2027 உலகக் கோப்பை தகுதி நோக்கி இலங்கை - மே.இ.தீவுகள் மோதல்!

2027 உலகக் கோப்பை தகுதி நோக்கி இலங்கை - மே.இ.தீவுகள் மோதல்!
Updated on
2 min read

வெஸ்ட் இண்டீஸில் உள்ள சபைனா பார்க்கில் இன்று மே.இ.தீவுகள் அணி இலங்கை அணியை ஒருநாள் தொடர் முதல் போட்டியில் சந்திக்கிறது. 2027 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் இருப்பதால் மே.இ.தீவுகளுக்கு இது ஒரு முக்கியமான தொடர் ஆகும்.

ஒரு காலத்தில் இருதரப்பு ஒருநாள் தொடர்களுக்கு எந்தவித தாக்கமும் இல்லாது போனதால் பரிகாசத்திற்கு ஆளாகின.

ஆனால் இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இந்த தொடர் உலகக் கோப்பை தகுதி வாய்ப்புகளுடன் நேரடியாக தொடர்புடையதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெற உள்ளது. 2027 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் (நடத்தும் நாடுகளைத் தவிர) நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். அதற்கு கீழே உள்ள அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டியிருக்கும்.

தற்போது ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணி 6-வது இடத்திலும், மே.இ.தீவுகள் 9-வது இடத்திலும் உள்ளன. எனவே இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு சற்று சாதகமான நிலை

இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் விளையாடிய இலங்கை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தாலும், போட்டி அனுபவத்துடன் களமிறங்குகிறது. மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆறு மாதங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பு கடந்த பத்து ஆண்டுகளாக பலமுறை மாற்றப்பட்டு வந்துள்ளது. 2024 வரை கேப்டனாக இருந்த குசல் மெண்டிஸ் பின்னர் காரணம் கூறப்படாமல் நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவரிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2027 உலகக் கோப்பை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷேய் ஹோப் ஒருநாள் கிரிக்கெட்டில் 50.52 என்ற சிறப்பான சராசரியுடன் 19 சதங்கள் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராகவும் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். இந்த தொடரில் அவரது பங்களிப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்பிய மே.இ.தீவுகளின் ஷிம்ரன் ஹெட்மையர் இடம்பிடிப்பது உறுதியாகத் தெரிகிறது. இதனால் தொடக்க வீரர் அகீம் ஆகஸ்டே இடத்தை இழக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் குடகேஷ் மோட்டி முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

இலங்கை அணியில் சமீரா, தில்சன் மதுசங்கா மற்றும் ஈசன் மலிங்கா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களில் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பது தேர்வுக்குழுவுக்கு சவாலாக உள்ளது.

உத்தேச இலங்கை அணி (Playing XI)

கமில் மிஷாரா

பாதும் நிசாங்கா

குசால் மெண்டிஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்)

பவன் ரத்நாயக்க

சரித் அசலங்கா

ஜனித் லியனகே

கமிந்து மெண்டிஸ்

வனிந்து ஹசரங்கா

ஈஷான் மலிங்கா

துஷ்மந்த சமீரா

தில்ஷன் மதுஷங்கா

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி (Playing XI)

ஜான் கேம்ப்பெல்

ஷாய் ஹோப் (கேப்டன், விக்கெட் கீப்பர்)

கீசி கார்டி

ஷிம்ரன் ஹெட்மையர்

ஷெர்ஃபானே ரூதர்போர்டு

ராஸ்டன் சேஸ்

ஜஸ்டின் கிரீவ்ஸ்

மேத்யூ ஃபோர்ட்

ஷமார் ஸ்பிரிங்கர்

குடகேஷ் மோட்டி

ஜெய்டன் சீல்ஸ்

உலகக் கோப்பை தகுதி கணக்கில் முக்கியமான இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணி தரவரிசையில் முன்னேறும் வாய்ப்பைப் பெறும் என்பதால், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான மோதல் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2027 உலகக் கோப்பை தகுதி நோக்கி இலங்கை - மே.இ.தீவுகள் மோதல்!
குரூப் ‘ஏ’ - மெக்சிகோ, தென்கொரியா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா அணிகள் எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in