

நேற்றைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 தோல்வி கற்றுத் தரும் பாடம் ஏராளம் என்றே கூற வேண்டியுள்ளது. ஒன்று டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா இங்கு ஆடிய டி20 தொடர்களில் ஆடப்பட்ட பிட்ச் கட்டாந்தரை என்பது, இரண்டாவது அணித்தேர்வில் நேற்று அக்சர் படேலை விடுத்து வாஷிங்டன் சுந்தரைக் கொண்டு வந்தது, அதை விடக் கொடுமை ரிங்கு சிங் போன்ற திறமையான வீரர் இருக்கும் போது சுந்தரை முன்னால் இறக்கி விட்டது மூன்றாவது பேட்டிங் அணுகுமுறையில் எந்த வித விவேகமும் நிதானமும் இல்லாதது.
தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் 20/3 என்பதற்குப் பிறகே எப்படி தன் அனுபவத்தைப் பயன்படுத்தி அணியை மீட்டெடுத்தாரோ அத்தகைய வீரர்கள் இந்திய அணியில் இல்லை. உண்மையில் சொல்லப்போனால் விராட் கோலி 188 ரன்களை வெற்றி பெற்றுக் கொடுத்திருப்பார். மிடில் ஓவர்களில் அவரது அனுபவம் நேற்று இந்திய அணியில் இல்லை.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்ற ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் அய்யர் போன்ற நிதானித்து பிறகு எதிரணியினரை வேட்டையாஉம் வீரர்கள் தேவை. ருதுராஜ் கெய்க்வாட் என்ன பாவம் செய்தார் என்று தெரியவில்லை. சுத்தமாக ஒழித்தே விட்டனர்.
இது ஒரு புறம் என்றால் உலகக்கோப்பைக்கு முன்பாக ஆடிய டி20 தொடர்களில் 231, 238, 271, பிறகு 209 ரன்களைச் சேஸ் செய்து 28 பந்துகள் மீதம் வைத்து வென்றது. 154 ரன்கள் இலக்கை 10 ஓவர்களில் வென்றது என்று ஆடி ஆடி கொஞ்சம் வித்தியாசமான பிட்சில் தரமான பந்து வீச்சை எப்படி அணுகுவது என்று தெரியாமல் ஆடியது இந்திய அணி.
மார்க்ரம் பந்தை இஷான் கிஷன் அப்படியா ஆடுவது? அல்லது திலக் வர்மா வந்தவுடன் ஏன் டவுன் த டிராக் வந்து ஆட்டமிழக்க வேண்டும். அபிஷேக் சர்மா 3 டக் அவுட்களுக்குப் பிறகு அணுகுமுறையை மாற்றியிருக்க வேண்டாமா? போன்ற கேள்விகள் எழுவதோடு பவர் ப்ளேயில் சடுதியில் 3 விக்கெட்டுகள் இழந்த பிறகு அணியை வழிநடத்த டெக்னிக்கலி சிறந்த பேட்டர் இல்லை. அங்குதான் ஸ்ரேயஸ் அய்யர் தேவைப்படுகிறார். மார்க்ரம் முதல் ஓவரை வீசும் போது நிதானித்து அவரை அப்புறப்படுத்த ஜெய்ஸ்வால் தேவை.
பொதுவாகவே நிதானத்துடன் திட்டமிட்டு ஆடும் ருதுராஜ் தேவை. கே.எல்.ராகுல் தேவை. அப்படி எல்லாம் யோசிக்காமல் வெறும் அதிரடி, தூக்கித்தூக்கி பந்தை ஆடி மைதானத்திற்கு வெளியே அனுப்பு என்பது டெஸ்ட் போட்டிகளில் மெக்கல்லம்மின் பாஸ்பாலைப் பின்பற்றி நாறிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி போல் இந்திய டி20 அணியை மாற்றும் முயற்சியாகும். ஐசிசி பிட்ச்கள் பிசிசிஐ பிட்ச்கள் அல்ல என்பது கம்பீர் போன்ற பயிற்சியாளர்களுக்குத் தெரிய வேண்டாமா?
அதுவும் இந்தத் தொடரில் இந்திய டாப் ஆர்டர் தடுமாற்றத்துடன் தொடங்குகின்றனர், விக்கெட்டுகளை இழக்கின்றனர் என்று தெரிந்தும் இப்படி ஆடத் துணியலாமா? பிட்ச், சூழ்நிலை, எதிரணிகளின் திறமை, எதிரணிகளின் உத்தி, தனிப்பட்ட பந்து வீச்சாளர்களின் அதிசயத் திறன் என்று அனைத்து சிரமங்களையும் கடந்து விட்டது இந்த அதிரடி இந்திய அணி என்று போலி பில்ட் அப் கொடுக்கப்பட்டதுதான் இத்தகைய தோல்விகளுக்குக் காரணம்.
பந்துகளை அது வரும் லைனிலேயே நேராக மட்டையை விட்டு தூக்கி அடிக்கும் பிட்ச்கள் அல்ல இவை. இங்கு கொஞ்சம் மரபான அணுகுமுறை, உத்திகள் தேவை. பும்ராவும் அர்ஸ்தீப்பும் வீசும் போதே பந்து கொஞ்சம் ஸ்டாப் ஆகி வருவதை இந்திய பேட்டர்கள் பார்க்கவில்லையா? முதலில் பலதரப்பட்ட பிட்ச்கள் போடப்பட்டு அதில் விளையாடி கரைகாண வேண்டும், ஒரே ரக தார்ச்சாலைகளைப் போட்டு 250-300 என்று அடித்துப் பழகினால் இப்படி அதிர்ச்சிகரமான தோல்விகளை எதிர்பாரா பிட்ச்களில் சந்திக்கவே நேரிடும்.
இந்தத் தொடரில் மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாக தொடக்க வீரர்களில் ஒருவர் ஸ்பின் பந்து வீச்சில் ஆட்டமிழப்பதைப் பார்த்து வருகிறோம். இந்திய அணி ஒரே மாதிரியான பிட்ச்கள் கொண்ட போட்டிக்கு தங்கள் டாப் ஆர்டரைத் தயார் செய்து வைத்துள்ளது. மாற்றுப் பிட்ச்களுக்கு சரியான தயாரிப்பு இல்லை, அணித்தேர்வு யோசனையும் இல்லை, அணுகுமுறையும் இல்லை.
குறைந்தது தோனி கேப்டனாக இருந்தால் என்ன செய்திருப்பார் என்றால் பவர் ப்ளேயில் டாப் ஆர்டர் காலியாகி விட்டதா, இந்த வெற்றி என்பதை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு முதலில் நெட் ரன் ரேட்டிற்காக ஆடியிருப்பார். 111 என்பதற்குப் பதிலாக 160-165 என்று ஆல் அவுட் ஆகியிருந்தால் நெட் ரன் ரேட் பாதித்திருக்காது, அதையாவது செய்திருக்க வேண்டும்.
முதலில் அணியில் வெறும் நெட் பேட்ட்ர்கள் நெட் பவுலர்களைத் தூக்கித் தூக்கி அடிக்கும் ரக வீரர்கள் பலரை வைத்திருப்பதை மாற்றி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ருதுராஜ், ஸ்ரேயஸ் அய்யர் போன்றோரை இந்த அணியுடன் கலந்து சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவாறு அணிச்சேர்க்கையை மாற்றி பயன்படுத்துமாறு அணியைக் கட்டமைக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற தோல்விகள் வழக்கமாவதைத் தடுக்க முடியாது.