

கொழும்பு: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி அதிகாரபூர்வமாக 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடினார்.
வெறும் 27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஒட்டுமொத்தமாக 40 பந்துகளில் 77 ரன்கள் (10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதம் இதுவாகும். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை இந்திய பவுலர்கள் ஆரம்பத்திலேயே தடுமாறச் செய்தனர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானைத் திணறடித்தனர்.
உஸ்மான் கான் (44 ரன்கள்) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா, பாண்டியா, அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் போது இரு அணிகளின் கேப்டன்களும் டாஸின் போது கைகுலுக்க மறுத்தனர். போட்டியின் முடிவில் ஆட்டநாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி இந்திய அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குரூப் ஏ பிரிவில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா, மொத்தம் 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.