

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி தொடக்கம் கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்டினார் டிராவிஸ் ஹெட்.
அதேவேளையில் நிதானமாக விளையாடிய அபிஷேக் சர்மா 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் கார்த்திக் தியாகி 144 கிலோ மீட்டர் வேகத்தில் பேக் ஆஃப் தி லென்ந்த்தில் வீசிய பந்தை விளாச முயன்ற போது மிட்விக்கெட் திசையில் நின்ற கேமரூன் கிரீனிடம் கேட்ச் ஆனது.
முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி 3.4 ஓவர்களில் 44 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இஷான் கிஷன் களறிமிங்கினார். கேமரூன் கிரீன் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்தார். மறுபுறம் கார்த்திக் தியாகி வீசிய 6-வது ஓவரில் இஷான் கிஷன் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்டார். இதனால் பவர்பிளேவில் ஹைதராபாத் அணி 71 ரன்கள் குவித்தது.
வருண் சக்ரவர்த்தி வீசிய 7-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். மட்டையை சுழற்றிய டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசிய நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். டீப் மிட்விக்கெட் திசையில் டிராவிஸ் ஹெட் அடித்த பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் செய்தார். 2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் ஜோடி 61 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் அந்த அணி ஆட்டம் கண்டது. ஹெய்ன்ரிச் கிளாசன் 11 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் கிரீன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் விளாசினார். அப்போது மின்னல் வேகத்தில் ஓடிவந்த ரோவ்மன் பவல் அந்தரத்தில் பாய்ந்தபடி டைவ் அடித்து கேட்ச் செய்தார். இந்த கேட்ச் வியக்க வைக்கும் வகையில் அமைந்தது.
இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் சமரன் 4, அனிகேத் வர்மா 6, சலில் அரோரா 2 ரன்களில் நடையை கட்டினர். சீராக விளையாடி வந்த இஷான் கிஷன் 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் பந்தை லாங்க் ஆஃப் திசையில் விளாசிய போது அனுகுல் ராயிடம் கேட்ச் ஆனது.
இதைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ் 10, ஷிவங்க் குமார் 1, ஹர்ஷால் படேல் 6 ரன்களில் நடையை கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. இதனால் அந்த அணி 200 முதல் 220 ரன்களை எளிதாக குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருண் சக்ரவர்த்தியும், சுனில் நரைனும் அற்புதமாக செயல்பட்டதால் அடுத்த 11 ஓவர்களில் ஹைதராபாத் அணியால் 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த காலக்கட்டத்தில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்களை கொத்தாக தாரைவார்த்தது.
கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களை வீசி 36 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். சுனில் நரைன் 4 ஓவர்களை வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், கார்த்திக் தியாகி 4 ஓவர்களை வீசி 30 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். வைபவ் அரோரா, கேமரூன் கிரீன், அனுகுல் ராய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
166 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அங்ரிஷ் ரகுவன்ஷி 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், கேப்டன் அஜிங்க்ய ரஹானே 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், ஃபின் ஆலன் 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் விளாசினர்.
ரிங்கு சிங் 11 பந்துளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களும், கேமரூன் கிரீன் 3 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக வருண் சக்ரவர்த்தி தேர்வானார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.
9 ஆட்டங்களில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தொடர்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.