

சென்னை: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டத்தில் 163 ஓவர்களில் 708 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்களும், குமார் குஷாக்ரா 101 ரன்களும், ஷிகார் மோகன் 85 ரன்களும் விளாசினர்.வைபவ் சூர்ய வன்ஷி 44, அனுகுல் ராய் 45, முகமது கவுனைன் குரேஷி 40 ரன்கள் சேர்த்தனர். தென் மண்டலம் அணி தரப்பில் ஸ்ரேயஸ் கோபால், ஷாமா மிலிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
3-வது நாளான நேற்று தென் மண்டலம் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ரிக்கி புயி ஒரு ரன் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்தில், குமார் குஷாக்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான நாராயணன் ஜெகதீசன் 42 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகார் மோகன் பந்தில் பேக்வேர்டு பாயிண்ட் திசையில் அபிமன்யூ ஈஸ்வரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷேக் ரஷீத் 27 ரன்களில் முகமது ஷமி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 4-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்த கேப்டன் திலக் வர்மா சீராக ரன்கள் குவித்தார். நிதானமாக பேட் செய்த தேவ்தத் படிக்கல் 104 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்தில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திரன் சமரன் 23, ஸ்ரேயஸ் கோபால் 26 ரன்களில் நடையை கட்டினர்.
3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் மண்டலம் அணி 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 133 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், ஷாமாமிலிந்த் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கிழக்கு மண்டலம் அணி தரப்பில் முகமது ஷமி, முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது கவுனைன் குரேஷி, ஷிகார் மோகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 466 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தென் மண்டலம் அணி. அந்த அணி பாலோ-ஆனை தவிர்க்க மேற்கொண்டு 265 ரன்கள் சேர்க்க வேண்டும்.