

ஜாம் நகர்: குஜராத்தின் ஜாம் நகர் அருகே ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வன்தாரா என்ற பெயரில் அடர்ந்த வனப்பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனையும் செயல்படுகிறது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, வன்தாராவை நிர்வகித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஜூலையில் நாகாலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஜாய்மோதி என்ற 53 வயது பெண் யானை அடித்துச் செல்லப்பட்டது.
உள்ளூர் மக்கள் யானையை மிகுந்த சிரமப்பட்டு மீட்டனர். ஆனால் பெண் யானைக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக வலது கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஜாய்மோதியின் நிலையை அறிந்த ஆனந்த் அம்பானி, அந்த யானைக்கு வன்தாரா விலங்குகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதன்படி சரக்கு விமானம் மூலம் அந்த யானை அண்மையில் வன்தாராவுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது வன்தாரா மருத்துவமனையில் ஜாய்மோதி யானைக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.