

அகமதாபாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. குயிண்டன் டி காக் 6 ரன்களில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியாவிடம் எளிதாக கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ரியான் ரிக்கெல்டன் 7 ரன்கள் எடுத்த நிலையில் மிட் ஆஃப் திசையில் நின்ற ஷிவம் துபேவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியை சந்தித்தது. ஆனால் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் ஜோடி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு இந்திய அணியியின் பந்துவீச்சு துறைக்கு நெருக்கடியை கடத்தியது.
வருண் சக்ரவர்த்தி வீசிய 5-வது ஓவரில் டேவிட் மில்லர் 2 பவுண்டரிகள் விரட்ட 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் வீசிய 7-வது ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டன.
இதன் பின்னர் வருண் சக்ரவர்த்தி வீசிய 9-வது ஓவரில் டேவிட் மில்லர் சிக்ஸர் விளாச, டெவால்ட் பிரேவிஸ் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விரட்டினார். இந்த ஓவரில் வருண் சக்ரவர்த்தி 17 ரன்களை வாரி வழங்கினார்.
ஹர்திக் பாண்டிய வீசிய அடுத்த ஓவரில் டேவிட் மில்லர் சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 84 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே வீசிய அடுத்த ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 15 ரன்கள் விளாசப்பட்டன.
அடுத்த ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி 12 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். மட்டையை சுழற்றிய டெவால்ட் பிரேவிஸ் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் துபே பந்தில் மிட்விக்கெட் திசையில் அபிஷேக் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் ஜோடி 51 பந்துகளில் 97 ரன்களை வேட்டையாடியது.
தனது 9-வது அரை சதத்தை அடித்த டேவிட் மில்லர் 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசிய நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் லாங் ஆஃப் திசையில் நின்ற திலக்வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கார்பின் போஷ் 2 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேறினார்.
கார்பின் போஷ் 5 ரன்களில் பும்ரா பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். 14 முதல் 19 ஓவர் வரையிலான காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த 6 ஓவர்களில் அந்த அணி 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 167 ரன்கள் எடுத்திருந்தது.
ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்களை வேட்டையாடினார். முடிவில் 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 44 ரன்கள் விளாசினார்.
பந்துவீச்சில் இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களை வீசி 47 ரன்களை தாரை வார்த்த நிலையில் ஒரு விக்கெட் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீசி 45 ரன்களை வாரி வழங்கிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. ஷிவம் துபே 2 ஓவர்களை வீசி 32 ரன்களை தாரை வார்த்து ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. எய்டன் மார்க்ரம் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மார்கோ யான்சன் வீசிய அடுத்த ஓவரில் திலக் வர்மா ஒரு ரன்னில் நடையை கட்டினார். அபிஷேக் சர்மா 12 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் வீசிய வேகம் குறைந்த பந்தை மிட்விக்கெட் திசையில் விளாசிய போது கார்பின் போஷிடம் கேட்ச் ஆனது.
26 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்த இந்திய அணியின் ரன் குவிப்பு வேகம் மந்தமானது. 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் கார்பின் போஷ் வீசிய பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்ற டெவால்ட் பிரேவிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஜோடி இணைந்தது. 10 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா கேசவ் மகாராஜ் வீசிய11-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
15-வது ஓவரை வீசிய கேசவ் மகாராஜ் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி மிரளச் செய்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா, லாங் ஆஃப் திசையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர்.
88 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த இந்திய அணியின் நம்பிக்கை தளர்ந்தது. ரபாடா வீசிய அடுத்த ஓவரில் ஷிவம் துபே 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். தொடர்ந்து கார்பின் போஷ் வீசிய 17-வது ஓவரில் ஒரு ரன்னும், லுங்கி நிகிடி வீசிய அடுத்த ஓவரில் 3 ரன்னும் சேர்க்கப்பட்டது. மார்கோ யான்சன் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஷிவம் துபே 4-வது பந்தில் ஃபைன் லெக் திசையில் லுங்கி நிகிடியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
ஷிவம் துப 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய ஜஸ்பிரீத் பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். முடிவில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன் 4 விக்கெட்களையும், கேசவ் மகாராஜ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கார்பின் போஷ் 2, எய்டன் மார்க்ரம் ஒரு விக்கெட் கைப்பற்றினர். 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 புள்ளிகளை பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 26-ம் தேதி ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது.