

கோப்புப்படம்
சென்னை: சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே - வேலம்மாள் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வேலம்மாள் கல்லூரி அணி 19.5 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மிதுன் 48, ரோஹித் 44 ரன்கள் சேர்த்தனர். ஆர்எம்கே அணி தரப்பில் யோக பாரதி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
118 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்எம்கே அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுந்தரேசன் 60 ரன்கள் எடுத்தார். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்எம்கே அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
மற்ற கால் இறுதி ஆட்டங்களில் லலோயா கல்லூரி அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சவீதா கல்லூரியையும், ராஜலட்சுமி கல்லூரி 12 ரன்கள் வித்தியாசத்தில் சத்யபாமா பல்கலைக்கழக அணியையும், எஸ்எஸ்என் கல்லூரி அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் சாய்ராம் கல்லூரியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஆர்எம்கே - ராஜலட்சுமி அணிகளும் லயோலா - எஸ்எஸ்என் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.