

லக்னோ: ஐபிஎல் போட்டியில் சேஸிங்கின்போது சதம் விளாசிய 4-வது வீரர் என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியின்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியின்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 51 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் போட்டி சேஸிங்கின்போது சதம் விளாசிய 4-வது கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விரேந்தர் சேவாக் (2011 டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 119), விராட் கோலி (2016-ல் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்டுக்கு எதிராக 108*), சஞ்சு சாம்சன் (2021-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 119) ஆகியோரும் இந்த பெருமையைப் பெற்றிருந்தனர். தற்போது அந்தப் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்துள்ளார்.
3-வது கேப்டன்: மேலும், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சதம் விளாசிய 3-வது கேப்டன் என்ற சாதனையையும் ஐயர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல்(2020-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 132*), ஆடம் கில்கிறைஸ்ட் (2011-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 106) ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.
7 ஆயிரம் ரன்கள்: அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டியின்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்ரேயஸ் ஐயர். இதுவரை 254 டி20 போட்டிகளில் விளையாடி 35.02 ரன்கள் சராசரியுடன் அவர் 7,076 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஸ்ரேயஸ் 55.33 சராசரியுடன் 498 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 5 அரை சதங்கள் அடங்கும்.