

சென்னை: டிஎன்பிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இரு அணிகளுக்குமே இது கடைசி ஆட்டம். சேலம் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்து இருந்தது. அதே வேளையில் திருப்பூர் தமிழன்ஸ் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.
முதலில் பேட் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கார்த்திக் மணிகண்டன் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசினார். கேப்டன் அபிஷேக் 29, பூபதி குமார் 27, ஈஸ்வர் 26 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் மதிவாணன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் துஷார் ரஹேஜா 43 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசினார். அமித் சாத்விக் 16, முகமது அலி 10 ரன்கள் சேர்த்தனர். 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேலம் அணி ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது.