Last Updated : 05 Mar, 2019 11:53 AM

 

Published : 05 Mar 2019 11:53 AM
Last Updated : 05 Mar 2019 11:53 AM

சேதி தெரியுமா? - சக்திவாய்ந்த புதிய தொலைநோக்கி

பிப்ரவரி 25: நாசாவின் ‘வைட் ஃபீல்டு இன்ஃப்ராரெட்’ ஆய்வுத் தொலைநோக்கி (WFIRST) 2025-ம் ஆண்டில் வெளியிடப்படவிருக்கிறது. இந்தத் தொலைநோக்கி, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருக்கும் 1,400 புதிய புறக்கோள்களைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது என்று ஒஹையோ பல்கலைக்கழக வானியலாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ல் வெளியிடப்பட்ட பிரபல ஹப்பிள் தொலைநோக்கியைவிட ‘வைட் ஃபீல்டு இன்ஃப்ராரெட்’ஆய்வுத் தொலைநோக்கி 100 மடங்கு வேகமாகச் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி: கல்விக்கு 26% நிதி ஒதுக்கீடு

பிப்ரவரி 26: டெல்லி அரசு, இந்த நிதியாண்டின் (2019-20) ஒட்டுமொத்த பட்ஜெட்டான ரூ. 60,000 கோடியில் கல்விக்கு மட்டும் 26 சதவீதத்தை (ரூ. 15,600 கோடி) ஒதுக்கியிருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்டு வந்த நிதியைவிட அதிகம். இந்த பட்ஜெட்டில் செயல்முறை அறவியலுக்காகவும், ஆசிரியர் பயிற்சிக்காகவும் இரண்டு புதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது டெல்லி அரசு.

அரசுப் பள்ளியில் படித்து 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ‘டேப்ளெட்ஸ்’ வழங்கப்படும் என்றும், ஏழு முதல் பிளஸ் 2 வகுப்புவரை 80 சதவீதத்துடன் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இணைய வசதி: இந்தியாவுக்கு 47-வது இடம்

பிப்ரவரி 27: 2019-ம் ஆண்டுக்கான உள்ளடங்கிய இணையக் குறியீட்டில் (Inclusive Internet Index) இந்தியா 47-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் இணைய வசதி, செலவு, தொடர்பு, தயார்நிலை உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைத்திருந்த இந்தக் குறியீட்டில் உலகின் 100 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இணைய வசதியில் ஸ்வீடன், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.

உள்நாட்டு உற்பத்தி குறைவு

பிப்ரவரி 28: நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2018-19) 6.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) தெரிவித்திருக்கிறது. இது ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் வளர்ச்சியை முன்பு கணித்திருந்த 7.2 சதவீதத்திலிருந்து குறைத்து 7 சதவீதமாக மாற்றிக் கணித்திருக்கிறது மத்திய புள்ளியியல் அலுவலகம். உற்பத்தித் துறையும், விவசாயத் துறையும் மூன்றாவது காலாண்டில் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

ஒப்படைக்கப்பட்ட விமானப்படை வீரர்

மார்ச் 1: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் வாகா எல்லையில் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனை அமைதியை நிலைநாட்ட விடுவிப்பதாக அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பின் திரும்பிய விமானப் படை வீரருக்கு இந்தியாவில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x