ஆஸ்திரேலிய பிக் பாஷ் டி20 லீகில் தனியார் முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு!

ஆஸ்திரேலிய பிக் பாஷ் டி20 லீகில் தனியார் முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு!
Updated on
2 min read

கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிக் பாஷ் லீக் (BBL) மற்றும் மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) போட்டிகளில் தனியார்முதலீட்டை அனுமதிக்க எடுத்துள்ள முடிவு, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, நீண்ட காலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை வியூக ரீதியாகவும் நிதி ரீதியாகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லக்கூடும் என்று கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் எச்சரித்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமையன்று, “சுய நிர்ணய” முறையை நடைமுறைப்படுத்தப் போவதாக உறுதி செய்தது. இதன்படி, தங்களது பிக் பாஷ் அணிகளில் தனியார் முதலீட்டை எப்போது, எவ்வாறு பெறுவது என்பதை ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக முடிவு செய்யலாம். இதன் கீழ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அந்த அணியின் 100 சதவீதப் பங்குகளுக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ஏலங்கள் வரவேற்கப்படுகின்றன. 2027-28 சீசனுக்கு முன்பாக புதிய உரிமையாளர்களை நியமிப்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த புதிய முறை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் போட்டியை முழுமையாக தனியார்மயமாக்கும் பரந்த திட்டத்துக்கு போதுமான ஆதரவைப் பெற கிரிக்கெட் ஆஸ்திரேலியா தவறியதைத் தொடர்ந்து உருவானது. விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியா ஆகிய மாநிலங்கள் போட்டியில் வெளிப்புற முதலீட்டை கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ளன. ஆனால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் இதற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குயின்ஸ்லாந்தும் முந்தைய திட்டத்தை நியூ சவுத் வேல்ஸுடன் இணைந்து நிராகரித்திருந்தது. இதனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிக சுதந்திரம் அளிக்கும் மாற்று முறையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளை நிர்வகிக்கும் கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ், அனைத்து தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையிலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருப்பதை தற்போது வெளிப்படையாக விமர்சித்துள்ளது.

நியுசவுத்வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:

“ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அனைத்து தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், பிக் பாஷ் லீக்குகளில் தனியார் முதலீட்டை அறிமுகப்படுத்தும் முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா எடுத்திருப்பது குறித்து கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் ஏமாற்றம் அடைந்துள்ளது.

இந்த முடிவு, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை வியூக ரீதியாகவும் நிதி ரீதியாகவும் மோசமான நிலைக்கு தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, அடித்தள அளவிலான கிரிக்கெட்டில் முதலீடு செய்வதற்கான எங்களது திறனில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

WBBL மற்றும் BBL ஆகிய இரு போட்டிகளின் எதிர்கால வளர்ச்சியிலும் கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளது. இரு லீக்குகளும், அவற்றில் விளையாடும் அனைத்து அணிகளும், கிரிக்கெட்டில் பங்கேற்பையும் ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரிப்பதில் சக்திவாய்ந்த காரணிகளாக உள்ளன.

ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டிக்கு அதிக பார்வையாளர்களையும், இரண்டாவது அதிக அளவிலான நேரடி பார்வையாளர்களையும் ஈர்க்கும் விளையாட்டு லீக் BBL ஆகும். கடந்த கோடைக்காலத்தில் பதிவான சாதனை கூட்டமும், மறக்க முடியாத பல தருணங்களும், குறிப்பாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மறக்க முடியாத சிட்னி ஸ்மாஷ் போட்டியும், பிக் பாஷ் முன்னெப்போதையும் விட வலுவாக இருப்பதை வெளிப்படுத்தின.

WBBL தொடர்ந்து உலகின் தலைசிறந்த வீராங்கனைகளை ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான சிறுவர், சிறுமியர்களை கிரிக்கெட் விளையாடுவதற்கும் ஊக்குவித்து வருகிறது.

பிக் பாஷ் அணிகள் மூலம் தற்போது உருவாகும் வருவாய் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் எவ்வாறு செலுத்தப்படுகிறது என்பதுதான். சிக்சர்ஸ் மற்றும் தண்டர் அணிகள் ஈட்டும் லாபம், கிரிக்கெட்டில் பங்கேற்பை அதிகரிக்கும் திட்டங்கள் மற்றும் வீரர் வளர்ச்சித் திட்டங்களில் மீண்டும் முதலீடு செய்யப்படுவதாக கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் கூறுகிறது. வெளிப்புற பங்குதாரர்கள் வந்தால், அந்த வருவாயில் ஒரு பகுதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நலன்களிலிருந்து வெளியே சென்றுவிடும்.” இவ்வாறு நியுசவுத்வேல்ஸ் கூறியுள்ளது..

இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் தங்களது கவலைகளைத் தெரிவித்ததாகவும், மாற்று வழிமுறையை முன்வைத்ததாகவும், மேலும் இந்தத் திட்டத்தில் உள்ள சாத்தியமான அபாயங்களை சுட்டிக்காட்டும் வகையில் வெளிப்புற ஆலோசனையையும் பெற்றதாகவும் கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பிக் பாஷ் டி20 லீகில் தனியார் முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு!
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜிவேரேவ், ரைபகினா கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in