

ஸ்ரேயஸ் ஐயர்
சென்னை: பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. அப்போது 20 ஓவர்களை வீசி முடிக்க பஞ்சாப் அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
ஐபிஎல் விதிமுறைகளின்படி, ஓர் அணி தங்களது 20 ஓவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் வீசி முடிக்க வேண்டும். ஆனால், சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த போட்டியில் பந்துவீச பஞ்சாப் அணி 2 மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக்கொண்டது. ஐபிஎல் நடத்தை விதிமுறை 2.22-ன் கீழ், ‘ஸ்லோ ஓவர் ரேட்’ எனப்படும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காத குற்றத்துக்காக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அணியின் மற்ற வீரர்களுக்கு (பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் உட்பட) தலா ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தின் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில் எது குறைவோ அதனை அபராதமாக செலுத்த வேண்டும். இந்த சீசனில் இது பஞ்சாப் அணியின் இரண்டாவது மெதுவான பந்து வீச்சு என்பதால் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.