

கொழும்பு: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வீசிய போது பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்துவிட்டார்.
இந்த ஆட்டத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்குவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என சூர்யகுமார் யாதவ் சொல்லி இருந்தார். இந்நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க சூர்யகுமார் மறுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஆர்.பிரமேதாசா கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. அபிஷேக் சர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுடன் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை மாதிரியான பல அணிகள் பங்குபெறும் தொடர்களில் மட்டும் ஆடுவதென்பதும், இருதரப்பு தொடர்களை தவிர்ப்பதும் இந்திய அரசின் கொள்கையாகவே வகுத்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது மூன்று முறை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடி இருந்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.