

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்த பஞ்சாப் அணிக்கு கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முட்டுக்கட்டை போட்டிருந்தது.
இந்த ஆட்டத்தில் 223 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு பலவீனங்கள் வெளிப்பட்டன. நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு, அந்த அணியின் பேட்டிங்கிற்கு இணையாக சீரான தன்மையுடன் இல்லை. அணியின் ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை பல நேரங்களில் பந்துவீச்சுப் பிரிவின் பலவீனங்களை மறைத்தது.
வெற்றிகளை பெற்ற ஆட்டங்களில் கூட, பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சில நேரங்களில் எதிரணிகளைத் தாராளமாக ரன்கள் குவிக்க அனுமதித்தனர். சமீபத்திய தோல்வியானது அந்த பலவீனங்களை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.
இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட முடியாத அவர்களின் பலவீனம், பேட்ஸ்மேன்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி பெரிய இலக்குகளைத் துரத்த வேண்டிய நிலை உருவாகிறது. அதேவேளையில் முதலில் பேட் செய்தால் சராசரிக்கும் அதிகமான ரன்களை குவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் பஞ்சாப் அணி பந்துவீச்சில் இன்னும் துல்லியமான செயல்பாடுகளையும் தெளிவான திட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
பஞ்சாப் அணியின் ஃபீல்டிங்கும் கவலைக்குரியதாக மாறி உள்ளது. ஏராளமான கேட்சுகளைத் தவறவிடுவது மற்றும் ஃபீல்டிங்கில் செய்யும் தவறுகள் அணிக்கு பின்னடைவாக அமைகின்றன. இதனால் இந்த விஷயத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
அதேவேளையில் பேட்டிங் என்பது பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமாகத் தொடர்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர். நடுவரிசையில் கூப்பர் கானொலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவும் அல்லது கடினமான இலக்குகளைத் துரத்தி வெற்றி பெறவும் தேவையான மட்டைவீச்சை வழங்கி வருகின்றனர். இவர்கள் மீண்டும் ஒரு முறை எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக ஆர்சிபி அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையை குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தியிருந்தனர்.
ஆர்சிபி அணியை 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தி கட்டுப்கோப்பாக செயல்பட்டு இருந்தனர். பந்துகளின் நீளத்தை சரியாகக் கணித்து வீசுவதிலும், முக்கியமான நேரங்களில் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் முன்னேற்றம் கண்டிருந்தனர். இந்த வகையில் இன்றைய ஆட்டத்திலும் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கு குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் குஜராத் அணி பெரும்பாலும் சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகியோரை சார்ந்தே உள்ளது. வாஷிங்டன் சுந்தர் நடுவரிசையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். ஆனால் ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா போன்ற ஃபினிஷர்கள் இன்னும் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். ஆர்சிபி அணிக்கு எதிராக அவர், 4 ஓவர்களை வீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். மேலும் பீல்டிங்கில் 3 முக்கிய கேட்ச்களை எடுத்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஓர் உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும்.