

இந்திய அணிக்கு வரவிருக்கக் காத்திருக்கும் நட்சத்திர பதின்ம வயது அதிரடி மன்னன் வைபவ் சூரியவன்ஷி வரும் ஐபிஎல் 2026 தொடரில் என்னென்ன சாதனைகளையெல்லாம் முறியடிப்பாரோ என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்க அவரோ ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்லின் 175 ரன்கள் என்னும் ஐபிஎல் அதிகபட்ச ஸ்கோரை முறியடிக்கக் குறிவைத்திருக்கிறார்.
டெல்லியில் நடந்த பிசிசிஐ விருது விழாவில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னபோது, பிஹாரின் இளம் புலி வைபவ் சூரியவன்ஷி எந்த தயக்கமும் இல்லாமல் கெய்லின் தனிப்பட்ட சாதனையை உடைப்பதே தன் கனவு எனக் குறிப்பிட்டார். கெய்ல் 2013 ஐபிஎல்-ல் அடித்த அந்த 175* இன்னும் T20 கிரிக்கெட்டில் மிக உயர்ந்த தனிப்பட்ட ஸ்கோர், இது இன்னும் யாராலும் கடக்கப் பட முடியவில்லை.
கிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணிக்கு ஆடிய போது புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராகப் போட்டுப் புரட்டி எடுத்த மிகப்பெரிய டி20 இன்னிங்ஸ் தான் அது. அனைத்து டி20களிலும் கெய்லின் இந்த 175 ரன்கள்தான் மிகப்பெரிய தனிப்பட்ட ஸ்கோர். சர்வதேச டி20-யில் ஆஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேயில் 2018-ல் எடுத்த 172 ரன்கள் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராக இருந்தாலும் கெய்லுக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளது.
‘எனக்கு முதல் பந்து ஸ்ட்ரைக் கிடைச்சுதுன்னா முதல் பந்தே சிக்ஸ் தான்’ என்பதே வைபவ் சூரியவன்ஷியின் தாரக மந்திரம் என்கிறார் சஞ்சு சாம்சன். 2025-ல் நடந்த ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் யுஏஇ-க்கு எதிராக சஞ்சு சாம்சன் 144 ரன்களை விளாசினார். 18 டி20 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை விளாசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக சதமாக 35 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். அதுவும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக என்றால் சும்மா இல்லை.
இந்நிலையில் ஜியோ ஸ்டாருக்கு சூரியவன்ஷி கூறும்போது, “ஐபிஎல் 2026-ன் முதல் இலக்கு கோப்பையை வெல்வது. ஏனெனில் இதுதான் மிக முக்கியமானது. டீம் கோப்பையை வென்றால் நான் நிச்சயம் அதில் பெரிய பங்களித்திருப்பேன் என்றே பொருள், அதனால் அணி பெரிய அளவில் பயன்பெறும். ஆகவே அதுதான் லட்சியம், அணிக்குப் பங்களிப்பு செய்து அணியைக் கோப்பையை வெல்லச் செய்ய வேண்டும்.
பிறகு ஹர்ஷா போக்ளே தன் கேள்வியை மாற்றி, ‘அதிவேக ஐபிஎல் சதம்? ஒரு ஓவரில் 6 சிக்சர்கள்? அல்லது கிறிஸ் கெய்லின் டாப் ஐபிஎல் ஸ்கோரான 175-ஐ முறியடிப்பது?’ எது உங்கள் இலக்கு என்று கேட்க வைபவ் சூரியவன்ஷி கிறிஸ் கெய்லின் 175 ரன்களைக் கடப்பதையே குறிவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.