகியவற்றில் ஒரு மார்க் படிக்கத் தேவையில்லை.

3 மார்க்கில் துணைக் கேள்வி கவனம்

வினா எண். 31-லிருந்து 51 வரை 3 மார்க் கேள்விகள். கனிம வேதியியல், இயற்பியல் வேதியல், கரிம வேதியியல் பிரிவுகளிலிருந்து தலா 7 மூன்று மார்க் கேள்விகள் என மொத்தம் 21 கேள்விகளில் 15க்கு பதில் எழுத வேண்டும். 3 மார்க்கில் கணக்கு கேள்விகள் 3 இடம்பெறும். கனிம வேதியியலில் அலகு 7, இயற்பியல் வேதியியலில் அலகு 9, 10, 11 ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து, கரிம வேதியியலில் அலகு 20 ஆகியவற்றிலிருந்து இந்த 3 கணக்கு கேள்விகளும் இடம்பெறும்.

புளூபிரிண்ட் படி 3 மார்க் கேள்விகள் இல்லாத அலகுகள் 5, 6, 14, 17, 21 ஆகியவையாகும். மிச்சமுள்ள 17 அலகுகளில் 3, 4, 11, 16 ஆகியவற்றிலிருந்து தலா 2 மூன்று மார்க் கேள்விகள் வரும். சில 3 மார்க் கேள்விகள் 2 தனிக் கேள்விகளை உள்ளடக்கி இருக்கும். நன்றாகப் படிப்பவர்கள்கூட அவசரத்தில் 2வதாக வரும் துணைக் கேள்விக்குப் பதில் தர மறந்துவிடுவார்கள் என்பதால், இதில் கூடுதல் கவனம் வேண்டும்.

5 மார்க்- எளிய பாடங்கள் உதவும்

கேள்வி எண் 52 முதல் 63 வரை 5 மார்க் கேள்விகள். இவைகள் உட்பிரிவுகளற்ற முழு கேள்வியாகவே எப்பொழுதும் அமையும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா 4 கேள்விகள் வீதம் 12 கேள்விகள் வரும். அலகு 5 சிறிய பாடம் என்பதால் அதை முழுமையாகத் தயார் செய்யலாம். அலகு 4, பத்து மார்க் கட்டாய வினாவுக்கான பாடம் என்பதால், இதையே 5 மார்க்குக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதைப் போலவே, அலகு 6ல் இருந்து 10 மார்க் கேள்வி வருமென்பதால் 5 மார்க்குக்கும் சேர்த்தே படிக்கலாம். கேள்வி எண் 52, அலகு 1ல் இருந்து கணக்கு கேள்வியாக இடம்பெறும். எனவே அதற்கு முக்கியத்துவம் தந்து பயிற்சிபெற வேண்டும். வினா எண் 56 முதல் 59 வரை இயற்பியல் வேதியல் பகுதி. அலகுகள் 9, 10, 11, 14 ஆகியவற்றிலிருந்து தலா ஒரு கேள்வி வரும். இவற்றில் சிறிய மற்றும் எளிய பாடங்களான அலகு 9 மற்றும் 10 ஆகியவற்றிலிருந்து கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.

கே.எண் 60 முதல் 63 வரை அலகுகள் 17, 18, 19, 22 ஆகியவற்றிலிருந்து தலா 1 கேள்வி வரும். இதற்குத் தயாராக அலகு 17, 22 ஆகிய சிறிய, சுலபமான பாடங்களைத் தயார் செய்யலாம். பாடப்புத்தகத்தில் பல வினை வழிமுறைகள் இருந்தாலும், 9 வினை வழிமுறைகள் மட்டுமே தேர்வுக்கு உண்டு. இதிலிருந்து 1 கண்டிப்பாக வரும் என்பதால் ஆல்டால் குறுக்கங்கள், கன்னிசாரோ, கிளெய்சன், எஸ்டராக்குதல், கோல்பே, சாலிசிலிக் அமிலத்தைப் புரோமினேற்றம் செய்தல், ஹாஃப்மன் வினை ஆகிய வினைகளின் வழிமுறைகள் படித்தால் போதும்.

10 மார்க் - சாய்ஸ் உதவும்

கே.எண் 64லிருந்து 70 வரை 10 மார்க். கட்டாய வினா 70 தவிர்த்து ஏனைய 6-ல் இருந்து 3 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் என்பதால் திட்டமிட்டுப் படிப்பதும் பதட்டமின்றித் தேர்வெழுதுவதும் 10 மார்க்கில் வெற்றியடைய உதவும். 10 மார்க்குக்கான 3 வினாக்களை உள்ளடக்கியிருக்கும் அலகு 64 முதல் 69 வரை ஒப்பீட்டளவில் எளிமையானவை என்பதால் 10 மார்க் கேள்விகளை இவற்றிலிருந்து தயார் செய்யலாம்.

கேள்வி எண் 64-க்கு அலகு 2 மற்றும் 3, கே.எண் 65-க்கு அலகு 6 மற்றும் 7, கே.எண் 66-க்கு 8 மற்றும் 12 அலகுகள் என 64, 65, 66 ஆகிய மூன்று 10 மார்க் வினாக்களுக்கும் திட்டமிட்டுத் தயாராகலாம். ஒருவேளை இவற்றில் இருந்து ஒரு வினா கடினமாக இருப்பின் கூடுதல் தயாரிப்புக்காகக் கே.எண் 67-க்காக அலகுகள் 13 மற்றும் 14 ஆகியவற்றைத் தயாரிப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

கட்டாய வினா- கவனக் குறிப்புகள்

10 மார்க் வரிசையில் கே.எண் 70 ஆக வருவது கட்டாய வினா. இது அல்லது அது பாணியில் 70 அ, 70 ஆ மற்றும் 70 இ, 70 ஈ ஆகியவை கேட்கப்படும். இவற்றில் 70 இ, 70 ஈ ஜோடியைத் தேர்ந்தெடுத்துப் பதிலளிப்பது பலருக்கும் எளிமையாக இருக்கும். காரணம், அதிகப் பக்கங்களில் இருக்கும் அலகு 16-ல் இருந்தே 70 அ கேள்வி அமையும். இதைவிட பக்கங்கள் குறைவான அலகு 18-ல் இருந்து கேட்கப்படும் 70 இ கேள்விக்குத் தயாராவது சுலபமானது.

அலகு13-ல் இருந்து கேட்கப்படும் 70 ஈ, கணக்கு சார்ந்த கேள்வி என்ற போதும் மாணவர்கள் அதைச் சுலபமாக நினைவில் இருத்திப் பதிலளித்துவிடுவார்கள். மேலும் 70 அ, 70 ஆ ஜோடியில் சமன்பாடுகள் அதிகம் இடம்பெறும் என்பதாலும் அவற்றைவிட 70 இ, 70 ஈ கேள்விகளுக்குத் தயாராவது எளிமையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x