Last Updated : 14 Feb, 2017 11:46 AM

 

Published : 14 Feb 2017 11:46 AM
Last Updated : 14 Feb 2017 11:46 AM

தேர்வுக்குத் தயாரா? - சமூக அறிவியலும் நமதே!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏனைய பாடங்களை விடச் சமூக அறிவியலில் சதம்பெறுவது எளிமையானது.

பல முறை சரிபார்க்கவும்

பகுதி 1 ‘சரியான விடையைத் தேர்ந்தெடு’ பகுதியில் 14, ‘பொருத்துக’ பகுதியில் 10 என ஒரு மதிப்பெண் பகுதியில் 24 வினாக்கள் உண்டு. இவற்றில் பெரும்பாலும் பாட வினாக்களில் இருந்தே இடம்பெறும் என்றாலும், ஒன்றிரண்டு உள்ளிருந்து கேட்கப்படலாம். எனவே பாடத்தில் தடித்த எழுத்துகளில் கொடுக்கப்பட்டவைக்குத் திருப்புதலில் கவனம் தர வேண்டும். அடுத்து, ஆண்டுகளைக் கால வரிசைப்படி படிப்பது, குழப்பம் ஏற்படுத்தும் பெயர்களைத் தனியே குறித்துக்கொண்டு படிப்பது போன்றவை மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பகுதியில் வரலாறு, புவியியலில் தலா 4 வினாக்களும், குடிமையியல், பொருளியலில் தலா 3 வினாக்களும் கேட்கப்படுகின்றன. இவற்றில் உள்ளிருந்து கேட்கப்படும் ஓரிரு வினாக்கள், வரலாறு பகுதியிலிருந்தே இடம்பெறும். எனவே, ஏனைய பகுதிகளுக்கு, பாட வினாக்களைப் படித்தாலே போதும். பொருத்துக பகுதியில் குழப்பத்துக்கு இடமின்றி விடைகளைப் பலமுறை சரிபார்த்து எழுத வேண்டும். ஒரு தவறு என்பது இரண்டு 1 மதிப்பெண் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இப்பகுதியில் எச்சரிக்கைத் தேவை. கடைசி நேரத்தில் படிக்கும் மாணவர்கள்கூட முந்தைய 3 வருட வினாத்தாள்களைத் தொகுத்துப் படித்தாலே 24-க்கு 18 மதிப்பெண்கள்வரை பெறலாம்.

புத்தகத்தைப் படித்தாலே போதும்!

பகுதி 2-ல் இரண்டு மதிப்பெண் பகுதியில் பாதிக்குப் பாதி சாய்ஸ் வசதி உண்டு. வரலாறு, புவியியலில் தலா 8 வினாக்களில் இருந்து தலா 4 வினாக்களும், குடிமையியல், பொருளியலில் 2-லிருந்து ஒரு கேள்விக்கும் பதில் அளிப்பதாக இருக்கும். வரலாற்றுப் பாடங்களைப் பொறுத்தவரை, முக்கிய வினாக்கள் எனக் கிட்டத்தட்ட 20 இருக்கின்றன. ஆசிரியர் அடையாளம் காட்டிய அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து படித்தால் போதும். புவியியல் பாடப்பகுதியில் ஒப்பீட்டளவில் 2 மார்க் வினாக்கள் குறைவு என்பதால் அவற்றைச் சுலபமாகப் படிக்கலாம். பொருளியலின் 2 பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தைப் படித்தாலே போதும்; அதிலும் 2-ம் பாடம் படிக்க எளிமையானது என்பதால், அதற்கு முன்னுரிமை தரலாம். குடிமையியலிலும் இதேபோல முதல் பாடத்தைப் படித்தாலே போதும்.

பிரிவு 3 வினாக்களாகப் புவியியல் பாடத்திலிருந்து மட்டுமே கேட்கப்படும் ‘வேறுபடுத்திக் காட்டுக’ அமைந்திருக்கிறது. எட்டில் இருந்து 4 வினாக்களைத் தேர்ந்தெடுத்து எழுதும் இப்பகுதிக்கு, புவியியலின் முதல் 3 பாடங்களைப் படித்தாலே போதும். வினாக்களுக்குத் தலா 2 பாயிண்ட் எழுதினாலே முழு மதிப்பெண் உண்டு என்றாலும் 3 அல்லது 4 பாயிண்டுகள் எழுதுவது நல்லது. புத்தக வினாக்களில் இருந்தே இப்பகுதிக்கான முழு மதிப்பெண்களைப் பெறலாம்.

எளிய முறையில் விடை அளித்தல்

பிரிவு 4 ஆக வரலாற்றிலிருந்து கேட்கப்படும் ‘தலைப்பின் கீழ் வினா’ பகுதி இடம்பெறுகிறது. ஐரோப்பிய வரலாறு, இந்திய வரலாறு என 2 பகுதிகளில், ஏதேனும் ஒரு பகுதிக்கான பாடங்களைப் படித்தாலே இவ்வினாக்களில் முழு மதிப்பெண் பெறலாம். அவற்றிலும் நிறைய தலைப்புகள் இருக்கும் என்பதால், ஆசிரியர் வழிகாட்டுதலில் தேர்ந்தடுத்த 12 தலைப்புகளை மட்டுமே படித்தால், அவற்றிலிருந்து நிச்சயம் 3 வினாக்கள் இடம்பெற்றுவிடும். இப்பகுதியில் ஒரு மார்க் பாணியில் பதில் அளித்தால் போதும்.

