

ரபாடா கடந்த 3 ஐபிஎல் சீசன்களாகவே சரியாக வீசுவதில்லை, அவரது சிக்கன விகிதமும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கிட்டத்தட்ட ஓவருக்கு 12 ரன்கள் என்ற சிக்கன விகிதம் ரபாடா போன்ற திறமையான பவுலர்களுக்கானதல்ல. அவர் செய்யும் தவறு என்ன?
ரபாடா கடந்த காலத்தில் ஐபிஎலில் தனது தாக்கத்தை வெளிப்படுத்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், சமீபத்திய சீசன்களில் அவரது பந்துவீச்சுத் திறன் குறைந்து வருவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பர்ப்பிள் கேப்பை வென்ற ரபாடா, அப்போது 8.34 என்ற பொருத்தமான எகானமி ரேட்டுடன் சிறப்பாக விளங்கினார். தொடர்ந்து 2021 மற்றும் 2022 சீசன்களிலும் 8.50-க்கு உட்பட்ட எகானமி ரேட்டை வைத்திருந்தார்.
ஐபிஎல் 2026-க்கு முந்தைய மூன்று சீசன்களில் அவர் பதிவு செய்த எகானமி ரேட்டுகள் 10.09, 8.86 மற்றும் 11.57 ஆகும். இந்த மூன்று சீசன்களில் மொத்தம் 21 போட்டிகளில் வெறும் 20 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். டேல் ஸ்டெய்ன் மற்றும் அம்பாட்டி ராயுடு இருவரும் ஈஎஸ்பின் கிரிக் இன்போ தளத்தின் டைம்டு அவுட் நிகழ்ச்சியில் ரபாடாவின் பவுலிங்கை விவாதித்தனர்:
டேல் ஸ்டெய்ன் கூறும்போது, “ரபாடா தனது பந்துவீச்சில் லெந்த் குறித்த ஒருவித தேடலில் இருப்பது போல தெரிகிறது. ரபாடா எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு விளையாடவில்லை. அதேசமயம், Marco Jansen தனது திறமைகளை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து முன்னேறி வருகிறார். மார்க்கோ யான்சென் கோப்பைகளை வெல்லும் அணியில் ஆடுகிறார். தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் 4 ஆண்டுகளில் 3 கோப்பைகளை வென்ற சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் ஆடுகிறார் யான்சென்.
இது உயர்மட்டத்தில் நம்மால் செயல்திறனைக் காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியது. மாறாக ரபாடா எந்த வித கோப்பையையோ, மெடல்களையோ சமீபத்தில் வெல்லவில்லை. அவரது ஆட்டத்திறனும் சரிவடைந்து வருகிறது. அவர் ஒரு ரியல் விக்கெட் டேக்கர், நிச்சயம் இந்த சீசனில் அவர் மீண்டெழுவார் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
அம்பாத்தி ராயுடு இன்னும் துருவி ஆராய்ந்து கூறுகையில், “பந்தின் தையலை நேராகப் பிடித்து யார்க்கர்களை ரபாடா அருமையாக வீசுவதைப் பார்த்திருக்கிறோம், சமீபமாக அவர் யார்க்கர்களை இழந்து விட்டார். இதை விடுத்து அவர் பந்தின் தையலை குறுக்காகப் பிடித்து வீசுகிறார். இதனால்தான் இறுதி ஓவர்களில் அவரால் சரியாக வீச முடிவதில்லை. அவர் முன்பு இறுதி ஓவர்களை அருமையாக வீசி வந்தார். எனவே கிராஸ் சீம் பந்துகளை விடுத்து மீண்டும் பந்தின் தையலை நேராகப் பிடித்து யார்க்கர்களை அவர் வீசினால் மீண்டும் சிறந்த இடத்திற்குத் திரும்புவார் என்று நினைக்கிறேன்” என்றார்.