Last Updated : 07 Feb, 2017 10:51 AM

 

Published : 07 Feb 2017 10:51 AM
Last Updated : 07 Feb 2017 10:51 AM

தேர்வுக்குத் தயாரா?- அறிவியலில் அனைவரும் அசத்தலாம்

எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கே என்பதால், நேர நெருக்கடி இன்றி எல்லா மாணவர்களும் அறிவியல் பாடத்தில் அசத்தலாம். அதிலும் சற்றே அக்கறையும், உழைப்புமாக மெனக்கெட்டால் அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறலாம்.

ஒரு மதிப்பெண்ணில் கவனம்

ஒரு மதிப்பெண் பகுதியில், மொத்தமுள்ள 17 பாடங்களில் 7, 10 தவிர்த்து ஏனைய பாடங்களில் இருந்து தலா 1 வினா கேட்கப்படுகிறது. இந்த 15 வினாக்களில் பெரும்பாலானவை புத்தக வினாக்களில் இருந்தே கேட்கப்படும். குறைந்தது 5 வினாக்கள் பாடங்களின் உள்ளிருந்து கேட்கப்படுகிறது. அவை பெரும்பாலும் 1, 3, 8, 11, 12, 15, 16 ஆகிய பாடங்களில் இருந்து அமையும். பாட வினாவினைச் சற்றே மாற்றியதாகப் பாடம் 12-லிருந்து ஒரு வினா அடிக்கடி இடம்பெறுகிறது. கணக்கு வினாக்கள் 15, 16, 17 ஆகிய பாடங்களில் இருந்து இடம்பெறலாம்.

முழு மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினாக்களைப் பாடத்தின் உள்ளிருந்தும் அடையாளம் கண்டு படிக்க வேண்டும். கேள்வியைப் படித்த உடனேயே பதிலைத் தீர்மானிக்கக் கூடாது. பலமுறை கவனமாக வாசித்த பிறகே பதிலை எழுத வேண்டும். தடித்த எழுத்துகள், பெட்டித் தகவல்கள் உட்படப் பாடங்களை வரிக்கு வரி படித்தல் அவசியம்.

‘சாய்ஸ்’ உடன் அதிக மதிப்பெண்கள்

2 மதிப்பெண் வினாப் பகுதியில் 32-ல் இருந்து 20 வினாக்களைத் தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் ‘சாய்ஸ்’ வசதி உண்டு. மேலும் அறிவியல் வினாத்தாளில் அதிக மதிப்பெண்களை உள்ளடக்கியதும் இப்பகுதியே ஆகும். ஆனால் இவற்றில் 10 விதமான வினாக்கள் கேட்கப்படுவதால், உகந்த கேள்வியைத் தேர்ந்தெடுக்கும் லாகவம் பயிற்சியின் மூலமே மாணவருக்குக் கைவரப்பெறும்.

கோடிட்ட இடத்தை நிரப்புதல், பொருத்துக, படத்திலிருந்து பாகம் குறித்தல் போன்றவை சுலபம். கூற்று-காரணம், பதிலுக்கு உரிய வினா அமைத்தல் போன்றவற்றைச் சாய்ஸில் விடலாம். கணக்கு வினாக்கள் எளிமையாக இருந்தால் மட்டுமே எழுதலாம். ‘பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி’ ரக வினா, பாட வினாக்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தால் முன்னுரிமையுடன் எழுதலாம். அதுவே பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தால் தவிர்க்கலாம்.

இப்பகுதியில் தலா 3 வினாக்கள் 1, 5, 6, 8, 16, 17 ஆகிய பாடங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. இந்தப் பாடங்களை முழுவதுமாகப் படித்தாலே 18 வினாக்களுக்குப் பதிலளிக்க முடியும். எனவே, இவற்றுக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இதுபோல 9, 11, 12, 15 பாடங்களில் இருந்து தலா 2 வினாக்கள் இடம்பெறும். 14-வது பாடத்திலிருந்து 2 மார்க் கேள்வி இடம்பெறாது. இவை தவிர்த்த மீதமுள்ள 2, 3, 4, 7, 10, 13 ஆகிய 6 பாடங்களில் இருந்தும் தலா 1 கேள்வி இடம்பெறும். நடுத்தரமாகப் படிக்கும் மாணவர்கள்கூடத் தலா 3 கேள்விகள் இடம்பெறும் 6 பாடங்களுடன் 9, 12 ஆகிய பாடங்களையும் சேர்ந்து படித்தால் இப்பகுதியில் அதிக மதிப்பெண்களை அள்ள முடியும்.

