

அலெக்சாண்டர் ஜிவேரேவ்
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜிவேரேவ் முன்னேறியுள்ளார்.
ஆண்டின் 2-வது கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிஸ் நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. களிமண் தரையில் விளையாடப்படும் இந்த தொடர் வரும் ஜூன் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மதிப்புமிக்க இந்தத் தொடரில் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான அலெக்சாண்டர் ஜிவேரேவும், பிரான்ஸ் நாட்டின் பெஞ்சமின் போன்ஸியும் மோதினர். இதில் ஜிவேரேவ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பெஞ்சமினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் கரண் கச்சனோவ் 6-3, 7-6 (7/3), 6-0 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் நாட்டின் ஆர்தர் கியாவைத் தோற்கடித்தார்.செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் 7-6 (7/0), 6-3, 6-4 என்ற கணக்கில் ஹங்கேரியின் பேபியன் மரோசானை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த், கனடாவின் கேப்ரியல் டியாலோ மோதிய ஆட்டத்தில் டக்வொர்த் 6-3, 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது டியாலோ காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஜேம்ஸ் டக்வொர்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அர்ஜெண்டினாவின் தியாகோ திரான்டே 6-3, 7-6 (8/6), 6-7 (5/7), 6-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பப்லோ லியாமஸ் ரூஸைுயும், அர்ஜெண்டினாவின் மார்க்கோ டிரங்கெலிட்டி 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கியாரின் ஜாக்வெட்டையும் சாய்த்தனர்.
பெலிண்டா அபாரம்: மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ளவரும், சுவிட்சர்லாந்து வீராங்கனையுமான பெலிண்டா பென்கிக் 6-2, 6-3 என்ற நேர் செட் களில் ஆஸ்திரிய வீராங்கனை சின்ஜா கிராஸை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
போட்டித் தரவரிசையில் 32-வது இடத்தில் இருப்பவரான சீனாவின் வாங் ஜின்யு 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் லில்லி டேகரையும், அமெரிக்காவின் கேட்டி மெக்நல்லி 3-6, 7-6 (7/5), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டோமல்ஜானோவிக்கையும் வென்றனர்.
போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் 6-2, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயினின் ஒக்சானா செலக்மெட்டேவாவையும், அமெரிக்காவின் கேட்டி வோலிநெட்ஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிளாரா புரலையும், தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசு வீராங்கனை மேரி போஸ்கோவா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் லூசியா பிரான்ஜெட்டியையும் வீழ்த்தினர்.
ஜோகோவிச் சாதனை: 82-வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், பிரான்ஸின் கியோவானி பெட்ஷி பெர்ரிகார்டுடன் மோதினார்.
இதன்மூலம் 82-வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரோஜர் பெடரர், பெலிசியானோ லோபஸ் ஆகியோர் 81 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருந்தனர். தற்போது அந்த சாதனையை உடைத்து உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியவர் என்ற புதிய சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார். இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.