

டேவிட் வார்னர், கவாஜா
கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் சிக்கினார். இந்நிலையில், இது குறித்து தனது சுயசரிதை நூலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா எழுதியுள்ளார்.
‘Sabr’ என்ற தலைப்பு கொண்ட அந்த சுயசரிதை நூலில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். 2018-ல் நடந்த அந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் தொடர்பு இருந்தது என்பதுதான் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. இதில் ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராப்ட் ஆகியோர் மட்டும் பழிக்கு ஆளானதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கு டேவிட் வார்னர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். “நீங்கள் (கவாஜா) சொன்னது நூறு சதவீதம் உண்மை. இப்போது இதை அனைவரும் அறிவார்கள்.
8 ஆண்டுகளுக்கு பிறகு இது குறித்து கவாஜா ஏன் இப்போது வந்து பேச வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். புத்தகம் விற்க வேண்டும் என்பதற்காக அவர் இப்படி பேசுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், அது அப்படி அல்ல.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விசாரணை நடைபெற்ற விதம் அவசரகதியில் இருந்தது. இது குறித்து எங்களை தவிர மற்ற வீரர்களிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை. இதில் உஸ்மான் கவாஜாவும் அடங்குவார். அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பேன்கிராப்ட் இடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவரிடம் விசாரிக்கவில்லை.
யாரையும் புண்படுத்தும் வகையில் இதை நாங்கள் இப்போது சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் உள்ள பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையில் தான் எல்லோரது கவனமும் இருக்க வேண்டும். அதை விடுத்து கவாஜாவை கேள்வி கேட்பது ஏற்புடையது அல்ல” என்று வார்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது மகள்களிடம் விளக்கம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2018-ல் களத்தில் நடந்தது என்ன?
கடந்த 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட், பந்தில் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது.
இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கவுரவத்தை குலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்தும், டேவிட் வார்னர் துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினர்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நீண்ட காலத் தடை விதித்தது. தடை காலம் முடிந்து இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடினர். இந்நிலையில், இப்போது அது குறித்து கவாஜா தனது சுயசரிதையில் பேசி உள்ளார்.