திலக் வர்மா அரை சதம் விளாசல்: இறுதிப் போட்டியில் தென் மண்டலம் - சேப்பாக்கத்தில் 6-ம் தேதி கிழக்கு மண்டலத்துடன் மோதல்

திலக் வர்மா அரை சதம் விளாசல்: இறுதிப் போட்டியில் தென் மண்டலம் - சேப்பாக்கத்தில் 6-ம் தேதி கிழக்கு மண்டலத்துடன் மோதல்
Updated on
1 min read

பெங்களூரு: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டலம் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் மண்டலம் அணி.

பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டலம் 195 ரன்களும், கிழக்கு மண்டலம் 312 ரன்களும் எடுத்தன. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வடக்கு மண்டலம் அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 72.4 ஓவர்களில் 297 ரன்கள்சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக சனத் சங்க்வான் 76, ஆயுஷ் டோசேஜா 52, அன்ஷுல் கம்போஜ் 36, நிஷாந்த் சிந்து 35, ஆயுஷ் பதோனி 31 ரன்கள் சேர்த்தனர். தென் மண்டலம் அணி தரப்பில் முகமது நிதீஷ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 181 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் மண்டலம் அணி 43.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரிக்கி புயி 42, நாராயணன் ஜெகதீசன் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஷேய்க் ரஷீத் 1 ரன்னில் நடையை கட்டினார். கேப்டன் திலக் வர்மா 79 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், ரவிச்சந்திரன் சமரன் 42 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 89 பந்துகளில், 80 ரன்கள் சேர்த்தது. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் மண்டலம் அணி வரும் 6-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் அணியுடன் மோதுகிறது.

திலக் வர்மா அரை சதம் விளாசல்: இறுதிப் போட்டியில் தென் மண்டலம் - சேப்பாக்கத்தில் 6-ம் தேதி கிழக்கு மண்டலத்துடன் மோதல்
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாரக் கடைசி நாட்களை முன்னிட்டு 4,260 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in