

காலே: காலே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 165 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார், மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி இந்த தொடரின் முதல் ஆட்டம் காலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 372 ரன்கள் இலக்கை இலங்கை அணி விரட்டியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து அந்த அணி தடுமாறியது.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் சோனல் தினுஷா இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தனஞ்ஜெயா டி சில்வா, 59 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் அரை சதம் கடந்த நிரோஷன் திக்வெல்லா, 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் 84 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் வெளியேறினார் சோனல் தினுஷா. இவர் முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமாரா, கேஷாரா ஆகியோர் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 77.4 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதன் மூலம் இந்திய அணி 165 ரன்களில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 2, ஜடேஜா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் 167 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல், ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் அடுத்த ஆட்டம் வரும் 23-ம் தேதி கொழும்பில் தொடங்குகிறது.