

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 4,260 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வியாழக்கிழமை 910 பேருந்துகளும், நாளை வெள்ளிக்கிழமை 740 பேருந்துகளும், நாளை மறுநாள் சனிக்கிழமை 880 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர்.
பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 210 பேருந்துகளும், நாளை 115 பேருந்துகளும், நாளை மறுநாள் 115 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து இன்று முதல் சனிக்கிழமை வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஒசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை 805 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்கு செல்ல இன்றைய தினத்துக்கு 14,016 பேரும், நாளைக்கு 8,688 பேரும், நாளை மறுநாளுக்கு 6,459 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதுபோல் ஞாயிற்றுக்கிழமை பயணத்துக்கு 14,239 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.