

டொராண்டோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பிஎம்ஓ பீல்டு மைதானத்தில் ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செனகல் - இராக் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியது செனகல் அணி.
ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் ஹபீப் டியாரா அபாரமாக கோல் அடிக்க செனகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 13-வது நிமிடத்தில் இராக் வீரர் ரெபின் சுலகாவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
ஒரு வீரர் குறைவாக இருந்த இராக் அணியின் பலவீனத்தை செனகல் அணி மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆட்டத்தின் பெரும்பகுதி நேரத்தை செனகல் வீரர்களே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இராக் அணியின் தற்காப்புக் கோட்டையைத் தகர்த்து செனகல் அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்தது.
இஸ்மாயிலா சர் 56-வது நிமிடத்திலும், பேப் குயே 59 மற்றும் 71-வது நிமிடங்களிலும் இலிமான் என்டியாயே 82-வது நிமிடத்திலும் கோல் அடிக்க செனகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் செனகல் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் நார்வேக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்திருந்தது.
‘ஐ’ பிரிவில் பிரான்ஸ், நார்வே அணிகள் முதல் இரு இடங்களை பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. தற்போது அந்த பிரிவில் செனகல் அணி 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மேலும் அந்த அணியின் கோல் வித்தியாசம் +2 ஆக உள்ளது. இதனால் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகளுள் ஒன்றாக செனகல் அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
ஜூலை 2-ம் தேதி நடைபெறும் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிக்ரோள்கிறது செனகல். நடப்பு தொடரில் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் நாக் அவுட் சுற்று வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.