

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில், வெளிப்புற விமர்சனங்களைப் புறக்கணித்துத் தனது பந்துவீச்சால் இந்திய அணியைக் கைதூக்கி விட்ட வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா 14 ஓவர்களை 47 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
3-வது நாள் ஆட்டத்துக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கூறியதாவது: ஊடகங்கள் மற்றும் வர்ணனையாளர்களின் விமர்சன பேச்சுகளை பொருட்படுத்தாமல், கவனச்சிதறல்களைக் கடந்து விளையாடியது பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதியை காட்டுகிறது.
ஒரு இளம் வீரராக இந்திய அணியில் காலடி எடுத்து வைக்கும்போது, கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்ற அழுத்தமும், கடுமையான ஆய்வுகளும் இருக்கும். ஆனால், பிரசித் கிருஷ்ணா அதையெல்லாம் தாண்டித் தனது விளையாட்டை ரசித்து விளையாடத் தொடங்கியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா தீவிரமாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர். போட்டிகளுக்கு முன்பாக எதிரணி வீரர்களைப் பற்றி அதிக அளவில் ஆராய்ச்சி செய்து திட்டமிடுவார். ஆடுகளத்தில் பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் இல்லாதபோதும், தனது கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றும் ஆற்றல் அவரிடம் உள்ளது. அவர், ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக உருவெடுத்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த 2025-ம் ஆண்டில் இங்கிலாந்து தொடரில் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். அணி நிர்வாகம் அவருக்குக் கொடுத்த கடினமான பணியைச் செய்யும்போது சில போட்டிகளில் ரன்கள் செல்லலாம். ஆனால், முழு அணியும் அவருக்குப் பின்னால் உறுதுணையாக நிற்கிறது.
கடந்த 2-3 ஆண்டுகளாக இத்தகைய சவாலான பணிகளை அவர், சிறப்பாகச் செய்து வருகிறார். தற்போது சரியான ஃபுல்லர் லென்த் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பந்துவீசும் திறனைப் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா, அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடும் ஆற்றல் படைத்தவர். இவ்வாறு மோர்னே மோர்கல் கூறினார்.