Published : 13 Sep 2016 11:31 AM
Last Updated : 13 Sep 2016 11:31 AM

வெற்றி முகம்: கடின உழைப்பால் வளர்ந்தேன்! - கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர்

சாதாரணப் பொறியாளராகத் தன் பணியைத் தொடங்கிய கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர், அணுசக்தித் துறையின் உச்சபட்ச தகுதியான மிகச் சிறந்த விஞ்ஞானி (Distinguished Scientist) என்ற தகுதியை செப்டம்பர் 3 அன்று பெற்றுள்ளார்.

இளமைப் பருவம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள வெள்ளகால் கிராமத்தில் பிறந்தவர் இவர். இவருடைய தந்தை வி.பி. ராமையா கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், துங்கபத்ரா அணையில் உள்ள மின் திட்டத்தில் நிர்வாகப் பிரிவில் அலுவலராகப் பணியாற்றியவர். சுந்தரின் தாய் செண்பகவல்லி பள்ளி ஆசிரியை.

தாளையூத்து பகுதியில் உள்ள, சங்கர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார் சுந்தர். இந்தப் பள்ளியில் கல்வியின் தரம் சிறப்பாக இருந்திருக்கிறது. ஆனால், ஆங்கில பாடப் பிரிவில் சேர்ந்ததால் தொடக்கத்தில் படிக்கச் சிரமப்பட்டிருக்கிறார்.

7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு அறிவியல் பாடத்தைக் கற்றுக் கொடுத்தவர் சுந்தர்ராமன். அவருடைய கற்பித்தல் முறையின் காரணமாகவே இவருக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மகாதேவன், வி.என்.கே. கிருஷ்ணமூர்த்தி, ராஜகோபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களை மிகவும் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் தனக்குப் படிப்பின் மீதான ஆர்வம் ஏற்பட்டது என்று கூறும் சுந்தர், ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பள்ளி வாழ்க்கையே கற்றுத் தந்ததாகத் தெரிவிக்கிறார்.

கல்லூரி வாழ்க்கை

தனது பி.யூ.சி. படிப்பை பாளையங்கோட்டை, புனித சேவியர் கல்லூரியில் படித்திருக்கிறார் இவர். பின்னர், அறிவியல் மீதான ஆர்வம் காரணமாகக் கோவையில் உள்ள கோயமுத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.இ. (மெக்கானிக்கல்) படிப்பில் சேர்ந்துள்ளார்.

விடுதி வாழ்க்கை, நிறைய நண்பர்கள் என்றாலும் படிப்பில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் இவர். குடும்பச் சூழ்நிலையை மனத்திலிருத்தி, 5 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பை ஒழுங்காக முடித்திருக்கிறார்.

முதல் பணி

பாபா அணுமின் நிலையத்தில் 10.09.1980-ல் பயிற்சியில் சேர்ந்திருக் கிறார். பின்னர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைக்கு அழைப்பு வந்தபோதும் பாபா அணுமின் நிலையத்திலேயே பயிற்சியைத் தொடர்ந்திருக்கிறார். பயிற்சியை முடித்தவுடன் மும்பையில் அலுவலகப் பணி கிடைத்திருக்கிறது. ஆனால் சைட்டில் பணியாற்றுவதில் கொண்ட விருப்பம் காரணமாக தாராப்பூர் அணுமின் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அலுவலகத்துக்குச் சென்று அணுமின் சக்தி தொடர்பாக நிறையப் படித்திருக்கிறார். 30 வயதுக்குள் ஷிப்ட் கன்ட்ரோல் இன்ஜினீயராகப் பொறுப்பேற்றார்.

சொந்த மாவட்டப் பணி

சொந்த ஊருக்கு வந்துவிடலாம் என எண்ணி முயன்றபோது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி கிடைத்திருக்கிறது. 2002-ம் ஆண்டில் மும்பையில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்துவிட்டு, 2004-ல் கூடங்குளத்தில் தொழில்நுட்பப் பணி கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். வேலையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்ட இவர் 2007-ல் தலைமைப் பொறியாளராகவும், 2010-ல் நிலைய இயக்குநராகவும், 2012-ல் வளாக இயக்குநராகவும் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

குடும்பம்

நடுத்தரக் குடும்பம் என்பதால் இவருடைய தந்தை, தாய் இருவரும் வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளனர். தந்தை கர்நாடகாவில் பணியாற்ற, சுந்தரும் அவருடைய சகோதரர்களும் தாயாருடன் இருந்திருக்கிறார்கள். அம்மா மிகவும் கண்டிப்பானவரல்ல, ஆனாலும், படித்தால் நன்றாக இருப்பாய், அதை நினைவில் வைத்துக் கொள் என்று மட்டும் கூறுவார் என்பதை நினைவுகூர்கிறார் சுந்தர். அதை அவர் அழகாக உணர்த்தியதால் படிப்பின் முக்கியத்துவத்தைச் சிறு வயதிலேயே சகோதரர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். மேலும் வீட்டில் அப்பா இல்லாததால் அனைவரும் அம்மாவுக்குத் தேவையான ஒத்தாசைகளைச் செய்துகொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

வளர்ச்சியின் காரணம்

சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் தன்னை மிகவும் ஈர்த்ததாகக் கூறும் சுந்தர், ‘எப்போதும் பிரச் சினைகளைக் கண்டு ஓடாதே’ என்ற அவரது வாக்கியத்தைத் தனது அறையில் ஒட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார். அதே போல் தன்னுடன் பணியாற்றிய மூத்த விஞ்ஞானிகள் பலரும் தனக்கு ஒவ்வொரு வகையில் உத்வேகமாக இருந்துள்ளதையும் மகிழ்ச்சியுடன் குறிப் பிடுகிறார்.

எதிர்பார்ப்புகள் இல்லாமை, கடின உழைப்பு, உண்மை யாக இருத்தல், கடவுள் நம்பிக்கை ஆகியவையே தனது உயர்வுக்குக் காரண மெனக் கருதுவதாக சுந்தர் அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.

இளைய தலைமுறைக்கு...

தனது ஆலோசனைகளாக இளைய தலைமுறைக்கு இவர் பின்வருவனவற்றைச் சொல்கிறார்:

# வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை அன்றைய தினமே படித்துவிட வேண்டும். இதனால், தேர்வு நேரத்தில் நிறைய நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

# வெறுமனே மணப்பாடம் செய்து படிக்காமல், அனைத்தையும் புரிந்து, மனதில் அது குறித்த கற்பனையை ஓடவிட்டுப் படித்தால், அப்படியே பதிந்துவிடும். எப்போது கேட்டாலும் அதைச் சொல்லவோ, எழுதவோ முடியும்.

# நமது வருமானத்துக்கு ஏற்ற வகையில் செலவுகளைத் திட்டமிட வேண்டும். தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது.

# குடும்பத்துக்கு நல்ல மகனாக, நாட்டுக்கு நல்ல குடிமகனாக இருக்க வேண்டியது அவசியம்.

# சமுதாயத்தைக் குறை கூறாமல், நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வது நம்மை மெருகேற்றும்.

# மேலும், பெற்றோர், குடும்பத்தின் நிலையை மனதில் நிறுத்திக்கொண்டால், தவறான எண்ணங்கள், பழக்கவழக்கங்களுக்கு ஆட்படாமல் நாம் கொண்ட லட்சியத்தை, குறிக்கோளை அடையலாம்.

# கடின உழைப்பும், நேர்மையும் மிக மிக அவசியம்.

படம்: ஞானவேல் முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x