

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன் நேற்றைய போட்டிக்கு முந்தைய போட்டியில் 230 ரன்களைத் தடுக்க முடியாமல் தோற்றது. நேற்று 226 ரன்கள் எடுத்தும் தோற்றது. அன்று டாஸ் வென்ற எதிரணி இவர்களை பேட் செய்ய அழைத்து வென்றது. நேற்று ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதுவும் ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான ஸ்டார்க் பந்து சிக்சருக்குப் பிறகே ஃபுல்டாஸில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அதே போல் சூரியவன்ஷி எதிர்பார்த்ததைப் போல் கைலி ஜேமிசனை நேராகப் பளார் என்று பவுண்டரி விளாசி அடுத்த பந்தே செம யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேற, ராஜஸ்தானுக்கு சிக்கல் தொடங்கியது. ஆனால் கேப்டன் பராக் தன் விமர்சகர்களுக்குப் பதில் தரும் முகமாக 50 பந்துகளில் 90 ரன்களை 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் விளாச, துருவ் ஜுரெல் 30 பந்துகளில் 42 என்று சுணக்கம் காட்டினார்.
ஜடேஜாவை முன்னால் இறக்கி ரியான் பராக் பெரும் தவறு செய்தார். ஜடேஜாவைக் கண்டு எதிரணி பவுலர்கள் யாரும் அஞ்ச மாட்டார்கள். மாறாக டோனவன் ஃபெரேராவை இறக்கியிருந்தால் ஸ்கோர் இன்னும் 30 ரன்கள் கூடுதலாகியிருந்திருக்கும், டெல்லி சேஸ் செய்திருக்க வாய்ப்பில்லை. டொனோவன் பெரெரா போன்று 14 பந்துகளில் அரைசதம் பக்கம் வருமாறு அடிக்கும் டெத் ஓவர் பிளேயர்கள் இப்போது அரிதிலும் அரிது.
ஏன் அவரை விடுத்து ஜடேஜாவை இறக்க வேண்டும். ஜடேஜா பவுலிங்கிலும் 3 ஓவர்கள் வீசி 33 ரன்கள் என்று அணியில் தேவையற்ற லக்கேஜ் ஆக இருந்து வருகிறார். பெரேரா யார்க்கர்களை அனாயசமாக சிக்சர் விளாசுகிறார். ஜடேஜாவை ஏன் முன்னால் இறக்க வேண்டும் என்று கேட்டால் பராக், ஒரு அரதப் பழசான கருத்தை முன் வைத்தார், இடது, வலது காம்பினேஷன் என்கிறார். அதெல்லாம் டி20-யில் தேவையில்லாத ஆணியே. ஜடேஜாவினால் ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆட முடியவில்லை என்பது ஊரறிந்த விஷயம்.
துருவ் ஜுரெல், பராக் கூட்டணியே கூட ஆங்காங்கே கருணையற்ற அடி என்பதை மறந்து ஏனோ தானோ என்று ஆடியதும் தோல்விக்கு இன்னொரு காரணம், குறிப்பாக 9வது ஓவரில் அக்சர் படேலை இரண்டு டவரிங் சிக்சர்களை விளாசிய பராக் அந்த ஓவரை முழுதும் காய்ச்சி எடுத்திருக்க வேண்டும் மாறாக ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து 2 சிங்கிள் 2 டாட்பால்கள் என்று அந்த ஓவர் வீணடிக்கப்பட்டது. அடுத்த குல்தீப் ஓவரிலும் 6 ரன்களையே எடுத்தனர். ஜுரெல், பராக் இருவருமே அடிக்கப் பார்க்காமல் பந்தைத் தள்ளி விட்டு ஒன்று அல்லது இரண்டு ரன்களுக்காகவே பார்த்தனர். ஒரு புது பவுலர் வருகிறார் என்றால் அவரை முதலிலேயே அடித்து அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், ஆனால் பராக், ஜுரெல் இருவரும் பூப்பந்து விளையாடினர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமுனையில் அதிரடி இன்னொரு முனையில் ஃபிடில் வாசிப்பது என்பதெல்லாம் போய் விட்டது. இரு முனைகளிலிருந்தும் ரன்கள் குவிய வேண்டுமென்பதே நடப்பு ஐபிஎல் தொடரின் தாரக மந்திரம். இப்படியாக வழக்கொழிந்த முறையில் ராஜஸ்தான் ஆடியதால் நேற்று 225 ரன்கள் எடுத்தும் தோற்க நேரிட்டது.