

ராய்ப்பூர்: ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இருதரப்பு டி20 தொடரில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதன்முறையாகும்.
இந்திய மகளிர் அணி புதிய கேப்டனான ஸ்மிருதி மந்தனா தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் மந்தனாவுடன் ஷபாலி வர்மா அதிரடியில் மிரட்டக்கூடும். நடுவரிசையில் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் பலம் சேர்க்கக்கூடும்.
பந்து வீச்சில் நந்தினி சர்மா, சரணி, தீப்தி சர்மா வலுவானவர்களாக திகழ்கின்றனர். ஜிம்பாப்வே அணி கடந்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரை அணுகுகிறது. அந்த அணி ஜோஸ்பின் கோமோ தலைமையில் களமிறங்குகிறது.