Last Updated : 04 Aug, 2014 12:00 AM

 

Published : 04 Aug 2014 12:00 AM
Last Updated : 04 Aug 2014 12:00 AM

வேதனையைச் சொன்னால் வேலை கிடைக்குமா?

சுரேஷ் நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழையும்போதே வியர்வையைக் கைக்குட்டையால் இரண்டு மூன்று முறை துடைத்துக் கொள்கிறான். அவன் கைகள் நடுங்குவதைத் தேர்வாளர்களால் கவனிக்க முடிகிறது. எதி​ரில் உள்ள நாற்காலியில் அமரும்படி அவர்கள் சைகை காட்ட, சுரேஷ் உட்கார்ந்து கொள்கிறான். தேர்வாளர்க​ளை அவன் பார்க்கும் பார்வையில் ஒரு அதிர்ச்சி தெரிகிறது.

தேர்வாளர் 1 – எதுக்காக இப்படி இருக்கீங்க? நாங்களும் மனுஷங்கதான். தைரியமா இருங்க.

தேர்வாளர் 2 – ஸ்கூலிலும், காலேஜிலும் நல்ல மார்க் வாங்கி இருக்கீங்க.

சுரேஷ் - மின்வெட்டு தினமும் இல்லேன்னா இன்னும் நல்ல மார்க் வாங்கி இருப்பேன். எங்க வீட்ல இன்வர்ட்டர்கூட இல்ல.

தேர்வாளர் 2 – எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் ஏதாவது உண்டா?

சுரேஷ் - எங்க வீட்டுச் சூழ்நிலை அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலே சார். தவிர விளையாட்டு மைதானம் எங்க வீட்டிலேயிருந்து அரை கிலோ​ மீட்டர் தள்ளித்தான் இருந்தது. அதனாலே ஸ்போர்ட்ஸ் எதிலேயும் பங்கெடுத்துக்க முடியல்லே.

தேர்வாளர் 3 – நீங்க இதுவரை ரெண்டு நிறுவனங்களிலே வேலை செய்திருக்கீங்க.

சுரேஷ் - ஆமாம் சார். ரெண்டாவது நிறுவனத்திலே அதிக சம்பளம் கொடுக் கறேன்னாங்க. வீட்டு நிலைமைக்கு அது தேவையாக இருந்தது.

தேர்வாளர் 3 – அது ஓகே. ஆனா முதல் கம்பெனியிலிருந்து நீங்க வெளியே வந்ததுக்கும், இரண்டாவது கம்பெனியிலே சேர்ந்ததுக்கும் நடுவிலே நான்கு மாத இடைவெளி இருக்கே. ஏன்?

சுரேஷ் – (தடுமாறுகிறான். பிறகு சமாளித்துக் கொண்டு) வீட்டு நிலைமை காரணமாக அந்த இடைவெளி தேவைப்பட்டது சார்.

தேர்வாளர் 1 – அப்படி என்ன நிலைமைன்றதைத் தெரிஞ்சுக்கலாமா?

சுரேஷ் - அம்மா முதுகு வலியாலே படுத்த படுக்கையாயிட்டாங்க. அவங்களுக்கு ஏற்கனவே என் அக்காக்களுக்கு கல்யாணம் ஆகலியேன்ற கவலை.

தேர்வாளர் 1 – கல்யாணம் ஆகாத உங்க அக்காக்கள் உங்க அம்மாவைக் கவனிச்சிருக்கலாமே. இதுக்காக நீங்க எதுக்கு வேலையை விட்டீங்க?

சுரேஷ் – (திகைக்கிறான். சில நொடிகள் கழித்து) அக்காங்க வேலைக்குப் போயிட்டிருந்தாங்க சார்.

தேர்வாளர் 2 – ஓ, அப்போ அவங்க வேலை​யை விடத் தயாரா இல்லே. ஆனால் நீங்க மட்டும் வேலையை விட்டுட்டீங்களா?

சுரேஷ் - ஆமாம் சார் எனக்கு அம்மா மேலே ரொம்பப் பாசம்.

தேர்வாளர் 1 – அப்போ நாங்க வேலை கொடுத்தாலும் அதிலே நீங்க நிலைச்சு இருப்பீங்கன்னு நிச்சயமில்லே, இல்லையா?

சுரேஷ் – நோ நோ. நான் உங்க நிறுவனத்துக்கு மிகமிக விசுவாசமாக இருப்பேன்.

தேர் வாளர் 1 – எப்படி நம்புவது?

சுரேஷ் (சீரியஸாக) – உங்க நிறுவனத்தின் பெயரை என் கையிலே பச்சை குத்திக் கொள்ளவும் தயார் சார்.

தேர்வாளர் 1 – உங்க இரண்டு கைகளையும் கொஞ்சம் நீட்டிக் காட்டுங்களேன்.

(குழப்பத்துடன் சுரேஷ் இருகைகளையும் நீட்டிக் காட்டுகிறான். தேர்வாளர்களில் இருவர் கொஞ்சம் பரிகாசத்துடன் அந்த இரண்டு கைகளையும் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கியபடி ஒருவரையொருவர் பார்த்து புன்னகைக்கிறார்கள்).

சுரேஷ் – சார் இப்போ எப்படிப் பச்சை இருக்கும்? உங்க நிறுவனத்திலே வேலைக்குச் சேர்ந்த பிறகுதானே பச்சை குத்திக்கொள்வதாகச் சொன்னேன்?

தேர்வாளர் 1 – நீங்க முதலிலே வேலை பார்த்த நிறுவனத்தின் ஹெச்.ஆர். மேனேஜர் எனக்கு ரொம்பத் தெரிஞ்சவர்தான்.

சுரேஷ் – (கலவரமடைகிறான்) – என் மேலே ஒரு தப்பையும் அவராலே சொல்ல முடியாது. என் பாஸின் நடவடிக்கை பிடிக் காமல் நானேதான் ராஜினாமா செய்தேன்.

தேர்வாளர் 3 – (சற்றே கடுமையாக) சரி விடுங்க .... காலேஜிலே உங்க மெயின் சப்​ஜக்ட் என்ன?

இதைத் தொடர்ந்து அவன் படித்த பாடம் தொடர்பான கேள்விகளை மூன்று தேர்வாளர்களும் மாறி மாறிக் கேட்க, சுரேஷ் பளிச்சென்று சரியான பதில்களை அளிக்கிறான்.

நேர்முகத் தேர்வு முடிவடைகிறது.

நேர்முக அலசல்

நேர்முகத்​ தேர்வில் சுரேஷின் பங்களிப்பு பற்றிச் சிறிது அலசலாமா? தொடக்கத்தில் தேர்வாளர் கள் அவனது பதற்றத்தைப் பரிவுடன்தான் அணுகுகிறார்கள். அவனுக்குத் தைரியத்தை அளிக்க முயல்கிறார்கள். ஆனால் சீக்கிரமே அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது சுரேஷிற்கு சுய பச்சாதாபம் அதிகம் என்று. அதுவும் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் மைதானத்திற்கு அவனால் தினமும் செல்ல முடியவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.

“வீட்டு நிலைமை’’ என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார் சுரேஷ். ஏதோ உலகத்தில் இல்லாத சோதனை இவனுக்கு மட்டும் வந்துவிட்டதா எனும் எரிச்சலை இது தேர்வாளர்களிடையே உண்டு பண்ணக் கூடும்.

சுரேஷுக்கு நேர்ந்ததுபோல பணிக்காலத்தில் நடுவே சில மாதங்கள் வேலையின்றி இருக்க நேரிட்டால், அது குறித்து நிச்சயம் நேர்முகத் தேர்வில் கேள்விகள் எழுப்பப்படும். பதில்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது எந்தக் காரணமும் இன்றி இவன் வேலையை விட்டிருக்கிறான் என்றோ, இவன் பணி பிடிக்காமல் இவனை முதல் நிறுவனத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள் என்றோ யூகிக்க இடம் தரக் கூடாது. அந்தக் காலகட்டத்தில் ஏதாவது கணினி கோர்ஸ் போன்றவற்றில் சேர்ந்து பயின்றதாகக் கூறலாம். சுரேஷ் இந்த விஷயத்தில் பொய் சொன்னான் என்பதைத் தேர்வாளர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவன் கூறுவது போன்ற குடும்பச் சூழல் அமைந்திருந்தால், மிகப் பல நிறுவனங்கள் அவனுக்கு விடுப்பு கொடுத்திருக்கும். சுரேஷ் பரிதாபத்தை சம்பாதிப்பதற்காக ஒரு பொய் சொல்லத் தொடங்கி பின்னர் மாட்டிக் கொள்கிறான். நேர்முகத் தேர்வில் நம் சிறப்புகளை வெளிக்காட்ட முயல வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காகப் பொய்களைக் கூறினால் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு.

விசுவாசத்தை நி​ரூபிக்க நிறுவனத்தின் பெயரைத் தன் உடலில் பச்சை குத்திக்கொள்ளவும் தயார் என்று சுரேஷ் கூறியது மோசமான ஐடியா. (அதையே அவன் நகைச்சுவை உணர்வுடன் புன்னகையோடு கூறியிருந்தால், அது ரசிக்கப்பட்டிருக்கும்).

இப்படி அவன் கூறியவுடன் தேர்வாளர்களில் இருவர் தன் கையை எதற்காகக் காட்டச் சொல்கிறார்கள் என்பதைக்கூட சுரே​ஷால் புரிந்து கொள்ள முடியவில்லை. “இதற்குமுன் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்தீர்களே, அந்த நிறுவனங்களின் பெயரைப் பச்சை குத்திக் கொண்டீர்களா? அப்படியானால் அவற்றுக்கு நீங்கள் நாணயமாக இல்லையா?’’ என்பதை மறைமுகமாக அவர்கள் உணர்த்துவதை சுரேஷ் புரிந்து கொள்ளவில்லை.

போதாக்குறைக்கு தான் பணி யாற்றிய நிறுவனத்தின் உயர் அதிகாரி தனக்குத் தெரியு​மென்று ஒரு தேர்வாளர் கூறியவுடன் உயர் அதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் ராஜினாமா செய்ததாக சுரேஷ் ஒத்துக் கொள்கிறான். ஆக அம்மாவின் உடல் நிலை காரணமாக அவன் வேலையை ராஜினாமா செய்யும்படி நேரிட்டது என்று முன்பு கூறியது பொய் என்று அவனையும் அறியாமல் வாக்கு​மூலம் கொடுத்து விடுகிறான்.

நேர்முகத் தேர்வின் பிற்பகுதியில் என்னதான் அவனது சப்ஜெக்ட் தொடர்பாக சுரேஷ் சிறப்பாக விடையளித்தாலும், தேர்வாளர்களின் மனதில் அவனது நேர்மை குறித்த சந்தேகமும், அவனது சுய பச்சாதாபம் குறித்த வெறுப்பும் தங்கிவிட வாய்ப்பு உண்டு என்பதால், இந்த வேலைவாய்ப்பு சுரேஷிடமிருந்து விலகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x