

கபில்தேவ்சென்னை: சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
16 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இறுதிப் போட்டியில் நேற்று ஆர்எம்கே - எஸ்எஸ்என் கல்லூரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆர்எம்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகிலன் 37 ரன்கள் சேர்த்தார். 131 ரன்கள் இலக்குடன் பேட் செய்த எஸ்எஸ்என் கல்லூரி 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக வீரா 62, ஜித் 32 ரன்கள் சேர்த்தனர். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்எஸ்என் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், இயக்குநர் ஆர்.ஜோதி நாயுடு, கல்லூரியின் தலைவர் கே.ஏ.முகமது ஜூனைத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.