

ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிந்த டர்பன் கிங்ஸ்மீட் மைதான டெஸ்ட் போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்களின் எண்ணிக்கை விவரம் டெஸ்ட் கிரிக்கெட் மெல்ல இனிச் சாகும் என்பதற்கு ஒரு அறிகுறியாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மொத்தமாகவே 5 நாட்களுக்கும் 15-20 ஆயிரம் பேர் வந்திருந்தால் பெரிய விஷயம் என்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 4000 பேர் நேரில் பார்க்க வந்துள்ளனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
உள்நாட்டுக் கலவரம்: குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றதுடன், மைதானத்திற்கு அருகிலுள்ள டர்பன் மத்திய வர்த்தகப் பகுதியில் (Durban CBD) பலத்த பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விலைவாசி ஏற்றம்: போட்டி நடைபெற்ற காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருந்ததுடன், பெட்ரோல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்தது.
பிற விளையாட்டு நிகழ்வுகளின் போட்டி: அதே வார இறுதியில் அருகிலுள்ள மோசஸ் மபிடா மைதானத்தில் (Moses Mabhida Stadium) நடைபெற்ற MTN8 கால்பந்து இறுதிப்போட்டி உள்ளிட்ட பிற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு ரசிகர்கள் திரண்டது.
இம்மூன்று காரணங்களில் மூன்றாவது காரணம் நிச்சயம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தவே செய்யும். ஏனெனில் அந்தச் சனிக்கிழமையில் ஆர்லாண்டோ பைரேட்ஸ் அணிக்கும் மேம்லோடி சண்டவுன்ஸ் என்ற அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டிக்குத்தான் 50 ஆயிரம் பேர் வந்து போட்டியை நேரில் ரசித்துள்ளனர். இந்தப் போட்டி நடைபெற்ற மோசஸ் மபிடா மைதானம் டெஸ்ட் போட்டி நடைபெற்ற கிங்ஸ்மீட் மைதானத்திலிருந்து நடந்து எட்டிவிடக் கூடிய தூரமே.
இத்தனைக்கும் இந்த இரண்டு கால்பந்து கிளப்புகளும் டர்பன் நகரைச் சேர்ந்தவை அல்ல என்பதும் கூடுதல் ஆச்சரியம். தேசிய அணியின் கிரிக்கெட் போட்டியை அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியைத் துறந்து கால்பந்து போட்டிக்கு இத்தனைக் கூட்டம் வந்துள்ளது என்றால் நிச்சயம் அது டெஸ்ட் போட்டிகள் குறித்த தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றமே.
இது தொடர்பாக முன்னாள் தென் ஆப்பிர்க்க பேட்டர் டேரில் கலினன் கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறும்போது, “ஒரு கால்பந்து இறுதிப்போட்டியும், ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் வெவ்வேறானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது.
தென்னாப்பிரிக்கர்கள் தாங்கள் விரும்பும் விளையாட்டுக்காக பயணம் செய்யவும், பணம் செலவிடவும், தங்களது வாழ்க்கை முறையையே அதற்கேற்ப திட்டமிடவும் தயாராக இருக்கிறார்கள். நாட்டின் பெரும் பகுதி மக்களிடையே கிரிக்கெட் மீதான இதுபோன்ற ஈடுபாட்டையும் பற்றுதலையும் ஏன் உருவாக்கத் தவறிவிட்டது என்பதை கிரிக்கெட் நிர்வாகம் தன்னைத்தானே கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.” என்கிறார்.
உண்மைதான் தென் ஆப்பிரிக்கா வாரியம் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் வாரியங்கள் கூட்டமைப்பான ஐசிசியும் இதனை பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.