Last Updated : 23 Oct, 2018 11:37 AM

 

Published : 23 Oct 2018 11:37 AM
Last Updated : 23 Oct 2018 11:37 AM

சொல்லாததையும் செய்யும் இயந்திரக் கற்றல்!

தொழில்துறையில் செயற்கை மதிநுட்ப அறிவியலின் (Artificial Intelligence) பாய்ச்சல் நான்காம் தொழிற்புரட்சி எனப்படுகிறது. தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பு முடிந்து வேலைவாய்ப்புச் சந்தையில் கால்வைக்கும்போது இந்தச் செயற்கை மதிநுட்பத்தின் வீச்சைத் திடமாக உணருவார்கள்.

செயற்கை மதிநுட்பம் போன்றே, அடுத்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தையின் மையமாக விளங்கவிருக்கும் பல்வேறு நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்வதும் அவற்றில் தமக்கானதை அடையாளம் கண்டு திறன்களை வளர்த்துக்கொள்வதும் உயர்கல்வி மாணவர்களுக்கு அவசியம். அறிவியல், பொறியியல் துறை மாணவர்கள் மட்டுமின்றி பிற துறை மாணவர்களும் இந்தத் திறன்கள் பற்றி அறிந்திருப்பது சமயத்தில் கைகொடுக்கும்.

மேம்பட்ட மூளையின் செயல்

சிந்தனைத் திறன் அடிப்படையிலான மனிதர்களின் செயல்பாடுகளை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் செயற்கை மதிநுட்பம். இந்தச் செயற்கை மதிநுட்பத்தின் நீட்சியாகவும் அதன் வெற்றிகரமான பயன்பாடுகளில் முதன்மையானதாகவும் வளர்ந்திருப்பதே மிஷின் லேர்னிங் (Machine Learning) எனப்படும் ‘இயந்திரக் கற்றல்’.

வழக்கமாகக் கணினியில் பதிவுசெய்யப்படும் தரவுகளின் அடிப்படையிலே அதன் செயல்பாடும், நமது ஐயங்களுக்கான பதில்களும் அமைந்திருக்கும். ஆனால், உள்ளீடு செய்யப்படாத தகவல் தொடர்பான ஒரு கேள்விக்கு, தனது அதுவரையிலான அனுபவங்களில் இருந்து புதிதாகப் பதிலளிக்குமாறு செயல்படுத்துவதே இயந்திரக் கற்றலின் அடிப்படை. இந்த வகையில் மேம்பட்ட அல்காரிதம், அதிகப்படி தரவுகள் உதவியுடன் மனித மூளை ஆற்றும் திறன்களை ஓர் இயந்திரத்திடம் பெற முடியும்.

பெருகும் தேவை

‘சைபர் செக்யூரிட்டி’, ‘டேட்டா அனலிடிக்ஸ்’, சுயமாகச் செயல்படும் தனித்துவ இயந்திரங்கள், உபகரணங்களைத் தயாரிப்பது போன்றவைக்கு ‘மிஷின் லேர்னிங்’ பயின்றவர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இவை தவிர்த்து மருத்துவம், வாகன உற்பத்தி போன்ற துறைகளில் இவர்களின் தேவை அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் மிஷின் லேர்னிங் பயின்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, புதிதாக அந்தத் துறையில் காலடி வைப்பவர்களுக்கான நற்செய்தி!. இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கான பெங்களூருவில் மட்டும் மிஷின் லேர்னிங் புரோகிராமிங் பயின்றவர்கள் 4 ஆயிரம் பேர் தேவை எனக் கடந்தாண்டு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எங்குப் பயிலலாம்?

‘மிஷின் லேர்னிங்’கை முழுநேர முதுநிலைப் படிப்பாகப் பெறப் பல முன்னணிக் கல்வி நிலையங்கள் உதவுகின்றன. ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், திருவனந்தபுரம் ஐ.ஐ.எஸ்.டி. போன்றவை மிஷின் லேர்னிங்கை எம்.டெக். படிப்பாக வழங்குகின்றன. பெரு நகரங்களில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் சில வாரப் பயிற்சியாக வழங்குகின்றன. இவற்றைப் பயில அடிப்படையான பட்டப் படிப்பு அவசியம்.

இணையத்தில் துறை முன்னோடிகள் பலர் இலவசமாகவே கற்றுத் தருகின்றனர். மிஷின் லேர்னிங் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளவும் ஆரம்பப் பாடங்களைப் பயிலவும் பல தளங்கள் உதவுகின்றன.

இணைய வழிகாட்டல்

# மிஷின் லேர்னிங் ஓர் அறிமுகம்: https://bit.ly/2NVSG9H, https://bit.ly/2Dha2K9.

# செயற்கை மதிநுட்பத் துறை ஆய்வாளர்கள் வழிகாட்டலுக்கு: https://bit.ly/2yMBPfW

# மிஷின் லேர்னிங் குறித்த மேம்பட்ட படிப்புக்கு:  https://bit.ly/2yptYWn

# பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ‘யூ டியூப்’ வாயிலாக வழங்கும் பயிற்சிகளைப் பெற:  https://bit.ly/2DdPFNO, https://bit.ly/2ppcyUH.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x