பிரிவு 5 ஆக 5 மதிப்பெண் வினாக்கள் இடம்பெறுகின்றன. வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என அனைத்துப் பாடப் பகுதிகளில் இருந்தும் தலா 3 கேள்விகள் தரப்பட்டு, அவற்றிலிருந்து தலா 1 கேள்வியைத் தெரிவு செய்து எழுதுமளவுக்கு இப்பகுதி எளிமையாக இருக்கும். இவற்றில் வரலாறு பகுதியில் மட்டுமே மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு. ஆகையால், அப்பாடங்களில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களைக் குறித்துக்கொண்டு அவற்றை மட்டுமே திரும்பத்திரும்பப் படித்தால் போதும். விடைகளை அவற்றின் தன்மைக்கேற்ப எளிய பத்திகளாக, பாயிண்டுகளாக எழுத வேண்டும். 5 பாயிண்டுகள் போதும் என்ற போதும், எட்டு எழுதுதல் நல்லது.

பிரிவு 6-ஆக இடம்பெறும் காலக்கோடு வரைதல் பகுதியில், ’இந்திய வரலாறு’ பாடங்களை மையமாகக்கொண்டு படிக்கலாம். இதற்குத் தனியாகப் படிக்க வேண்டிய அவசியமில்லை. பாடம் நடத்தும்போது தொடங்கி, பிற வினாக்களுக்குப் படிக்கும்போதும், அவற்றுக்கிடையே ஒப்பிட்டுப் படிக்கும்போதும் கால வரிசையில் பாடக்கருத்துகளை நினைவில் கொள்வது நல்லது. அதேபோல வட்டமேஜை மாநாடுகள், உலகப் போர்கள் போன்ற தொடர்ச்சியுள்ள வருடங்களைத் தனியே குறித்துக்கொள்ள வேண்டும். வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போதும், திருப்புதலின்போதும் காலக்கோட்டை அடிப்படையாகக் கொள்வதும் நல்ல உத்தி.

பிரிவு 7 ஆக இடம்பெறும் வரைபட (மேப்) வினாப் பகுதியில், ஆசிய, இந்திய வரைபடங்கள் வருகின்றன. இதில் வரலாற்றிலிருந்து ஆசிய அல்லது இந்திய இடங்கள் தலா 5 குறிக்குமாறு கேட்கப்பட்டிருக்கும். சாய்ஸ் அடிப்படையிலான இந்த இரண்டில், 5 இடங்களும் முழுமையாகத் தெரிந்த வரைபடத்தையே மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். 2 வரைபட இடங்களும் தெரியும் என்பவர்கள், இந்திய வரைபடத்துக்கு முன்னுரிமை தரலாம். புவியியலில் கொடுக்கப்பட்ட 15-ல் இருந்து நன்கறிந்த 10 இடங்களைக் குறிக்க வேண்டும். மலை, சிகரம், ஆறு, தீவுகள் போன்றவை எளிமையானவை என்பதால் அவற்றுக்குச் சாய்ஸில் முன்னுரிமை தரலாம். வரைபடத்தைப் பொறுத்தவரை பென்சிலில் குறித்த இடங்களையும், அவற்றின் எண்ணிக்கை யையும் நிறைவாக ஒருமுறை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

புளூ பிரிண்ட் உதவி

சமூக அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை, புளூ பிரிண்ட் வழிகாட்டுதலின்படி படித்தாலே சுமாராகப் படிப்பவர்கள்கூட அதிக மதிப்பெண்களை எட்ட முடியும். பொருளியலில் 2-ம் பாடம், குடிமையியலில் முதல் பாடம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு 2, 5 மதிப்பெண் வினாக் கள் இடம்பெறுவதால், அப்பாடப் பகுதிக்கு அவற்றை மட்டும் படித்தாலே போதும்.

சதம் உறுதியாக

நூற்றுக்கு நூறு பெற விரும்புவோர் ஒரு மதிப்பெண் விடைகளுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும். பிரிவு-1 ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமன்றி, காலக்கோடு வரைதல், ‘மேப்’ போன்றவையும் ஒரு மதிப்பெண் பாணியிலேயே விடையளிக்க வேண்டியுள்ளது. இந்த வகையில் மொத்தம் 44 மதிப்பெண்களுக்கு, ’நூற்றுக்கு நூறு’ மாணவர்கள் எச்சரிக்கையாகப் பதில் தர வேண்டும். விடைகளைச் சரிபார்ப்பது போல, அவற்றுக்கான வரிசை எண்கள், எண்ணிக்கை போன்றவற்றையும் இறுதியாகச் சரி பார்ப்பது அவசியம்.

(பாடக் குறிப்புகளை வழங்கியவர்: அ.ஆறுமுகம்.
சமூக அறிவியல் ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
எடப்பாடி, சேலம் மாவட்டம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x