

இகா ஸ்வியாடெக்
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு 4-வது சுற்றில் விளையாட அமெரிக்காவின் கோகோ காஃப், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இதேபோல் ஜெர்மனி வீரரும், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான அலெக்சாண்டர் ஜிவரேவ் ஆடவர் பிரிவு 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான கோகோ காஃப், ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா ஆகியோர் மோதினர். இதில் கோகோ காஃப் சிறப்பாக விளையாடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கிறிஸ்டினாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 3-வது சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக்கும், தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள செக் குடியரசு வீராங்கனை மேரி பவுஸ்கோவாவும் மோதினர். இதில் இகா ஸ்வியாடெக் 7-6 (7/3), 7-6 (7/3) என்ற செட் கணக்கில் மேரி பவுஸ்கோவாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
மற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டங்களில் தரவரிசையில் 5-வது இடத்தில் மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) 6-2, 7-6 (7/5) என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீராங்கனை நிக்கோல் பார்துன்கோவாவையும், தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் அனஸ்தாஷியா போடபோவா 6-2, 7-5 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவையும், தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் இவா ஜோவிக் 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்ஸின் அலெக்சாண்டர் ஈலாவையும் தோற்கடித்தனர்.
சீனாவின் ஜெங் கின்வென் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மாடிஸன் கீஸையும், ஜப்பான் வீராங்கனையும், தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்ட்டென்ஸையும் சாய்த்தனர்.
ரைபகினா அபாரம்
கஜகஸ்தான் வீராங்கனையும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான எலீனா ரைபகினா 7-6 (8/6), 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோடப்ட்சேவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜிவரேவ் 6-2, 7-6 (7/2), 6-2 என்ற செட் கணக்கில் சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோவைத் தோற்கடித்து 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீரர் லூசியானோ டார்டெரி 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டேன் ஸ்வீனியையும், பிரான்ஸின் ஆர்த்தர் ஜியா 7-6 (9/7), 3-6, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் ஜெங்கையும், நெதர்லாந்தின் போட்டிக் வான் டி ஜான்ட்ஷல்ப் 3-6, 7-6 (7/3), 4-6, 7-6 (8/6), 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ஜிஜோவ் பெர்க்ஸையும் வீழ்த்தினர்.
பாம்ப்ரி-வீனஸ் ஜோடி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது.
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் யூகி பாம்ப்ரி, மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன், பாட்ரிக் டிர்ஹாக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் செக்கர்மேன், பாட்ரிக் ஜோடி 7(7)-6(4), 7(7)-6(3) என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி, வீனஸ் ஜோடியை வீழ்த்தியது.
அதேபோல் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், பெலாரஸின் இவான் லியூட்டர்எவிச் ஜோடி 4-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஆர்த்தர் பெர்ரி, ஜோஷுவா பாரிஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.