பேட்டை இறுக்கமா பிடிங்க சுதர்ஷன்! - மீண்டும் ஹிட்விக்கெட் ஆன சோகம்

பேட்டை இறுக்கமா பிடிங்க சுதர்ஷன்! - மீண்டும் ஹிட்விக்கெட் ஆன சோகம்
Updated on
2 min read

ஹிட்விக்கெட் எல்லாம் மிகவும் அரிதாகவே பேட்ஸ்மென்கள் அவுட் ஆகும் ஒரு விதமாகும், ஆனால் அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஒரே மாதிரியாகவே சாய் சுதர்ஷன் ஹிட்விக்கெட் ஆகியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் மட்டையை ஒழுங்காக இறுகப்பிடிக்காமல் தவறவிட்டு அவர் ஐபிஎல் தொடரில் 3வது முறையாக ஹிட் விக்கெட் ஆகியுள்ளார்.

அன்று ஆர்சிபிக்கு எதிராக ஜேக்கப் டஃபி பந்தை கட் ஆடுகிறேன் பேர்வழி என்று மட்டையைப் பறக்கவிட்டு ஸ்டம்பில் தாக்கியது. நேற்று ஒரு சின்ன சேஞ்ச் கட் ஆடாமல் ராஜஸ்தானின் பிரிஜேஷ் சர்மாவின் தாழ்வான ஃபுல்டாஸை ட்ரைவ் ஆடினார் ஃபாலோ த்ரூவில் பேட் மீண்டும் கையில் இருந்து எகிறி ஸ்டம்ப் மேல் விழுந்து ஹிட் விக்கெட் ஆனார்.

சாய் சுதர்ஷனால் நம்ப முடியவில்லை. உளப்பகுப்பாய்வில் இதற்கு 'repetition-compulsion' என்று கூறுவார்கள், அதாவது செய்ததையே திரும்பச் செய்ய ஆழ்மன உந்துதல் ஒன்று உண்டு. இந்த மீள்செய்கை ஏன் நடைபெறுகிறது என்றால் சாய்சுதர்ஷன் முன்பு என்ன செய்தோம் தவறு நிகழ்ந்தது என்பதை மறந்து விடுகிறார். செய்த தவற்றையும் அதனால் ஏற்படும் மன உணர்ச்சியையும் நினைவில் வைத்துக் கொண்டால்தான் திரும்பவும் செய்ய மாட்டோம், ஆகவே திரும்பச் செய்கிறார் என்றால் அவர் மறந்து விடுகிறார் என்பதே பொருள்.

உளப்பகுப்பாய்வு ரீதியாகக் கூற வேண்டுமெனில் சாய் சுதர்ஷனால் இப்படி அவுட் ஆவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் அதையே ரிபீட் செய்வதன் மூலம் அதில் தான் செயல்பூர்வமாக இருப்பதாகவும் அதைத் தான் ஆதிக்கம் செலுத்தி விட்டதாகவும் ஒரு நனவற்ற மனதிருப்திக்கு ஆட்படுகிறார் என்று தோன்றுகிறது.

சாய் சுதர்ஷன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம், “நான் இதற்கு வேறு முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும். கிரிப் தொழில்நுட்பத்தை நான் முயன்று பார்க்கவிருக்கிறேன். அதன் மூலம் சிலபந்துகளை ஆடி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவிருக்கிறேன். ஆனால் எனக்கு இப்போதைக்கு ஏன் இப்படி ஹிட் விக்கெட் நடக்கிறது என்ற கேள்விக்கான விடைகள் இல்லை என்பதை நேர்மையாகக் கூறிவிடுகிறேன். ” என்றார்.

மேலும் நகைச்சுவை தொனியுடன், “கடந்த போட்டியிலாவது மட்டை கையிலிருந்து நழுவி பிட்ச் ஆகி ஸ்டம்பைத் தாக்கியது, ராஜஸ்தானுக்கு எதிராக நேராகவே ஸ்டம்பைத் தாக்கிவிட்டேன்” என்றார்.

ஒருவேளை பெரிய பவுலராகி பேட்டர்களின் ஸ்டம்புகளைப் பெயர்க்க வேண்டும் என்ற அவரது ஆழ்மன ஆசை நிறைவேறாமல் போய் இப்போது பேட்டராக அந்த ஆசையை தானே ஹிட் விக்கெட் ஆகி ஆழ்மன ஆசை திரும்பத் திரும்பச் செய்தல் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறதோ என்னவோ!

சாய் சுதர்ஷனும், ஷுப்மன் கில்லும் நேற்று 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 220 ரன்களுக்குள் ராஜஸ்தான் ராயல்ஸைக் கட்டுப்படுத்த முடிந்தால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் உள்ளதாக ஷுப்மன் கில் போட்டிக்கு முன்பு கூறியதுதான் நிறைவேறியுள்ளது. ஆனால் என்னதான் சாய் சுதர்ஷன் பிரமாதமாக ஆடினாலும் ஷுப்மன் கில் சதம் கண்டாலும் 15 வயது வைபவ் சூரியவன்ஷி நேற்று அடித்த சில நம்ப முடியாத ஷாட்களை ஒப்பிடும்போது கில், சுதர்ஷன் இன்னிங்ஸ் ஒன்றும் கவர்ந்திழுப்பதாக இல்லை என்றே நம்மை நினைக்க வைக்கிறது.

அதுவும் ஜேசன் ஹோல்டரின் கடினமான லெந்த்தை டென்னிஸ் மட்டை போன்று கிரிக்கெட் மட்டையை மாற்றி சூரியவன்ஷி அடித்த சிக்சர்கள் உண்மையில் வர்ணனையிலிருந்த இயன் பிஷப்பை பெரிய அளவில் ஆச்சரியப்பட வைத்தது. ‘நான் இது மாதிரி ஒரு திகைப்பூட்டும் ஷாட்டைப் பார்த்ததில்லை’ என்று புகழ்ந்து தள்ளினார். அதேபோல் ரபாடாவை எக்ஸ்ட்ராகவரில் அடித்த சிக்ஸ், சிராஜை அடித்த பவுண்டரிகள் எல்லாமே வைபவ் ஒரு வேற்றுகிரக பேட்டர் என்ற பிரமிப்பையே ஏற்படுத்தி வருகிறது.

பேட்டை இறுக்கமா பிடிங்க சுதர்ஷன்! - மீண்டும் ஹிட்விக்கெட் ஆன சோகம்
ஐபிஎல் இறுதிப் போட்டி: பெங்களூருவில் கொண்டாட்டங்களுக்கு தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in