

ஹாமில்டன்: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனிலுள்ள செடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதவுள்ளது.
முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார் சிறப்பாக செயல்பட்டு நியூஸிலாந்து வீரர்களைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக 2-வது ஆட்டத்தில் குர்னூர் பிரார் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். எனவே, இன்றைய ஆட்டத்திலும் கம்போஜ், பிரார், அகிப் நபி, அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய கூட்டணி நியூஸிலாந்தின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் தரக்கூடும்.
அதேபோல், பேட்டிங்கில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்க்க ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் காத்திருக்கின்றனர். 2-வது போட்டியில் பிரகாசிக்கத் தவறிய கேப்டன் ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோரிடமிருந்து இன்று உயர்மட்டத் திறன் வெளிப்படக்கூடும். இந்தப் போட்டியில் வென்றால் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும்.
எனவே, ஒருநாள் தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்திருக்க நியூஸிலாந்து அணி வீரர்கள் கடுமையாகப் போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
டேரில் மிட்செல், கேப்டன் மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோரிடமிருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும்.
அதேநேரத்தில் பந்துவீச்சில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சோதிக்க கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃப்பி, நேதன் ஸ்மித், மேத்யூ பிஷர் ஆகியோர் காத்திருக்கின்றனர்.