

பெங்களூரு: ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளதை அடுத்து, பெங்களூரு மாநகர காவல்துறை பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி முடிவடைந்து வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இறுதிப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் யாரும் சாலைகள் அல்லது பொது இடங்களில் கூட்டமாகத் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள், பப்கள், உணவகங்களுக்கு வெளியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் தற்காலிக எல்இடி திரைகளையோ அல்லது சுவர்களையோ அமைத்துப் போட்டியை ஒளிபரப்பக் கூடாது. சாலைகளை நோக்கி எல்இடி திரைகளை வைக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பொது இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கோ அல்லது ஆபத்தான பொருட்களைப் பயன்படுத்துவதற்கோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பைக் பேரணிகள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, வீதிகளில் சாகசங்கள் செய்வது, ஏர் ஹாரன்களைப் பயன்படுத்துவது மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுப்பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதோ அல்லது பிற அணி ரசிகர்களை வம்பிழுத்து சண்டையிடுவதோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வதந்திகளையோ, பிற அணிகளை அவமதிக்கும் வகையிலான வெறுப்புப் பதிவுகளையோ பகிரக் கூடாது என்று கூறியுள்ள பெங்களூரு போலீஸ், சட்டம் ஒழுங்கையும் பொது அமைதியையும் காப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.