பிரீட்ஸ்கேயின் நிதான சதம், யான்செனின் அசத்தல் கேட்ச்: ஆஸி. சரிவில் தெ.ஆ. வெற்றி!

பிரீட்ஸ்கேயின் நிதான சதம், யான்செனின் அசத்தல் கேட்ச்: ஆஸி. சரிவில் தெ.ஆ. வெற்றி!
Updated on: 
2 min read

டர்பனில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்த தென் ஆப்பிரிக்க வெற்றியில் ஹைலைட் என்னவெனில், தென் ஆப்பிரிக்க 4-ம் நிலை வீரர் மேத்யூ பிரீட்ஸ்கேயின் 106 பந்து 112 ரன்கள் சதமும், கடைசியில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையாக நின்று கொண்டிருந்த ரென்ஷாவுக்கு டீப்பில் யான்சென் டைவ் அடித்து விரல் நுனியில் எடுத்த பிரமிக்க வைத்த கேட்சும்தான்.

சேசிங்கில் விக்கெட்டுகளைக் கொத்தாக விட்டதை எண்ணி ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டம் முடிந்தவுடன் வருந்தியிருக்க வேண்டும். அதுவும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது சரிவதென்பது வேதனை தரும் விஷயமே. அதுவும் கடைசி 9 விக்கெட்டுகளை 101 ரன்களுக்கு இழப்பதென்றால் எந்த வித சேசிங் திட்டமும் இல்லை என்றே புரிகிறது. விராட் கோலியாக இருந்தால் நிச்சயம் வென்று கொடுத்திருப்பார் என்றே நினைக்க வைக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. ஆனால், பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட் தேர்வால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தத் தோல்வியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடர், 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியைத் தயார்படுத்தும் முயற்சியாகக் கருதப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறுகையில், “நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். தென்னாப்பிரிக்க அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. ஆட்டம் சிறப்பாக இருந்தபோதிலும், நாங்கள் வெற்றிக்கு வெகுதூரம் பின்தங்கிவிட்டோம்” என்றார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள், ஆரம்ப 10 ஓவர்களில் அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும், 4-வது வீரராகக் களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கே, வழக்கமான கிரிக்கெட் ஷாட்களை ஆடி தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். பின்னர் அதிரடி பேட்ஸ்மேன் மார்கோ யான்சென் அவருடன் இணைந்தார்.

தனது 15-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பிரீட்ஸ்கே, 106 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். மறுமுனையில் யான்சென் 59 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை அவர் சமன் செய்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் அதிரடி தொடக்கத்தை அளித்தார். அவர் 36 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தேவையற்ற ஷாட்களை ஆடி தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் சரிவுக்கு தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான செயல்பாடும் முக்கியக் காரணமாக அமைந்தது.

ஆஸ்திரேலிய அணி 215 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, மேத்யூ ரென்ஷாவை (44 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்த மார்கோ யான்செனின் அற்புதமான டைவிங் ஒற்றைக்கைப் பிடிப்பு ஆட்டத்தின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியால் மீண்டு வர முடியவில்லை.

தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான கேஷவ் மகராஜ் 9.2 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், பியோர்ன் ஃபோர்டுயின் 8 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறப்பாகப் பந்து வீசினர்.

வெற்றிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில், “ஒட்டுமொத்தமாக நாங்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளோம். பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் போராடினர்.

இரு அணிகளின் இன்னிங்ஸ்களையும் பார்க்கும்போது, முதல் 10 ஓவர்களில் நாங்கள் நெருக்கடியை எதிர்கொண்டோம். இருப்பினும், அந்த ஆடுகளத்தில் போட்டித்தன்மை கொண்ட ஸ்கோரை எங்களால் எடுக்க முடிந்ததே வெற்றிக்குக் காரணம்” என்றார்.

பிரீட்ஸ்கேயின் நிதான சதம், யான்செனின் அசத்தல் கேட்ச்: ஆஸி. சரிவில் தெ.ஆ. வெற்றி!
வெண்கலம் வென்ற சீமா குமாரி முதல் ‘பதக்கப் பட்டியல்’ வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in