இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைமைப் பதவிக்கு வாசிம் ஜாஃபர் விண்ணப்பம்!

இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைமைப் பதவிக்கு வாசிம் ஜாஃபர் விண்ணப்பம்!
Updated on: 
2 min read

முன்னாள் இந்திய கிரிக்கெட் ஓப்பனரும், உள்நாட்டுக் கிரிக்கெட்டில் சிகரம் தொட்டவருமான மும்பை அணியைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் வாசிம் ஜாஃபர் இந்திய அணித்தேர்வுக்குழு தலைமைப் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.

அதிக டெஸ்ட் போட்டிகள் அதாவது 31 டெஸ்ட்கள் விளையாடியவர் என்பதால் இவருக்கு அந்தப் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்தப் பதவி காலியாகியுள்ளது. இது தொடர்பாக வாசிம் ஜாஃபர் பிடிஐ கேள்வி எழுப்பிய போது, “ஆம், அந்தப் பதவிக்கு நான் விண்ணப்பித்துள்ளேன்” என்று தகவலை உறுதி செய்தார்.

48 வயதான ஜாஃபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் அடித்துள்ளார். இதில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த இரட்டைச் சதங்களும் அடங்கும். 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை நீடித்த அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 34.10 சராசரியுடன் 1,944 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2006-ம் ஆண்டு அவர் 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் ஜாஃபருக்கு மிகச் சிறப்பான சாதனை உள்ளது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், அந்தத் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரரும் அவர்தான். ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட்டில் 260 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாஃபர், 50-க்கும் அதிகமான சராசரியுடன் 19,410 ரன்களையும் 57 சதங்களையும் விளாசியுள்ளார்.

1996-97 சீசனில் மும்பை அணிக்காக சீனியர் கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடங்கிய ஜாஃபர், விதர்பா அணிக்காக விளையாடியபோது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பராஞ்ச்பே ஆகியோர் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC), ஜாஃபரை தேர்வு செய்தால், தேர்வாளர் குழுத் தலைவர் பதவிக்குப் பரிசீலிக்கப்படும் வேட்பாளர்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதனால் அவர் தேர்வுக் குழுத் தலைவராகவும் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.

தற்போது பரிசீலனையில் உள்ள மற்றொரு முக்கிய வேட்பாளரான பிரக்யான் ஓஜாவை விட ஜாஃபர் 7 டெஸ்ட் போட்டிகள் அதிகமாக விளையாடியுள்ளார். ஓஜா 24 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். தற்போதைய தேர்வுக் குழுவில் பிரக்யான் ஓஜாவுடன் ஆர்.பி. சிங், அஜய் ரத்ரா மற்றும் சிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாசிம் ஜாஃபரின் சாதனைத் துளிகள்:

ரஞ்சி கோப்பை: ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை வாசிம் ஜாஃபர் வைத்துள்ளார். அவர் 12,038 ரன்கள், அதிகபட்சமாக 156 போட்டிகள், 40 சதங்கள், மேலும் 200 கேட்ச்கள் பிடித்தவர் என்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.

ஒரே சீசனில் 1,000 ரன்கள்: ஒரே ரஞ்சி கோப்பை சீசனில் 1,000 ரன்களுக்கு மேல் இரண்டு முறை குவித்த ஒரே பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபர். அவர் 2008-09 மற்றும் 2018-19 சீசன்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

துலீப் கோப்பை: துலீப் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஜாஃபர். அவர் மொத்தம் 2,545 ரன்கள் எடுத்துள்ளார்.

இரானி கோப்பை: இரானி கோப்பை வரலாற்றிலும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை ஜாஃபருக்கு உண்டு. அவர் 1,294 ரன்கள் குவித்துள்ளார்.

இறுதிப் போட்டி சாதனை: தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாஃபர் ஒருமுறைகூட ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததில்லை. மும்பை மற்றும் விதர்பா அணிகளின் பல்வேறு பட்டம் வென்ற அணிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைமைப் பதவிக்கு வாசிம் ஜாஃபர் விண்ணப்பம்!
தொழில் போட்டிக்கு ஒரு​போதும் அஞ்சவில்லை: எலான் மஸ்குக்கு ரிலையன்ஸ் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in