

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றில் நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், பெல்ஜியத்துடன் மோதியது. 30-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை அடித்தது. ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமால் வெளிப்புறமாக நகர்ந்து பெட்ரோ பொர்ரோவிடம் பந்தை தட்டிவிட்டார். பெட்ரோ பொர்ரோ அதை பெனால்டி பகுதிக்குள் தாழ்வான கிராஸாக டானி ஆல்மோவுக்கு அனுப்பினார்.
டானி ஆல்மோ முதல் தொடுதலிலேயே இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். அதை பெல்ஜியம் அணியின் கோல்கீப்பர் திபோ கோர்ட்வா தடுத்தார். ஆனால், அவரால் தடுக்கப்பட்ட பந்து நேராக ஃபாபியன் ரூயிஸிடம் செல்ல அவர், பந்தை கோல் வலையின் மேல் கார்னரை நோக்கி திணித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
41-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி பதிலடி கொடுத்தது. திமோதி காஸ்டாக்னே வலது பக்கத்தில் இருந்து அருமையான கிராஸை பாக்ஸ் பகுதிக்கு உள்ளே அனுப்ப அங்கு தயாராக இருந்த சார்லஸ் டி கெட்டேலாரே பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
71-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கோல் கீப்பரான திபோ கோர்ட்வா காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சென்னே லாம்மன்ஸ் களமிறக்கப்பட்டார். 88-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பாவ் குபார்ஸி தூரத்திலிருந்து அடித்த பந்தை பெல்ஜியம் அணியின் பதிலி கோல் கீப்பரான சென்னே லாம்மன்ஸ் சரியாக தடுக்கத் தவறினார். அவர் மீது பட்டு திரும்பி வந்த பந்தை அங்கே தயாராக இருந்த மிக்கேல் மெரினோ மின்னல் வேகத்தில் செயல்பட்டு பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
பெல்ஜியம் அணி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் சமன் செய்வதற்காக தீவிரமாகப் போராடியது. பதிலி வீரராக களமிறங்கிய முன்கள வீரர் ரொமேலு லுகாகு இந்த முயற்சியை முன்னெடுத்தார். காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் வீரர் டோகு இடது பக்கத்தில் மாற்று ஆட்டக்காரரான சேலேமேக்கர்ஸுக்கு பந்தை பாஸ் செய்தார். அவர் கோல்கீப்பரின் பக்கவாட்டு பகுதிக்கு சென்று பைலனில் இருந்து பந்தை கிராஸ் செய்தார். அப்போது ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் உனாய் சிமோன் தனது கோல் கோட்டை விட்டு வெளியேறி நடுவழியில் மாட்டிக்கொண்டார்.
காலியாக இருந்த கோல் கம்பத்துக்கு முன்னால் ரோமலு லுகாகு பந்திற்காகக் காத்திருந்தார். அப்போது சேலேமேக்கர்ஸ் தூக்கி அடித்த பந்தை ஸ்பெயின் அணியின் வீரர் அய்மெரிக் லபோர்ட், அசாத்தியமான முறையில் துள்ளி பந்தை இடைமறித்து தட்டிவிட்டார். இதனால் ஸ்பெயின் அணி 2-வது கோலை வாங்குவதில் இருந்து தப்பித்தது.
இதனால் பெல்ஜியம் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
மிக்கேல் மெரினோ, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகலுக்கு எதிராக இறுதிக்கட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கி கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்திருந்தார். கால் இறுதி ஆட்டத்திலும் அவர், 88-வது நிமிடத்தில் பதிலி வீரராக களமிறங்கிய நிலையில் வெற்றிக்கான கோலை அடித்து அசத்தி உள்ளார். அரை இறுதி சுற்றில் ஸ்பெயின் அணி வரும் 14-ம் தேதி பலம் வாய்ந்த பிரான்ஸுடன் மோதுகிறது.
ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த அணி 2-வது முறையாக அரை இறுதியில் விளையாட உள்ளது. 1950-ம் ஆண்டு ஸ்பெயின் அணி 4-வது இடம் பிடித்திருந்தது. எனினும் அப்போது அரை இறுதி சுற்று கிடையாது. அதற்கு மாற்றாக 4 அணிகள் இறுதிக்கட்டத்தில் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி இருந்தன.
37 போட்டிகளில்...
2023-ம் ஆண்டு மார்ச் முதல் ஸ்பெயின் அணி தொடர்ந்து 37 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. அதே வேளையில் தொடர்ந்து 18 போட்டிகளாகத் தோல்வியடையாமல் இருந்த பெல்ஜியம் அணியின் சாதனை ஓட்டம் ஸ்பெயின் அணிக்கு எதிரான தோல்வியால் முடிவுக்கு வந்தது.
கோல் வாங்காத சாதனை காலி
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி தனது முதல் ஐந்து ஆட்டங்களில் எதிரணிகளிடம் இருந்து ஒரு கோல் கூட வாங்காமல் இருந்தது. மேலும் கோல்கீப்பர் உனாய் சிமோன் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையிலிருந்து தொடர்ந்து 650 நிமிடங்கள் ஒரு கோல் கூட வாங்காமல் சாதனையை படைத்திருந்தார். இந்த சாதனை பெல்ஜியம் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் சார்லஸ் டி கெட்டேலாரே அடித்த கோல் காரணமாக முடிவுக்கு வந்தது.