முன்னுரிமையில் கவனம்

5 மதிப்பெண் வினாக்கள் 4 பகுதிகளாகத் தலா 1 சாய்ஸ் உடன் 4 வினாக்களாகக் கேட்கப்படுகின்றன. இவற்றில் முதல் 2 பகுதிகளை உள்ளடக்கிய உயிரியல் பாடங்களில், 2, 3, 4, 7 ஆகியவற்றிலிருந்து பதிலளிக்க வேண்டும். இந்த 4 பாடங்களில் 2, 7 ஆகியவற்றை முழுமையாகவும் 3, 4 பாடங்களில் புத்தக வினாக்களை மட்டுமாவது படித்திருந்தால், இப்பகுதியில் முழு மதிப்பெண் பெறலாம்.

அடுத்த பகுதியாக வேதியியல் வினாக்கள் 10, 13 பாடங்களில் இருந்து கேட்கப்படும். இவற்றில் 10-வது பாடத்தின் வினாவுக்கு முன்னுரிமை தர வேண்டும். இதேபோல இயற்பியலுக்கான பகுதி 4-ல் 15, 17 ஆகிய பாடங்களின் புத்தகப் பகுதி வினாக்களைப் படித்திருந்தாலே போதும். அவற்றிலும் சுமாராகப் படிக்கும் மாணவர்கள் 15-வது பாடத்தைப் படிப்பதோடு, 17-வது பாடத்திலிருந்து அடிக்கடி கேட்கப்படும் 2 முக்கிய கேள்விகளை மட்டுமாவது படிக்க வேண்டும். 5 மதிப்பெண் பகுதியில் ஒரு வினா என்பது ஒரு தலைப்பின் கீழான அதிகபட்சம் 5 சிறு வினாக்களை உள்ளடக்கியதாகவே கேட்கப்படுகிறது. எனவே பாடம் 10 போன்று, 5 மார்க் வினாக் களில் உள்ளடங்கிய 2 மார்க் வினாக்களை அடையாளம் கண்டு படிப்பது முக்கியம்.

தேர்வறை குறிப்புகள்

அனைத்து ஒரு மதிப்பெண் விடை களையும் ஒரே பக்கத்தில் வருமாறு எழுதுவது சிறப்பு. அதுமட்டுமன்றி 2, 5 மதிப்பெண் விடைகளை அடுத்தடுத்த 2 பக்கங்களில் உடைத்து எழுதுவதைத் தவிர்க்கலாம். அதாவது, விடையின் தொடக்கம் முதல் முடிவுவரை ஒரே பக்கத்தில் அமைவது நல்லது. முக்கிய வார்த்தைகளையும் பெயர்களையும் தனித்து அடையாளம் காட்டுவது அல்லது அடிக்கோடிடுவது சிறப்பு.

அனைத்தையும் எழுதிய பிறகு 2 முறை திருப்பிப் பார்க்கும் அளவுக்கு நேர அவகாசம் இருக்கும் என்பதால், அப்போதுகூட முக்கியமானவற்றைப் பென்சிலால் அடிக்கோடிடலாம். அதே போல அடுத்தடுத்த கேள்விகளுக்கு இடையேயும் பென்சிலால் கோடு இடுவதும் நல்லது. படங்களுக்குப் பாகம் குறிப்பதை, படத்தின் ஏதேனும் ஒரு பக்கத்திலேயே செய்ய வேண்டும். வினா எண்களை முறையாகக் குறிப்பதுடன், முடிந்தவரை அதன் வரிசை மாறாமல் எழுதுவது சிறப்பு. வினாத்தாளில் படம் வழங்கப்பட்டிருந்தாலும், விடைத் தாளில் அப்படத்தை வரைவது அவசியம். 5 மதிப்பெண் பகுதியின் உள்வினாக்களுக்கு விடை அளித்திருக்கிறோமா எனத் தனியாகச் சரி பார்ப்பதும் அவசியம்.

(பாடக் குறிப்புகளை வழங்கியவர் சி.செல்வராணி.
அறிவியல் பாடத்துறை தலைவர்,
சௌடாம்பிகா மெட்ரி மேல்நிலைப் பள்ளி,
துறையூர், திருச்சி மாவட்டம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x