

பாசல்: சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தருண் மனேப்பள்ளி, போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடாவுடன் மோதினார்.
இதில் தருண் மனேப்பள்ளி 16-21, 21-16, 7-2 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது கென்டா நிஷிமோடா தோள்பட்டை காயம் காரணமாக விலகினார். இதனால் தருண் மனேப்பள்ளி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் தருண் மனேப்பள்ளி, மலேசியாவின் ஜஸ்டின் ஹோவுடன் மோதுகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்குடன் மோதினார். இதில் மாளவிகா பன்சோத் 11-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.